Skip to main content

அனிதாக்களுக்கு இனியேனும் அநியாயம் செய்யாதீர்கள்...

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
அனிதாக்களுக்கு இனியேனும் அநியாயம் செய்யாதீர்கள்...

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் காலனியில் தான் இருக்கிறது பதினேழே வயதான அனிதாவின் சரிந்த கூரை வீடு. சரிந்த கூரை வீடு எனச் சொல்லப்படுவதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் அனிதா என இந்த சமூகம் முன்னரே முத்திரை குத்தியதால் தான். 



அனிதாவின் உலகம் அவளின் சரிந்த கூரை வீட்டைப் போல சிறியதாக இல்லை.  அது பெரும் கானகத்தைப் போல விரிந்தே இருந்தது. மூட்டை தூக்கி பொழைப்பு நடத்தும் அனிதாவின் அப்பா சண்முகம்தான் அவளின் கானகத்திற்கு வழி போட்டார்.  அவ்வழியை செப்பனிடும் வேலைகளை அனிதாவின் நான்கு அண்ணன்கள் பார்த்துக் கொண்டார்கள். அரசு பள்ளியில் படித்த அனிதா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அந்த ஊரில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். 

அந்த நாளில் அனிதாவின் கானகத்தில் அவள் ஒரு பெரும்பறவையாக பறக்கத் தொடங்கியிருந்தாள். கூட அவளின் அப்பாவும், அண்ணன்களும் அந்த கானகத்தில் சிறுபறவைகளாக பறக்கத் தொடங்கியிருந்தார்கள். அனிதாவின் அம்மாவான ஆனந்தி மட்டும் நோயுற்ற உடலை வாங்கி அரசு ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடந்தபோதுதான் அனிதாவும் அவளின் அப்பாவும், அண்ணன்களும் சிறகுகளை கைவிட்டு கானகத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்குள் அடக்கமானார்கள்.

அம்மா ஆனந்தியின் நோயுற்ற உடலின் மீது மருத்துவர்களால் பாயும் கத்திகளை அனிதா பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். அம்மாவை கடவுளாய் இருக்கும் மருத்துவர்கள் காப்பாற்ற வேண்டுமென அவள் வேண்டிக்கொண்டே இருந்தாள். 

ஆனால், அவளின் வேண்டுதலை அற்பமாய் கடவுள்கள் கைவிட்டார். அனிதாவின் அம்மா அனிதாவின் கானகத்திற்குள் இருந்து வானத்திற்குள் ஒரு பறவையாய் பறந்து சேர்ந்தபோது அனிதாவின் கானக உலகம் கருந்திரையால் மூடப்பட்டது.

அனிதா அப்போதுதான் ஒரு முடிவெடுத்தாள். மருத்துவர்களின் கையில் இருக்கும்  கத்திகள் மனித உயிர்களை காப்பாற்ற உதவும் என அவளின் நம்பிக்கை அம்மா விசயத்தில் தவறிவிட்டபோதிலும் அவள் மருத்துவராய் ஆக வேண்டுமென முடிவெடுத்தாள்.

பன்னிரெண்டாவது தேர்வில் 1200-க்கு  1176 மதிப்பெண்கள் பெற்று அனிதா தேர்ச்சி அடைந்தபோது  அவளின் கானகத்தை மூடியிருந்த கருந்திரை கொஞ்சமாக விலகியது. மீண்டும் ஒருப் பெரும் பறவையாக அந்த கானகத்தில் இருந்து அவளும் அவளது சுற்றமும் பறக்கத் தொடங்கியிருந்தார்கள்.

மருத்துவர்களின் கத்தியை எடுக்க அவள் கொண்ட ஆர்வம் அலாதியானது.அனிதா என்கிற அவள் யாதொன்றும் செய்யவில்லைதான் இந்த சமூகத்திற்கு. ஆனால், அவள் இந்த சமூகத்திற்கு என்னென்ன செய்யவேண்டும் என நினைத்தாளோ அதை செய்யக்கூடாது என்று நீட் தேர்வு என்ற பெயரில் இந்த அரசாங்கம் நினைத்தது. அதன்படியே அனிதாவுக்கு எதிராக.. மன்னிக்கவும்... இந்த சமுதாயத்திற்கு எதிராக அரசு களமிறங்கியது. சுப்ரீம்கோர்ட்டும் அதற்கு துணைநின்றது. அதை அவளால் தாங்க முடியவில்லை. அழுதார்கள் அனிதாக்கள்.

