Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

Discovery of inscriptions revealing security work contract in Pudukkottai district

 

 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி (செவ்வலூர் கிராமம்), மேலப்பனையூர், தேவர்மலை ஆகிய ஊர்களில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன், மணிசேகரன்,  பீர்முகமது, சை.மஸ்தான்பகுருதீன்,  மு.முத்துக்குமார்,  பா.ரமேஷ்குமார், ஆறுமுகம்  ஆகியோரால்  மூன்று ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

 
இக்கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது; புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயற்பட்டு வந்துள்ளனர். தமது நிர்வாகத்திற்குட்பட்ட மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப்பொருட்களுக்கும் உரிய பாதுகாவல் பணியை செய்ய வேண்டியிருந்ததன் பொருட்டு நம்பிக்கை மிகுந்தவர்களை அப்பணியில் நியமித்து வந்துள்ளனர். அது பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் தேவர்மலை, பனையூர், மலையடிப்பட்டி ஆகிய ஊர்களில் எமது குழுவினரால் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
 

ஆசிரியம் கல்வெட்டுகள்:
 

ஆசிரியம் கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் அஞ்சினான் புகலிடம் வழங்கியதை குறிப்பாதாகவே கருதி வருகின்றனர். பாதுகாப்பு வழங்குதல் என்ற பொருளுடன் தொடர்பு படுத்தி ஆஸ்ரயம் என்ற என்ற சமற்கிருத வேர்ச்சொல்லிலுருந்து பெறப்பட்ட சொல்லாடலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
 

Discovery of inscriptions revealing security work contract in Pudukkottai district

 

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67  கல்வெட்டுகளில் ஆசிரியம், ஆசுரியம், அஸ்ரீயம், ஆஸ்ரயம் , ஆச்ரயம் என பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும் எமது ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது. 3  கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.

     
எனவே இதனை சமஸ்கிருத சொல் என்ற கருத்து  பொருந்தாது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன. ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுகின்றன. ஆசிரியப்பா என்பது ஒரு கருத்தை சுருங்கச்சொல்லுதல் என்ற பொருள்படும்படி பாவகை என வரையறுக்கப்படுகிறது. தமிழ் இலக்கிய அகராதிகள்  ஆசிரியர் என்பதை  ஆசு + இரியர்  அதாவது   பிழைகளை நீக்குபவர் அல்லது குற்றம் களைபவர் என்று பொருளை சுட்டுகின்றன.

 

Discovery of inscriptions revealing security work contract in Pudukkottai district


இதே அடிப்படையில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசிரியம் என்பதையும் பொருத்தி பார்க்கும்போது திருட்டு, கொள்ளை  நடைபெறாமல் காத்து, பொதுப்பொருட்களுக்கு அரணாக இருத்தல் என்று எச்செயலிலும் வாக்கு தவறாமை, தவறு நடைபெறாமல் காக்கும் பொறுப்புடையவருக்கான உடன்படிக்கையேற்பு  என்று பொருள் கொள்ளலாம்.

 
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆசிரியம் கல்வெட்டுகள்:

 
மேலப்பனையூர் கிராமத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்  ஸ்வஸ்தி  ஸ்ரீ மது இராயப்பர் மகந் குமாரந் பாகுய நாயக்கர்க்குப்பனையூர் குளமங்கலம் ஆசிரியம்”  ராயப்பர் என்பாரின் மகன் பாகுய நாயக்கர் என்பார் பனையூர் குலமங்கலத்ததை நிர்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கிறது இக்கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையில் பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்ததாக கணிக்க முடிகிறது. இன்றளவும் பனையூர் கிராமத்தில் ஆசிரியம் குடும்பம் என்று குடும்பத்தினரை அழைக்கும் வழக்கம் இருப்பதை கள ஆய்வில் அறிந்துகொண்டோம். 

 

Discovery of inscriptions revealing security work contract in Pudukkottai district


பொன்னமராவதி வட்டம், செவலூர் சேகரம் மலையடிப்பட்டி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு வட புறம் தனியார் தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியவில்லை என்றாலும் கடைசிப்பகுதியில் “பொன்னமராபதிநாட்டு வடபற்றுச் செவ்வலூர் ஏவவிருத்தரையர்கள் ஆசுரியம்” அதாவது பொன்னமராவதி நாட்டின் வடப்பற்றான செவ்வலூர் ஏவ்விருத்தரையர்கள் எனும் குழுவினர் கல்வெட்டு நட்டுவிக்கப்பட்டுள்ள பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருந்ததை அறிவிக்கிறது. கல்வெட்டு கி.பி 16 நூற்றாண்டைச்சேர்ந்ததாக  கணிக்க முடிகிறது.

   
திருமயம் வட்டம் மல்லாங்குடி ஊராட்சிக்குட்பட்ட தேவர் மலை வடபுறம் உள்ள வயல்வெளியில் கடந்த 2016 ஆண்டு கரு.ராஜேந்திரன் அவர்களால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில் “ஸ்வஸ்தி ஸ்ரீதேவமலையில் நாயக்கர் நம்பி அகமறமாணிக்கர் ஆசிரியம்” என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. தேவர்மலையின் இறையான நாயக்கர் நம்பிகளுக்கான கோவில்  நிர்வாக உரிமையை அகமறமாணிக்கர் என்பார் பெற்றிருந்ததை குறிக்கும் வகையில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் பொ.ஆ பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்தாக கணிக்க முடிகிறது  என்றார்.

 

புதிய கல்வெட்டின் முக்கியத்துவம் குறித்து கரு.ராசேந்திரன் கூறியதாவது; குடிமக்கள்  விவசாய விளை பொருட்கள்,  கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கான பாதுகாப்பு ,  வணிக பொருட்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பு வழங்குபவர் பற்றிய அறிவிப்பு, நீர்நிலைகளை ஒப்படைத்தையும், குளம், நீர் வரத்து வாய்க்கால்கள், கலிங்குகளை சீர் செய்தவருக்கும், நாட்டவர்களிடையே அமைதியை நிலை நாட்டியமைக்காகவும் மரியாதை செய்யும் பொருட்டும், ஊரணியை ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு விட்டுக்கொடுக்கவும், புரவரி வசூலித்தல் , வணிகக்குழுக்களின் முகாம்களாக இருந்த இடங்களை அஞ்சினான் புகலிடமாக அறிவித்தல், தேவதான நிலங்களை காக்கும் பொறுப்பு, கோவிலுக்கு நெல் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கான அறிவிப்பு, குளத்தை பணி செய்து கொடுத்தவர் இன்னார் என்பதற்கான அறிவிப்பு, கோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய அறிவிப்பு  என ஒரு குறிப்பிட்ட நபரிடமோ அல்லது ஊரார்களிடமோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியம் கல்வெட்டுகள் ஊரின் மையத்திலோ அல்லது மக்கள் எளிதில் அணுகும் இடத்திலோ வைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. மேற்சொன்ன கருத்துக்களை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூன்றும் ஊரையோ கோவிலையோ  நிர்வகிக்கும் பொறுப்பு வகிப்பவரை அறிவிக்கும் பொருட்டு நடப்பட்டுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.