Skip to main content

எனக்கு நடக்க இருந்த சாத்தான்குளச் சம்பவம்... தப்பித்தது எப்படி..? - பியுஷ் மனுஷ் பேச்சு!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

h


சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறையினர் தன்னை எப்படித் தாக்கினார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக பேசியதாவது, "சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காவல் துறையினரால் நான் கைது செய்யப்பட்டுச் சிறையில் தாக்குதலுக்கு உள்ளானேன். அதற்கான காரணத்தைத் இப்போது நான் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது நான் நின்று கொண்டிருக்கிற இடத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பாலம்தான் அந்தப் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பாலம் தற்போது எந்தக் கதியில் இருக்கிறது என்று பாருங்கள்.

 

நீங்களே பாருங்கள் வானம் தெரிகிறது. பின்பக்கம் இன்னும் எந்த வேலையும் ஆரம்பிக்கவில்லை. வேலை ஆரம்பிக்கப்பட்ட உடன் அப்படியே இந்தப் பாலம் நிற்கிறது. இந்தப் பாலம் அமைக்கப்பட குழிதோண்டிய போதே நாங்கள் சில கோரிக்கைகளை வைத்தோம். இந்த இடத்திற்கு அருகில் உள்ள மசூதிக்கு இடையே இணைத்துப் பால வேலைகளைத் துவங்க வேண்டும், அதுவரை ஒரு தற்காலிக சாலையை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கையை நாங்கள் முன் வைத்துப் போராட்டத்தை ஆரம்பித்தோம். அப்போது ரயில்வே அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் வந்து பார்த்து நீங்கள் சொல்வது சரிதான் என்று ஏற்றுக்கொண்டார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, நீ என்ன சொல்வது நாங்கள் என்ன கேட்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

 

என்னை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சேலம் சிறையில் அடைந்தார்கள். சிறையில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். பாதத்திலும், கன்னத்திலும் அடித்தார்கள். வெளியே தெரியாதபடி காவல்துறையினர் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். ஒரு வாரம் கழித்து என்னுடன் கைதானவர்கள் சிலருக்கு ஜாமின் கிடைத்து அவர்கள் வெளியே சென்றார்கள். எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. பிறகு என்னை ஜெயிலில் வைத்து கொன்று விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்தார்கள். அந்தத் தகவலை சிறையில் இருந்த சில காவலர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது என் மனைவியிடம் பேசுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அங்கே நடப்பவற்றை அனைத்தையும் என் மனைவியிடம் கூறினேன். அவர் உடனடியாக மீடியாவைச் சந்தித்து அதுபற்றி கூறினார்.

 

உடனடியாக இணையத்தளங்கள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் எனக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அதன் பிறகே அந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர்கள் பின்வாங்கினார்கள். நான் சிறையில் இருந்து வெளியே வந்தது சிறையில் நான் தாக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கில் சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தனை மாதங்கள் ஆகியும் அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பைக் கூட அவர்கள் மதிக்கவில்லை. இதுதான் அவர்களின் நடைமுறையாக இருந்து வருகிறது. இன்றைக்குச் சாத்தான் குளம் சம்பவத்திலும் அதுதான் நடைபெற்றது" என்றார்.