Skip to main content

வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்!

என் பணம், எங்கப்பா பணம், உன் வீட்டு காசா... 10 ஆயிரம் ரூபாய்க்கு நான் வாங்கிய வெடிகளை இன்னைக்கு பூரா வெடிச்சுக்கிட்டே இருப்பேன்... உனக்கு காது வலிக்குதுன்னா, புகை வருதுன்னா நீ போய்யா... எங்கியாவது என தீபாவளியை கொண்டாடுவோர் மத்தியில், வாயில்லா ஜீவன்களான வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளிக்கு பட்டாசுகளை புறக்கணித்துள்ளனர் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள். 

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஊனத்தூர் கிராமத்தில் ஊருக்கு தெற்கில், கம்பபெருமாள் கோயிலருகில் இருக்கும் ஓடையில் நூறு வயதான மருத மரத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் குடியிருந்து வருகின்றது. அரை கிலோ எடையிலிருந்து இரண்டு கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான வௌவால் வரை இந்த மரத்தில் வசித்து வருகின்றது.

ஆடி முதல் ஐப்பசி மாதம் வரை இருக்கும் மழை காலத்தில் மரத்தில் வளரும் கிளைகளை எல்லாம் கடித்து கீழே தள்ளி விட்டு தங்களின் இறக்கைகள் மீது சூரிய ஒளி படும் வகையில் மரத்தை மொட்டையாக வைத்திருக்கும் இந்த வௌவால்கள், தை மாதத்திற்கு பிறகு மரத்தில் வளரும் கிளைகளை கடித்து தள்ளாமல் அப்படியே வளரவிட்டுவிடும். பங்குனி, சித்திரை மாத வெய்யலில் தங்கள் மீது சூரிய ஒளி படாமல் இருப்பதற்காக பருவம் அறிந்து இலை, கிளைகளை கடித்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறது.

ஆனால், டெங்கு கொசுக்கடியில் இருந்து தானும், தன் குழந்தைகளும்  தப்பித்துக் கொள்ள ஆரறிவு உள்ள மனிதனுக்கு கொசுவலை வாங்கி கட்டிலை சுற்றிலும் கட்டத் தெரியவில்லை. கொசுக்கடியில் சிக்கி தினமும் நூற்றுக்கணக்கில் செத்து மடிகிறார்கள். பல ஆயிரம் போர் தங்கள் சம்பாதித்து வைத்திருந்த சொத்தை இழந்து கொண்டுள்ளார்கள்.



மனிதனை விடவும் புத்திக் கூர்மையுடன் இருக்கும் இந்த வௌவால்களை பாதுகாப்பதற்காக ஊனத்தூரில் உள்ள மக்கள் தீபாவளியன்று பட்டாசு கூட வெடிப்பதில்லை என்பதுதான் மற்றொரு சிறப்பு.

“வௌவால்களின் முக்கிய உணவான பழங்கள் இந்தப் பகுதியில் அதிகமாக இல்லாத போதிலும், மாலை ஆறு மணிக்கெல்லாம் இங்கிருந்து கூட்டம் கூட்டமாக கிளம்பும் வௌவால்கள், இரவு முழுவதும் இரை தேடிவிட்டு அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணிக்குள்ளாக இந்த மரத்துக்கு வந்துவிடும். காலங்காலமாக இந்த மரத்தில் வௌவால் கூட்டம் வசித்து வருகிறது. 