கட் ஆப் மதிப்பெண் 196.50– ஐக் கொண்ட அனிதாவுக்கு மட்டுமில்லை. ஒரு சாராருக்கு மட்டுமே நீட் தேர்வு நீட்டாய் இருக்கும் என அனிதாக்கள் படிப்படியாய் தெரிந்துகொண்டார்கள்.



அவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் நீட் தேர்வை நீக்கி பன்னிரெண்டாவது மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள் . ஆனாலும் அனிதாக்களின் குரல்கள்  சுப்ரீம்கோர்ட் என்கிற அம்பலத்தில் ஏறவில்லை. 

நீட் தேர்வில் கலந்து கொண்டார்கள் அனிதாக்கள். 1200–க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவால் நீட் தேர்வு நியமித்த 700-க்கு  86 மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. அரசாங்கம் அவளின் மருத்துவக்கத்திகளை எடுத்து ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளியின் வயிற்றினுள் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டது.
 
ஒரு பெருந்துயரம் அவளின் உலகை பேயாய் உருக்கொண்டு தின்ன ஆரம்பித்து விட்டதாகவே அவள் உணர்ந்தாள். அம்மா ஆனந்தி வேறு வானுக்குள் நின்று தன் அழுகையை காண்பதாகவே அவள் நெக்குருகினாள். அம்மா தன் அழுகையை காணத்  தாங்காது கை நீட்டி தன்னை ஆறுதல் படுத்த அழைப்பதாகவே அவள் உணர்ந்திருக்கக் கூடும்.

அவளின் கானகத்தில் ஒரு பெரும்பறவையாய் பறந்து கொண்டிருந்த அவள் சரிந்த தன் கூரை வீட்டுக்குள் தன் சிறகுகளை ஒடித்துக்கொண்டாள். விட்டத்தில் கயிறொன்றை வட்ட வடிவில் கட்டி தன் தலையை அதனுள் திணித்துக்கொண்டு அவள் அம்மாவை நினைத்தே அவள் ஏறியிருந்த நாற்காலியை அவள் தட்டியிருக்க வேண்டும். அவ்வளவுதான் அனிதா அந்தக் கயிறில் உயிரற்ற பறவையாய் தொங்கிக் கொண்டிருந்தாள்.

தன்னால் மட்டுமல்ல... அனிதாக்களால் ஏழுமலை, ஏழுகடல் தாண்டி கிளியின் வயிற்றினுள் அரசு ஒளித்து வைத்திருக்கும் மருத்துவ கத்திகளை ஒரு போதும் எடுக்க முடியாது.. என்பதை, அனிதா திரும்பவும் ஒரு பறவையாய் மாறியே வானுக்குள் சொல்லி விட்டுப்போய் விட்டாள்.

அதை வானில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஒரு முக்கிய மனிதனும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறான் நாட்டு மக்கள் மீது எந்த அக்கறையுமில்லாமல்.

அரியலூர் மட்டுமல்ல அனிதாவுக்காக இப்போது தமிழ்நாடு அழுகிறது . போராட்டங்கள், கடை அடைப்புகள், சாலை மறியல் என நீட் தேர்வினால் உயிரைத் துறந்த அனிதாவுக்காக நாட்டு மக்கள் நடுத்தெருவில் நின்றாலும் நாடாள்பவர்கள் தெருப்பக்கம் வர மாட்டார்கள்.



ஆனால் ஓன்று.. அனிதாவின் கானகம் எரிந்து கொண்டிருக்கிறது. அனிதாக்கள் எரிகிறார்கள். அனிதாவின் அப்பாவும், அவளின் அண்ணன்களும் எரிகிறார்கள்... எரிக்க வேண்டியவர்களை என்றேனும் ஒரு நாள் எரிப்போம் என்றே. தயவுசெய்து இனியேனும் அனிதாக்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள் நாடாள்பவர்களே...

- அருள்குமார்

சார்ந்த செய்திகள்