கடந்த 30-ஆம் தேதி இரவு 100-ஐ டயல் செய்து அவசர போலீசை அழைத்த அந்தப் பெண்குரல்... "என் பேர் லதா, சொந்த ஊர் பெங்களூரு. என் மகளை கடத்திய கும்பல், உமராபாத்ல அடைச்சி வச்சிருக்கு. மீட்கப்போன என்னை அடிக்கறாங்க'' என்றபடி அழுதது.
இந்தத் தகவல் திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாருக்கு போனது. அவர் ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தத்துக்குத் தகவல் கொடுத்தார். இதைக்கேட்டு அதிர்ந்து போன டி.எஸ்.பி., ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நிர்மலா மற்றும் பெண் காவலர்களுடன் அந்த பெண்குரல் குறிப்பிட்டிருந்த ஸ்பாட்டுக்கு விரைந்தார். அங்கே இரண்டு பெண்கள் கடுமையாக மோதிக்கொண்டிருக்க, ஒரு இளம்பெண் அப்பாவியாக நின்றுகொண்டிருந்தார். மூவரையும் காவல்நிலையத்திற்கு அள்ளிக்கொண்டு வந்தனர். அவர்களை விசாரித்தபோதுதான் கிறுகிறு தகவல்கள் வெளிவந்தன.
அந்தப் பெண்கள் காவல் நிலையத்துக்கு வந்த சில நிமிடங்களிலேயே "அ.தி.மு.க. பெண் பிரமுகர் விபச்சார வழக்கில் கைது'’என தொலைக்காட்சி ஊடகங்களில் பரபரசெய்தி வெளியாகத் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து விசாரணைக் காக்கிகளிடம் நாம் விசாரித்தபோது...
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர்தான் புகார் சொல்லி மாட்டிக்கொண்டிருக்கும் லதா. அவரது 17 வயது மகள் கத்ரினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்துள்ளார். அந்த பியூட்டி பார்லர் நடத்தும் லட்சுமியிடம், கத்ரினாவின் தாய் லதா, "எனக்கு 35 வயதாகிவிட்டது. போதிய வருமானம் இல்லை. அதனால் என் மகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு'ன்னு கேட்டிருக்கிறார். "உன் பணப் பிரச்சினையை நான் போக்கறேன், உன் மகளை என்னுடன் வேலூரில் இருக்கும் என் பியூட்டி பார்லருக்கு அனுப்பு. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா தினம் 4 ஆயிரம் ரூபாய் உன் மகளுக்குத் தருகிறேன்' என்று ஆசை காட்டியிருக்கிறார் லட்சுமி.
அப்படி என்ன அட்ஜெஸ்ட் செய்கிற வேலை என்பது தெரிந்தே, தன் மகளை லட்சுமியோடு வேலூருக்கு அனுப்பியுள்ளார் லதா.
அவர், கத்ரினாவை வேலூர்க்கு அழைத்து வந்து சிலநாள் வைத்திருந்தவர், பின்னர் அ.தி.மு.க. வேலூர் மேற்கு (திருப்பத்தூர் மாவட்டம்) மாவட்ட பேரணாம்பட்டு ஒன்றிய அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், உமராபாத் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பிரேமாவிடம் ஒப்படைத்திருக்கிறார். பெண்களை வைத்து இளமை வியாபாரம் செய்துவந்த பிரேமா, தொழிலுக்காகவே வாடகைக்கு எடுத்து வைத்துள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை தங்க வைத்துள்ளார். இவர் தன் தொழில் பார்ட்னரான வாணியம்பாடியைச் சேர்ந்த யேஜாஸ் அகமத் என்கிற புரோக்கர் மூலமாக ஏலகிரி, திருப்பத்தூர், ஏற்காடு என கஸ்டமர்களுக்கு அந்த இளம்பெண்ணை அனுப்பி ஏகத்துக்கும் சம்பாதித்துள்ளார். தினமும் 4 ஆயிரம் வீதம் லதா கணக்குக்கு 20 நாட்கள் வரை பணம் போடப்பட்டிருக்கிறது. அதன்பின் கடந்த 10 நாட்களாக லதாவின் கணக்குக்கு பணம் போகவில்லை. போன்செய்து கேட்டபோது பிரேமாவிடம் இருந்து சரியான பதில் இல்லையாம். இதனால் நேரில் கிளம்பிவந்த லதா, பிரேமாவிடம், "வரவேண்டிய பாக்கிப் பணத்தைக் கொடு... இல்லைன்னா என் மகளை என்னோடு உடனே அனுப்பு' என்று கேட்க, வாக்குவாதம் சண்டையாகி, இருவரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் 100-க்கு லதா போன் செய்து எங்களை அழைத்திருக்கிறார்.
