இரு நாடுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொலை தொடர்பு சாதனமாக இருந்தது "தூதுப் புறாக்கள்". கண்டம் விட்டு கண்டம் போய் தகவல்களை கொடுத்து விட்டு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் ஆற்றல் பெற்றது ஹோமர் வகை புறாக்கள். அதன் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் கூட இன்று வரை தூதுப் புறாக்கள் பந்தய புறாக்களாக வளர்த்து மகிழ்கின்றனர் பலர். எந்த ஊரில் கொண்டு போய் விட்டாலும் தன் நுண்ணறிவை பயன்படுத்தி தன்னை வளர்த்த இடத்திற்கே வந்து சேர்ந்து விடுகிறது புறாக்கள்.
1918 - 1919 காலக் கட்டத்தில் உலகப் போரில் செமி என்கிற புறா தனது ஒற்றைக் காலை இழந்து சுமார் 2 ஆயிரம் போர் வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த புறாக்கள் இன்று தூது செல்ல பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அதனை வளர்த்து இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காகவே பல கிளப்கள் உள்ளது.
சமீபத்தில் டிஆர்பிஎஃப் அமைப்பின் மூலம் டெல்லியில் உள்ள ஜான்சியில் நடந்த புறாப் பந்தயத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை, சேலம் உள்பட பல மாவட்ட கிளப்களில் இருந்து நூற்றுக்கணக்கான புறாக்கள் கலந்து கொண்டது. இதில் தஞ்சை மாவட்ட கிளப்பில் மூலம் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரெத்தினக்கோட்டை முகமது சாதிக் என்பவரின் சுரையா தியாப்ஜி என்ற புறா 18 நாட்களில் 1700 வான்வழி கி மீ தூரத்தை (தரைவழி 2100 கி.மீ) கடந்து இந்தியாவில் 4 வது இடத்தையும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இது குறித்து சாதனை புறா சுரையா தியாப்ஜியின் உரிமையாளர் ரெத்தினக்கோட்டை முகமது சாதிக் நம்மிடம் பேசுகையில், "நான் 25 வருடமாக புறாக்கள் வளர்க்கிறேன். புறாக்களை வீட்டில் வளர்ப்பது தரித்திரம் என்பார்கள். என்னிடமே பலர் சொன்னார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து பறவைகளையும் போல சுதந்திரமாக தான் வளர்க்கிறேன். 'பரன்பரை லாப்ட்' என்ற பெயரில் பரம்பரையை நினைவூட்டும் வகையில் பறவைகளின் தங்குமிடம் அமைத்திருக்கிறேன்.
என்னுடைய புறாக்களுக்கு மறைந்த தேசத் தலைவர்களின் பெயர்களை நினைவு கூறும் வகையில் தான் பெயர்கள் வைத்திருக்கிறேன். இதற்கு முன்பு சுபாஷ் சந்திர போஸ் என்ற புறா 9.45 மணி நேரத்தில் 600 கி.மீ (வான்வழி தூரம்) தூரத்தை கடந்தது. இதே போல பல சாதனைகளை என்னுடைய புறாக்கள் சாதித்துள்ளது. இப்போது வந்த சாதித்துள்ள சுரையா தியாப்ஜி என்ற புறா நமது தேசிய கொடி வடிவமைத்தவர் பெயரை வைத்திருக்கிறேன். இந்த புறா தான் தேசிய அளவில் சாதனை படைத்திருக்கிறது.
புறாக்களை வளர்க்க அதற்கென பிரத்யேக உணவுகளை வாங்கி கொடுப்பதில்லை. நம்ம ஊரில் விளையும் சிறு, பெருந் தானியங்களையும், வழக்கமான தண்ணீரும் தான் கொடுக்கிறோம். பிரத்யேக உணவு கொடுக்கும் போது இலக்கை எட்டும் போட்டிக்கு அனுப்பினால் தான் முன்பு சாப்பிட்ட உணவைத் தேடி அலையும். ஆனால் வழக்கமான சிறுதானியம் கொடுப்பதால் பந்தய காலத்தில் இரை தேடி அலையாமல் கிடைத்த இரையை உண்டு கிடைத்த இடத்தில் ஓய்வெடுத்து இலக்கை நோக்கி விரைவாக வந்துவிடும். அப்படித் தான் இந்த சுரையா தியாப்ஜி திட்டமிட்ட பயண நேரம் 21 நாட்கள் என்பதை குறைத்து குறிப்பிட்ட இலக்கான ரெத்தினக்கோட்டைக்கு 18 நாட்களிலேயே வந்து சாதித்துள்ளது.
அதே நேரம் பிரத்யேக உணவு கொடுத்து பழக்கி இருந்தால் அந்த உணவை தேடி திசைமாறி சென்று இருக்கும். போட்டி நடத்தும் நிர்வாகம் தனி ஆப் மூலமே அனைத்தையும் கண்காணிக்கிறது. எல்லையிலிருந்து புறா பயணம் தொடங்கும் முன்பு காலில் ஒரு வளையம் அணிவித்து வெளியே ஒரு குறியீடு, உள்ளே ஒரு ரகசிய குறியீடு வைத்திருப்பார்கள். அதே போல சிறகிலும் குறியீடுகள் எழுதி வைத்திருப்பார்கள். முதலில் ஒரே மூச்சாக 300 வான்வழி கி மீ தூரம் பறக்கும் புறா பிறகு தொலைவை நுண்ணறிந்து உடலை சரி செய்து கொண்டு பயண தூரத்தை குறைத்துக் கொள்ளும். ஒரு நாள் முழுவதும் உணவு, தண்ணீர் இல்லாமல் பறக்கும் அடுத்தடுத்த நாட்களில் கிடைக்கும் உணவு, தண்ணீர் உண்பதுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓய்வெடுத்து பிறகு பறக்கும்.
தான் வளர்ந்த இடம் வந்தடைவதே இலக்கு. அங்கு வந்ததும் புறா சிறகில் உள்ள குறியீடு, கால் வளையத்தில் உள்பக்கம் வெளிப்பக்கம் உள்ள குறியீடுகள், புறாவின் நிறம் போன்றவற்றை படங்கள், வீடியோ எடுத்து போட்டி நிர்வாகத்திற்கும், அதற்கான ஆப்பிலும் அனுப்பிய பிறகே தேர்வு செய்வார்கள். ஒரு இடத்தில் குஞ்சாக வளர்க்கப்படும் புறா வேறு எந்த தேசத்தில் கொண்டு போய் விட்டாலும் பறந்து வந்துவிடும். அந்த அளவிற்கு நுண்ணறிவு அதிகம். சாதனைப் புறாக்களை ஆசைப்பட்டு வாங்கிட்டு போனாலும் கூட எத்தனை ஆண்டுகள் ஆனால் பழைய இடத்திற்கே வந்து விடும். இந்த புறாக்களின் பிறப்பிடம் இந்தியா தான் என்றாலும் இங்கிருந்து வெளிநாடு போய் அங்கிருந்து நாம் வாங்கி வருகிறோம். அழிந்த இனங்களை மீட்கும் முயற்சியே என் புறா வளர்ப்பு" என்றார்.