Skip to main content

இபிஎஸ்- ஓபிஎஸ்சுக்கு ஜாக்பாட்! சிறையில் சசிகலா அப்-செட்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

sasikala


சிறையிலுள்ள சசிகலா அப்-செட்டாகியிருப்பதாக பெங்களூரிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்ததும் தேர்தல் களத்தைச் சந்திக்க முடியாமல் போனாலும், நேரடி அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்பதே சசிகலாவின் திட்டமாக இருக்கிறது. அதற்கு இரட்டை இலை சின்னம் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா. 
                     

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் சசிகலா. அதில் தனக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், இம்மனு மீது கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புதான் சசிகலாவை அப்-செட்டாக்கியிருக்கிறது. 
                     

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என சசிகலா மற்றும் தினகரன் தரப்பும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பும் டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆனையத்திடம் உரிமை கோரின. தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள், இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்புக்கே இரட்டை இலை சொந்தம் எனத் தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்துதான் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார் சசிகலா. அதனைத்தான் தற்போது தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். 
                      

சசிகலா மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதில் ஆளும் கட்சியினரிடம் கரோனா பரபரப்பையும் மீறி ஒருவித உற்சாகம் தெறிக்கிறது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, ‘’இப்படிப்பட்ட தீர்ப்புதான் வரும் என நாங்கள் எதிர்பார்த்தோம். சசிகலாவின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு சாதகமான தீர்ப்பையோ அல்லது தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடையையோ கொடுத்திருந்தால் சட்டரீதியாகச் சில சிக்கல்களை இபிஎஸ்-ஓபிஎஸ் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். 
                   

அதாவது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் எனப் பல தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறது அதிமுக. சசிகலாவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் தேர்தலில் அதிமுக ஜெயித்த வெற்றி குறித்து சட்டரீதியாகப் பல கேள்விகள் எழுந்திருக்கும். அது, புதிதாகப் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். அதனால்தான், சசிகலா கோரிக்கை நிராகரிக்கப்படும் என்பதில் நிறைய நம்பிக்கை அதிமுக தலைமைக்கு இருந்தது. சின்னம் கிடைத்திருப்பதில் எடப்பாடி-ஓபிஎஸ்சுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது ‘’  எனச் சுட்டிக்காட்டுகிறார்கள். 
                       

http://onelink.to/nknapp

 

இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் சசிகலா தோல்வியடைந்திருப்பதால், அவர் சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அதிமுகவைச் சொந்தம் கொண்டாட முடியாது. எடப்பாடி- ஓபிஎஸ்சை நம்பியே அவர் அரசியல் செய்ய வேண்டும். இல்லையெனில், தினகரனின் அ.ம.மு.க.வை அவர் கையிலெடுக்க வேண்டும் எனவும் அதிமுக தரப்பில் எதிரொலிக்கின்றன!