Skip to main content

ஊடகங்கள் மீதான வழக்குகள் ரத்து: "எந்தெந்த வழக்குகளுக்கு பொருந்தும்..?" - அரசு குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம்

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

which cases on media houses will be dismissed under tn govt order

 

திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் மீது கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து, அதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.07.2021) பிறப்பித்திருந்தார். 

 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், "2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள்‌ தி இந்து நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌, டைம்ஸ்‌ ஆஃப்‌ இந்தியா நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 5 வழக்குகளும்‌, எக்கனாமிக்‌ டைம்ஸ்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 1 வழக்கும்‌, தினமலர்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 12 வழக்குகளும்‌, ஆனந்த விகடன்‌ வார இதழின்‌ ஆசிரியர்‌ மீது 9 வழக்குகளும்‌, ஜுனியர்‌ விகடன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 11 வழக்குகளும்‌, நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 23 வழக்குகளும்‌ முரசொலி நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 17 வழக்குகளும்‌ தினகரன்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌ போடப்பட்டிருந்தன. மேலும்‌, புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ்‌ 7 தொலைக்காட்சி, சத்யம்‌ தொலைக்காட்சி, கேப்டன்‌ தொலைக்காட்‌சி, என்‌.டி. டி.வி தொலைக்காட்சி, டைம்ஸ்‌ நவ் தொலைக்காட்சி மற்றும்‌ கலைஞர்‌ தொலைக்காட்சி ஆகியவற்றின்‌ ஆசிரியர்கள்‌ மீது தலா ஒரு வழக்கு வீதம்‌ 7 அவதூறு வழக்குகள்‌ போடப்பட்டிருந்தன.

 

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ “பத்திரிகையாளர்கள்‌ மீது பழிவாங்கும்‌ நோக்கத்தில்‌ போடப்பட்ட அவதூறு வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, பத்திரிகையாளர்கள்‌ மீது போடப்பட்ட 90 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று ஆணையிட்டுள்ளார்கள்‌'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

damodharan
                                                                                              வழக்கறிஞர் ஆ. தாமோதரன்

 

இந்நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பால் எந்தெந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆ. தாமோதரனிடம் கேட்டபோது,  "தமிழக அரசின் உத்தரவின் பேரில் தொடரப்படும் அவதூறு வழக்குகள் முதற்கட்டமாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்படும். அந்த  வழக்குகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்... 'அமர்வு  நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று சில பத்திரிகைகள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை கேட்கும் அல்லது வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை விடுக்கும். 

 

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கிற்குத் தடை விதித்தாலும், ரத்து செய்தாலும் கடந்தகால அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டதன் மூலம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட வழக்குகள், அதுதொடர்பாக கடந்த அரசு மேல்முறையீடு செய்ய இருந்த வழக்குகள் என  அனைத்து வழக்குகளுக்குமே இந்த உத்தரவு பொருந்துவதால் அவை அனைத்தும் ரத்தாகும்" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.