பா.ஜ.க.வை தொடர்ந்து எதிர்த்துவரும் கெஜ்ரிவாலை, மோடியின் பா.ஜ.க. அரசால் அடக்கமுடியவில்லை. இந்த நிலையில், அவரை முடக்க நினைக்கும் டெல்லி, அமலாக்கத்துறையை கீ கொடுத்து முடுக்கிவிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அவரை மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யும் நோக்கத்தில்தான், 2ஆம் தேதி விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே இதே விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா, சில மாதங்களுக்கு முன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அதே ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்.பி.யான சஞ்சய் சிங்கும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வரிசையில் இப்போது கெஜ்ரிவால் நிறுத்தப்பட்டிருக்கிறார். டெல்லியின் இந்த நடவடிக்கை, நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட உடனேயே, டெல்லி அமைச்சரான அதிஷி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தனது அரசியல் எதிரிகளை நேர்மையான முறையில் வெல்ல முடியாத பா.ஜ.க., இப்படியான குறுக்கு வழியைக் கையில் எடுக்கிறது என்றும், கெஜ்ரிவாலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் போன்ற டெல்லிக்கு ஆகாத தலைவர்களும் கைது செய்யப்படலாம் என்றும், இதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் பா.ஜ.க.வால் குறிவைக்கப்படலாம் என்றும் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுபற்றி தமிழக நிலவரத்தை விசாரித்தபோது, முதல்வர் ஸ்டாலினை குறிவைத்தும், அமலாக்கத்துறையின் மூவ்கள் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
அதற்கு ரூட்டாகத்தான் தமிழகத்தில் மணல் விவகாரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்திய அமலாக்கத்துறையினர், அடுத்து தமிழக அமைச்சரவையின் சீனியரும், நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகனைக் குறிவைத்து, ரகசியமாகக் காய்களை நகர்த்தினர். இதையறிந்த அமைச்சர் துரைமுருகன், “என் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. நான் எதையும் எதிர் கொள்ளத் தயாராகவே இருக்கேன்” என்ற ரீதியில் சொல்லத் தொடங்கினார்.
இப்போது துரைமுருகனை நூல் பிடித்துச் சென்று, முதல்வர் ஸ்டாலின் வரை குடைச்சல் கொடுக்க, அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, பல வகையிலும் மணல் மற்றும் கிராவல் விவகாரத்தைத் துழாவி வருகிறதாம் இ.டி.
இந்தியா கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. பயப்படுவதால், அதன் முக்கிய தலைவர்களை பா.ஜ.க. குறிவைப்பதாக இப்போது தி.மு.க.வினரும் புகாரை வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, தமிழக பா.ஜ.க.வினரோ, தங்கள் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்து வருவதால், ‘தி.மு.க.வை விடாதீர்கள்’ என்று டெல்லியிடம் முட்டி மோதி வருவதாகவும் சொல்லப்படுகிறது.