உத்தரபிரதேசம், கான்பூரில் பிரபல ரவுடியான விகாஸ் துபேவை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உ.பி. மாநில போலீசார் கைது செய்தனர். விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்துவரப்பட்டபோது, பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொலை வழக்குக்காக விகாஸ் துபேவைத் தேடி வந்த தனிப்படை போலீசார் குழு, அவரைக் கைது செய்வதற்காக கடந்த 3ஆம் தேதி கான்பூருக்கு சென்றது. போலீசார் வருவது முன்பே தெரிந்தததால் சாலைகளில் போலீஸ் வாகனங்கள் வர முடியாதபடி பெரிய கனரக வாகனங்களைச் சாலையில் வேறு எந்த வாகனமும் செல்ல முடியாதபடி குறுக்கே நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது போலீசார் அந்தச் சாலையின் குறுக்கே இருந்த வாகனத்தை நகர்த்தி வைத்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது சற்று உயரமான இடங்களில் இருந்த விகாஸ் துபே கூட்டாளிகள் போலீசாரை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர். சுற்றி வளைத்து சுட்டத்தில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.க்கள், 4 கான்ஸ்டபிள் என போலீசார் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து விகாஸ் துபே தலைமறைவானார்.
8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விகாஸ் துபேவை கைது செய்ய உத்திரப்பிரதேச போலீசார் தீவிரம் காட்டினர். காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் ஐ.பி.எஸ். அதிகாரியான கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி. தினேஷ்குமார் முக்கிய வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.
இதில் முதல் பணியாக விகாஸ் துபேவுக்கு உதவி செய்ததாக காவல்நிலைய துணை ஆய்வாளர், துணை ஆணையர்கள் இரண்டு பேர், தலைமை காவலர் போன்றோரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் போலீசார் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். விகாஸ் துபேயின் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் அவரது கூட்டாளிகள் பலர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். விகாஸ் துபேயின் உறவினர்கள் கண்காணிக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய கூட்டாளிகள், உறவினர்களை போலீசார் நெருங்கி விசாரணை மேற்கொண்டு விகாஸ் துபே இருக்கும் இடத்தை அடைந்தனர். மத்தியப்பிரதேசத்தில் கைது செய்தனர்.
ரவுடி விகாஸ் துபேயை பிடிக்க முக்கிய வியூகங்களை வகுத்து கொடுத்த தினேஷ்குமார் தமிழகத்தை சேர்ந்தவர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 2009ல் பணியில் சேர்ந்தார். 2013 முதல் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஷஹரன்பூர் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் ஜூன் 22ஆம் தேதி கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி.யாக பணியிடம் மாற்றப்பட்டார். கான்பூருக்கு பணியிடம் மாற்றப்பட்டத்தில் இருந்து போலீசார் எட்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்துள்ளார் தினேஷ்குமார். ரவுடி விகாஸ் துபேயை பிடிக்க முக்கிய வியூகங்களை வகுத்து கொடுத்த தினேஷ்குமாரை அம்மாநில காவல்துறையினர் பாராட்டி வருகின்றனர்.