சேலத்திலிருந்து சென்னை வரை அமைக்கப்படும் பசுமை வழிச்சாலையில் எடப்பாடியின் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து லாபம் பார்ப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
அதற்கு முன்னுதாரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை எடப்பாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை உதாரணம் காட்டுகிறார்கள்.
கடந்த வருடம் நெடுஞ்சாலைத் துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம் சந்திரகாந்த் ராமலிங்கம், பி.சிவசுப்ரமணியம், பி.நாகராஜன், சேகர்ரெட்டி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களான ராமலிங்கம் கம்பெனி, எஸ்.பி.கே. கம்பெனி, எக்ஸ்பிரஸ் வே பிரைவேட் லிமிடெட், பாலாஜி டோல்வே, மதுரை பிரைவேட் லிமிடெட் ஆகிய கம்பெனிகளுக்குத்தான் கொடுக்கப் பட்டுள்ளன.
இதில் முதலில் வரும் சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர், எடப்பாடி குடும்பத்துக்கு சம்பந்தி வழியிலான உறவினர். எடப்பாடி பழனிசாமியின் மகன் திருமணம் செய்திருக்கும் திவ்யாவிற்கு சகோதரியான சரண்யாவின் கணவரின் சகோதரர் ஆவார். இந்த சந்திரகாந்த் ராமலிங்கம் ரொம்ப விவகாரமான பேர்வழி. கடந்த வருடம் நரேந்திரமோடி பண மதிப்பிழப்பு நட வடிக்கை மேற்கொள்ளும்போது பெங்களூரு நகரில் கோடிக்கணக்கான 2,000 ரூபாய் நோட்டுக ளுடன் சிக்கியவர். கூவத்தூரில் சசிகலாவிடம் எடப்பாடி, ""அம்மா என்னையும் மத்திய பா.ஜ.க. அரசு விட்டு வைக்கவில்லை. எனது உறவினர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் நிற்காமல் எனது சம்பந்தியான பி.சுப்ரமணியம், நம்ம அம்மா ஆட்சிக் காலத்தில் பெரியளவு கட்டுமான பணிகளையும் நெடுஞ்சாலை பணிகளையும் மேற்கொண்ட பெரிய காண்ட்ராக்டர். அவரது வீட்டில் வருமான வரித்துறையும் சி.பி.ஐ.யும் சேர்ந்து ரெய்டு நடத்தியிருக்கின்றன.
சந்திரகாந்த் ராமலிங்கம், பி.சிவசுப்ரமணியம் இருவர் மீதும் வருமானவரித்துறையும் சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்துவிட்டு, "நாங்கள் சொல்வதை கேளுங்கள். இல்லையேல் இந்த இருவரோடு சேர்ந்து அவர்களது பெண்ணை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக எனது மகன் மிதுனையும்- அவர்களது சம்பந்தி என்பதால் என்னையும் கைது செய்வேன்' என சி.பி.ஐ. மிரட்டுகிறது. அவர்களிட மிருந்த பணம் எல்லாம் நான் ஊழல் செய்து சம்பாதித்த பணம் என சொல்வோம் என தொல்லை தருகிறார்கள்'' என்று கதறியிருக்கிறார்.
பா.ஜ.க.வினர் எப்படி எடப்பாடியை அவர்களது வலையில் விழ வைக்கிறார்கள் என விளக்கி சொல்லும் அளவிற்கு சந்திரகாந்த்தும் சுப்ர மணியமும் புகழ்பெற்றவர்கள். இன்னொரு காண்ட் ராக்டரான பி.சுப்ரமணியம்தான் உலக வங்கி உதவி யுடன் எடப்பாடி அரசு நிறைவேற்ற திட்டமிட் டுள்ள திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் இடையிலான நான்கு வழி நெடுஞ்சாலைத் திட்டத் திற்கான டெண்டரில் ஒரேயொரு ஒப்பந்ததாரராக பங்கெடுத்தவர். சாலையில் சுங்கவரி வசூலாக 8 வரு டங்களுக்கு தலா 45 கோடி ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை நிறைவேற்ற 180 கோடி ரூபாயை மானியமாக மத்திய அரசு தருகிறது.
