சென்னை, தாம்பரத்தில் நடந்த பாஜக ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், “தமிழகத்தில் ஒரு முறை எங்களை ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற ஆட்சியை தருவோம். செந்தில் பாலாஜி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்” என்று பேசியிருந்தார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் அமுதரசன், “ஒரு பாதுகாப்பு அமைச்சர் செய்யக்கூடிய வேலையை அவர் பார்க்க வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் 45 நாட்களுக்கு மேலாகவும் மக்கள் உயிரோடு கொலை செய்யப்படுகிறார்கள். அங்கு திட்டமிட்டு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். ராணுவத்தை இறக்கியும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
சாதி, மதக் கலவரத்தை பாஜகவினர் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் மணிப்பூரில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆனால், நாட்டினுடைய பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் அனைவரும் அமைதியாக இருந்து மெளனம் காத்து வருகின்றனர்.
இப்படி நாட்டில் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கையில் ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சர் இங்கு தாம்பரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் கையில் நாட்டை கொடுத்ததன் விளைவு தான் இன்று நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
அதுபோலவே தமிழ்நாட்டையும் கெடுக்க பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு போதும் அந்த பூவை மலர வைக்க மாட்டார்கள். அது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் நிரூபித்து கொண்டிருக்கிறோம். வரவிருக்கும் தேர்தலிலும் நிரூபித்து காட்டுவோம்” என்றார்.
மேலும் அவரிடம், நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சார்பாக என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டது என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர், “அமலாக்கத்துறை அமைப்பு, புலனாய்வு அமைப்பாக இல்லாமல் பாஜகவுடைய கூலிப்படை அமைப்பாக இருந்து வருகிறது என்று உச்சநீதி மன்றமே அவர்களை தலையில் கொட்டி அனுப்பிவிட்டார்கள்.
செந்தில் பாலாஜி முறையற்ற கைது என்ற வாதத்தில், அவரை நீதிமன்ற காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். திமுக சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அமலாக்கத்துறையின் வழக்கறிஞர்கள் புறமுதுகு காட்டி ஓடியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், திமுக தரப்பில் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற எங்களுக்கு சில காலம் வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் அமலாக்கத்துறையினர் பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.