கடந்த இரண்டு ஆண்டாக மழையில்லாமல் போனதால், போதிய அளவு இனப்பெருக்கமும் நடைபெறவில்லை, கொஞ்சம் வௌவால்கள் இரையில்லாமல் உயிரிழந்து விட்டது. அதனால், இப்போது கொஞ்சம் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும் கொஞ்சம் நாளில் மருத மரத்துக்கு பக்கத்தில் உள்ள அரச மரத்திலும் வௌவால்கள் நிரம்பிவிடும். இந்த வௌவால் கூட்டம் பயமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இங்குள்ள மக்கள் யாருமே தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க மாட்டோம். யாராவது சின்ன பசங்க வெடிக்கவேண்டும் என்று விரும்பினாலும், ஊருக்கு வடக்குப்பக்கம் போய்தான் வெடிப்பார்கள். இந்த பகுதிக்கு வேட்டைகாரர்களையும் வரவிடமாட்டோம்...” என்கிறார் பெருமாள்கோயில் காட்டை சேர்ந்த பிரபு.

நான் பொறந்தது, வளர்ந்தது, வாக்கப்பட்டது எல்லாமே இந்த ஊர்தான். நான் சின்ன புள்ளையா இருந்த காலத்தில் இருந்து இங்கே வௌவால் வாழ்ந்துக்கிட்டு தான் இருக்குது. பகல் பூராவும் கீச் மூச்சுன்னு சத்தம் போட்டுகிட்டுதான் இருக்கும். இராத்திரிக்கு எல்லாம் வெளியிலே மேச்சலுக்கு போயிட்டு காலையில் தான் வரும், வடக்கே இருக்கும் மலங்காட்டில் (கல்வராயன் மலை) இருக்கும் பழத்தையெல்லாம் தின்னுட்டு வந்து மருத மரத்தில் தொங்கிக்கிட்டு விதையை துப்பித்துப்பி கீழேபோடும். கீழே விழுந்து காஞ்சு கிடக்கும் விதையெல்லாம் ஆடி மாசம் மழை பேஞ்சு ஓடையில் தண்ணி வரும்போது அந்த விதை தண்ணியிலே அடுச்சுகிட்டுப் போய் கடலுலே சேர வரைக்கும். ஆத்தோரம் இருக்கும் நெலத்தில் ஒதுங்கி நிக்கும். அப்போ மண்ணுலே பட்டு விதை எல்லாம்  மொளைச்சு மரமாகும். 



இப்போவெல்லாம் வௌவாலும் கொறஞ்சு போச்சு, மரமும் கொறஞ்சு போச்சு, மழையும் கொறஞ்சு போச்சு... எழுபது வருசமா இந்த எடத்துலதான் இருக்கிறேன். ஒரு தப்புத்தண்டா நடந்ததில்லை, நாலு நாளுக்கு முன்னே என் கழுத்துலே இருந்த அஞ்சு பவுன் காரையை உன்னை மாதிரி வந்த ஒரு பையன் புடுங்கிகிட்டு போயிட்டான். காசுக்காக மனுஷன் எல்லாம் மிருகமா நடந்துக்கிறாங்க... இனிமேல், இந்த பூமியை யார் வந்து காப்பாத்துவாங்கன்னு தெரியலை சாமி....” என்றார் முருகன்கோயில் காட்டை சேர்ந்த தில்லையம்மாள்.

இதுபோலவே, நாமக்கல் மாவட்டம், நமகிரிபேட்டை ஒன்றியம், வேப்பிலைப்பட்டி, கருத்தராஜாபாளையம் போன்ற ஊர்களிலும், அங்கு உள்ள மரங்களில் வாழும் வௌவால்கள் பயந்து போய்விடக் கூடாது என்பதற்காக தீபாவளியன்று பொதுமக்கள் யாரும் பட்டாசு வெடிக்க மாட்டார்கள்.

நாகரீகமும், கல்வியறிவும் இல்லாத அந்த கிராமத்து மக்களிடம் இருக்கும் உயிரினக்களையும், இயற்கையும் காக்கும் பண்பாடும், இயற்கையோடு அமைத்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், அதைப்பற்றி படித்து அறிந்து, பட்டம் பெற்று வாழ்ந்து வரும் நகர மக்களிடம் இல்லை என்பதுதான் வேதனை.

கட்டுரை. படங்கள்:- பெ.சிவசுப்ரமணியம்.

சார்ந்த செய்திகள்