லதாவின் மகளிடம் மகளிர் காக்கிகள் விசாரித்தபோது, "தினமும் 2 பேரிடம் என்னை அனுப்பினார்கள். என்னால் தாங்கமுடியாமல் உடன்பட மறுத்தப்ப, என்னைக் கடுமையாக அடிச்சாங்க...' என்று அழுதுவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே செல்போனில் வீடியோ கேம் விளையாட ஆரம்பித்துவிட்டார். குழந்தைத்தனம் மாறாத அந்த பெண்ணை, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு திருப்பத்தூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறோம்''’என்றார்கள் விரிவாகவே.
ஆம்பூர் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்த போது, "உமராபாத்தை சேர்ந்த பிரேமாவை கடலூர் மாவட்டம் வடலூரில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர் கணவரோட வாழாமல், 15 வருஷத்துக்கு முன்பே, தாய்வீடு திரும்பி, சிலர் மூலம் இந்தத் தொழிலில் இறங்கி இருக்கிறார். வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்களையும் அழைத்துவந்து தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். இந்த பிரேமாவின் கிளுகிளு சரித்திரம் எங்க கட்சியில் இருக்கும் எல்லாருக்குமே தெரியும். எங்க கட்சியில் இருக்கும் மேலிடத்தில் இருக்கும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் அவர்கள் விரும்பியபடியெல்லாம் இவர்தான் சப்ளை செய்துவந்தார். லோக்கல் போலீசின் ஆசியும் இவருக்கு உண்டு. இப்போது அ.ம.மு.க.வில் இருக்கும் அந்த நடிகை, 3 வருஷத்துக்கு முன்னாடி உமராபாத்துக்கு தன் ஆளுங்களோட வந்து, ஏதோ ஒரு பெண் விவகாரத்துக்காக இந்த பிரேமாவ அடிச்சி உதைச்சிது. இப்படிப்பட்டவர்களுக்குதான் கட்சியில் செல்வாக்கு கூடுது. பிரேமா இப்ப பகிரங்கமா கைதானதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்காங்க'' என்றார்கள் புன்னகையோடு.
"ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரி, பணக்காரர்களின் சொர்க்கபுரியாக மாறிவிட்டது. இங்குள்ள தங்கும் விடுதிகள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிரம்பி வழிகின்றன. பெங்களூரு, சென்னையை சேர்ந்த நடுத்தர வயதை தாண்டிய தொழிலதிபர்கள் தங்கள் உடல் தேவைக்காக சிறிய வயது இளம்பெண்களையே கேட்கின்றனர்.
அதற்காகவே அகமத் போன்ற புரோக்கர்கள் அங்குள்ள ஹோட்டல்களோடு டச்சில் இருக்கின்றனர். ஒரு இரவுக்கு 25 ஆயிரம் வரை வாங்குபவர்கள், இளம்பெண்களுக்கு அதிகபட்சம் 5 ஆயிரம் வரையே தருகிறார்கள். அதேபோல் பிரேமா விவகாரத்தை சரியாக, நேர்மையாக விசாரித்தால் பலப்பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் சிக்குவார்கள். ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் இதில் சிக்குவார்கள் என்பதால் இந்த வழக்கை நீர்த்துப்போக வைக்க மாவட்ட உயர்அதிகாரிகளுக்கு நெருக்கடிகள் தரப்படுகின்றன'' என்கிறார்கள் காவல்துறை தரப்பிலேயே.