இப்படி ஏகப்பட்ட மானியங்கள் உள்ள நிலையில் தனது சம்பந்தி மட்டுமே ஒரேயொரு ஒப்பந்ததாரராக வரவைக்கப்பட்டதனால், முதலில் திட்டமிடப்பட்ட ரூ.407 கோடியிலிருந்து எந்த காரணமும் இல்லாமல் ரூ.720 கோடியாக திட்ட மதிப்பை உயர்த்தினார் எடப்பாடி. அதனால் அரசுக்கு 493 கோடி ரூபாய் நஷ்டம். (மானியம் 180 கோடி ரூபாய் சேர்த்து) அத்துடன் 8 வருடங் களுக்கு 360 கோடி ரூபாய் சுங்க வரி வசூல் வேறு வருகிறது. இப்படி போனால் சொந்தக்காசு ஒரு பைசா கூட செலவழிக்காமல் சாலையும் போட்டு திட்ட மதிப்பான 720 கோடியை எடப்பாடி தாரை வார்த்து விட்டார் என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள். இதேபோல் ஒட்டன்சத்தி ரம், தாராபுரம், அவினாசிபாளையம் ஆகிய ஊர்களுக்குள் செல்லும் நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்கும் திட்டத்தை சந்திரகாந்த் ராமலிங்கத்திற்கு கொடுத்துள்ளார் எடப்பாடி. ஒப்பந்ததாரரின் லாபத்தோடு சேர்த்து கணக்கிட்டால் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க 2.2 கோடி ரூபாய் போதும். வெறும் 70 கிலோமீட்டர் வரும் இந்த சாலையை அதிகபட்சம் 220 கோடி ரூபாயில் அமைக்க முடியும். ஆனால் எடப்பாடி இந்த சாலைக்கு 1515 கோடி ஒதுக்கியுள்ளார். மொத்தத்தில் 1315 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு அதிகமாக ஒதுக்கப்பட் டுள்ளது. இதில் மத்திய அரசு கொடுக்கும் 315 கோடி ரூபாய் மானியம், 8 வருடங்களில் வருடத்திற்கு 150 கோடியாக வரும் சுங்க கட்டணம் மட்டும் 1200 கோடி ரூபாய் வருகிறது. ஆக மொத்தம் 200 கோடி ரூபாய்க்கு சாலை போட்டு மொத்தம் 2830 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் சம்பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.
இதேபோல் மதுரை ரிங்ரோட்டை நான்கு வழியாக்கும் திட்டத்தில் சேகர்ரெட்டியை களமிறக்கி யுள்ளார் எடப்பாடி. எல்லாம் நினைத்தே பார்க்க முடி யாத கொள்ளை என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை யைச் சேர்ந்தவர்கள். இதில் சம்பந்தப்பட்டிருக்கும் எடப்பாடியின் சம்பந்தி குடும்பம் சாதாரண குடும் பம். இவர்களின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை. இவர்களது தொழில் காண்ட்ராக்ட் தான் என்றாலும் தொடக்க காலத்தில் வீட்டுவசதி வாரிய கட்டிடங்களை கட்டும் வேலைதான் செய்து வந்தார்கள். எடப்பாடியின் சம்பந்தி ஆனதும் இவர்கள் எட்டிய உயரம் அளவிட முடியாதது.
எம்.ஜி.ஆர். சமாதியில் ஜெ. ஆட்சியில் வைக்கப்பட்ட பறக்கும் பெண் குதிரை, நாமக்கல் கவிஞர் மாளிகை எனப்படும் தலைமைச் செயலக கட்டிடம், சட்டமன்ற வைரவிழா நினைவு வளைவு, தமிழகம் முழுவதும் அரசு கட்டிடங்கள் என புகுந்து விளையாடும் எடப்பாடியின் சம்பந்தி குடும்பம், இன்று சசிகலா குடும்பத்துடன் மோதும் அளவிற்கு பணபலத்தில் வலுப்பெற்ற குடும்பமாகி விட்டது. இதில் சந்திரகாந்த் ராமலிங்கமும் மிதுனும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தவர்கள் என்கிற வகையில் உறவினர்கள். எடப்பாடி பழனிச் சாமி, அவரது மகன் மிதுன், எடப்பாடி சம்பந்தி சந்திரகாந்த் ராமலிங்கம் ஆகியோர் நெடுஞ் சாலைத்துறையில் கொள்ளையடிக்கிறார்கள் என முதலில் குரல் கொடுத்தவர் தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல்.
"தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் நெடுஞ்சாலை திட்டங்களில் 5,000 கோடி ரூபாய் கொள்ளையடித்ததற்கான ஆவணம் எங்களிடம் உள்ளது. அதை விரைவில் வெளி யிடுவேன்'' என அசராமல் சவால் விடுகிறார் தி.மு.க. அமைப்புச் செயலாளரான வழக்கறிஞர் ஆர். எஸ்.பாரதி. ""எடப்பாடி பழனிசாமி ஜெ.வின் ஆட்சிக் காலத்திலேயே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர். அவரும் அவரது உற வினர்களும் நெடுஞ்சாலைத்துறை யைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள். எனவே ஜெ.வை வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு என வழக்கு பதிவு செய்து விசாரித்தது போல் எடப்பாடியும் விசாரிக்கப்பட வேண்டும்'' என லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்திருக் கிறார். இந்நிலையில், சென்னை-சேலம் இடையே வெறும் 50 கிலோமீட்டர் பயண தூரத்தை குறைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் லட்சக்கணக்கான மரங்களையும் வெட்டி எடப்பாடி சாலை அமைக்க திட்டமிட்டுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி எடப்பாடியின் நெருங்கிய நண்பர்.
""இந்த சாலையை மத்திய அரசுக்கு நெருக்க மான நிறுவனங்கள் அமைக்க வேண்டாம். எனது சொந்த பந்தங்களை வைத்து நானே அமைக்கிறேன். அதற்கு எழும் எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறேன் என கட்காரியுடன் இணக்கமாக எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால்தான் 10 ஆயிரம் கோடிக்கு பசுமை வழிச்சாலை வந்தது'' என்கிறார்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள்.
இந்த பசுமை வழிச்சாலை அமைப்பு ஏகப் பட்ட புதிய விவகாரங்களை கிளப்பும் என்கிறார் கள் ஊழல் தடுப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.