கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் பாலாஜி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் விருத்தாசலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த, ஆத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். லிப்ட் கொடுத்த பாலாஜி, ஜெயக்குமாருடன் ஒன்றாக, விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஏனாதிமேடு பகுதியை வந்தடைந்ததும், கார்குடல் செல்வதாக கூறி, இறங்கி கொள்ளுங்கள் என பாலாஜி கூறியுள்ளார். அதனால் வாகனத்தை விட்டு இறங்கிய ஜெயக்குமார் நடந்து செல்ல முற்படும் போது, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை பாலாஜி பறிக்க முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்த ஜெயக்குமார், இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டு பாலாஜியை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார். உடனடியாக விருத்தாச்சலம் புறவழிச் சாலைக்கு வந்த ஜெயக்குமாரின் நண்பர்கள் பாலாஜியை தர்ம அடி அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் விருத்தாச்சலம் காவல்துறையினரிடம் பாலாஜியை ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்து, மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பாலாஜி தொடர்ச்சியாக ஆன்லைன் Application மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாகவும், அதனை திருப்பிக் கட்ட முடியாததால், பணம் கொடுத்த ஆன்லைன் நிறுவனம் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்ததால் அப்பணத்தை திருப்பி கட்டுவதற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகிறது. தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நூதன முறையில் ஆன்லைன் அப்ளிகேஷன் மூலமாக பணம் கொடுத்து, மிரட்டுவதும், புகைப்படத்தை சித்திரிப்பு செய்து இணையதளத்தில் அனுப்புவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.