மலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்!!!
'டெங்கு' தமிழ்நாட்டையே தற்போது பயமுறுத்தி, பலர் உயிரை காவு வாங்கியிருக்கிறது. 'டெங்கு' போன்றே கொசுக்களால் பரவும் ஒரு கொடிய நோய் 'மலேரியா'. மலேரியா இருக்கிறதா என்று பரிசோதிக்க ஏற்கனவே சோதனை வழிமுறைகள் உள்ளன. பரிசோதனை மையங்களில் சோதிக்க இருநூறு ரூபாயிலிருந்து செலவும் ஆகிறது. மலேரியா இருக்கிறதா இல்லையா என்று தெரிய எட்டு மணிநேரம் வரை தாமதமாகும்.
இந்நிலையில் கொல்கத்தா ஐஇஎம் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் நிலஞ்ஜன் டா,தேவப்பிரியா பால் மற்றும் ஐஐஇஎஸ்டி பேராசிரியர்கள் இணைந்து மலேரியா பரிசோதிக்கும் செயலியை கண்டுபித்துள்ளனர். அதாவது, பரிசோதிக்க மையம் செல்லும் வரை தாமதிக்க வேண்டியதில்லை "இந்த செயலியில் பரிசோதிக்க ரூ 10 மட்டுமே செலவாகும் என்றும், 10 நொடிகளில் மலேரியா காய்ச்சலை கண்டு பிடிக்கும்" எனவும் கூறியுள்ளனர்.
முதலில் நுண்ணோக்கியுடன் கூடிய கருவியை மொபைலில் பொருத்த வேண்டும். பிறகு பாதிக்கப்பட்டவரின் ஒரு சொட்டு இரத்தத்தை அதில் விட வேண்டும். ஸ்மார்ட் மொபைலில் உள்ள கேமரா அதனை படம் பிடித்து செயலிக்கு அனுப்பும். பிறகு 10 நொடிகளில் மலேரியா இருக்கிறதா இல்லையா என்று காட்டும். தற்போது இந்த செயலியை ஏற்றுக்கொண்டு அதிகாரபூர்வமாக பரப்ப அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த செயலிக்கான நுண்ணோக்கியை தயாரிக்க ரூ 70 ஆகும். கிராமப்புர மக்களுக்கு சமூக சேவையாளர்கள் மூலம் இந்த முறையை அறிமுகப்படுத்தி, பயன்படுத்தி மலேரியாவின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று கூறியுள்ளனர் அந்த மாணவர்கள். அரசு சோம்பியிருந்தால் மக்களாவது விழித்து இது போன்ற பங்களிப்பைத் தருவது மகிழ்ச்சி. ஏற்கனவே கடந்த வருடம் ஐஐடி, கோரக்பூரைச் சேர்ந்த மாணவர்கள் இது போன்ற ஒரு செயலியை உருவாக்கினர். அதை அரசு பயன்படுத்திக்கொண்டதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பிரச்சனைகளை மறைப்பதிலேயே குறியாக இருக்கும் அரசுகள், இது போன்ற தீர்வுகளை கவனித்து, தகுதியானவையாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சந்தோஷ்