Skip to main content

"வாக்கு அரசியல் என்பது அரசியலின் பாலபாடம்... அதைச் செய்ய வேண்டாம் என்பது எந்த வகையில் நியாயம்.." - மருத்துவர் காந்தராஜ் கேள்வி!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

hk

 

தமிழக முதல்வர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்று திட்டப் பணிகளை ஆய்வு செய்தல், புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது திடீரென பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளுதல், மாநகர பேருந்துகளில் ஏறி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிதல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டாலும், சிலர் இதனை வாக்கு அரசியல் என்ற வளையத்திற்குள் கொண்டு செல்கிறார்கள், முதலமைச்சரின் ஆய்வு தொடர்பாகச் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளோம், அந்த கருத்துக்கள் வருமாறு...

 

இது தொடர்பாக மருத்துவர் காந்தராஜ் கூறும்போது, " அரசியலே வாக்குக்காகச் செய்யப்படுவது தானே, நல்லது ஒருவர் எதற்காகச் செய்கிறார், இதைக் காட்டி திரும்பவும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தானே! நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி உங்களுக்கு நல்லது செய்தால் 50 பேர் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதுதானே அரசியலின் தார்மீகப்பாடம். அதைச் செய்ய வேண்டாம் என்பது, அதைக் குறை சொல்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மக்கள் எல்லாம் ஆட்சியாளர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள், வாக்குகள் மூலம் தானே, அப்புறம் வாக்கு அரசியல் செய்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம். வாக்கு வாங்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசியல் தலைவர்கள் செய்வார்கள், அதைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. நல்லது செய்தால் அதை ஏன் ஆராய வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே, அதில் ஏன் தயக்கம். இவரின் திடீர் ஆய்வு அடுத்தவர்களையும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பாராட்ட வேண்டும். என்று கூறினார்..

 

இது தொடர்பாக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறும்போது, " வாக்கு அரசியலைச் செய்துதான் ஆக வேண்டும், பாஜக போன்ற மதவாதிகள் தமிழகத்தில் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் அதை நாம் செய்துதான் ஆகவேண்டும். நாங்கள் வாக்கு அரசியல் செய்வோம், அவர்கள் நாக்கு அரசியல் மட்டும் தான் செய்வார்கள். அவர்களால் நல்லது செய்வதை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே எதையாவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள், அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எல்லாம் வாக்கு வாங்க அரசியல் செய்கிறோம், வெற்றி பெறுகிறோம், இவர்களால் அதையும் செய்ய முடியாது, வேறு ஏதாவது செய்ய முடியுமா என்றால் அதுவும் கூட முடியாது. வெற்று கூச்சலைத் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை" என்றார்.