மனித நாகரீகம் தோன்றுவதற்கு முன்பே மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்தார்கள். அப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு காடுகளில் வளர்ந்திருந்த மரங்களிலிருந்து காய்கனிகளை பரித்துத் தின்று பசி போக்கினார்கள். நாடோடிகளாக திரிந்த அவர்கள் பிறகு குழுக்களாக சேர்ந்து ஆங்காங்கே தங்க ஆரம்பித்தனர். அதிலும் நதிக்கரையோரம் அதிகமான மக்கள் வசிக்க ஆரம்பித்தனர். அப்படி வாழ்ந்த மக்கள் கற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது ஏற்படும் தீப்பொறி பார்த்து நெருப்பை கண்டுபிடித்தார்கள்.
அதன்பிறகு காட்டு விலங்குகளை வேட்டையாடி அதனை நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். அதேபோன்று காடுகளில் பூமிக்கு அடியில் இருந்த கிழங்குகளையும் மரத்தில் காய்த்த காய்களையும் நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்தனர். பச்சையாக சாப்பிடும்போது இருந்த சுவையை விட தீயில் சுட்டு சாப்பிட்டதும், அவை மேலும் சுவையாக இருந்ததை உணர்ந்த மனிதன், அதன் பிறகு உணவு வகைகளை தீயில் வேக வைத்து சாப்பிட ஆரம்பித்தான். அப்படி வேகவைப்பதற்கு பாண்டங்கள் தேவைப்பட்டன. அதற்கு மண்ணை எடுத்து குழைத்து அதன் மூலம் பாண்டங்களை தயாரித்து பயன்படுத்தினான். அது நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல் தண்ணீரில் மழையில் கரைந்தும், உடைந்தும் போவதுமாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் வேட்டையாடுவதற்கு கத்தி ஈட்டி போன்ற ஆயுதங்களையும் மண்ணிலிருந்தே தோண்டி எடுத்து, அதை நெருப்பில் வைத்து வாட்டி எடுத்து ஆயுதங்களாக பயன்படுத்தினார்கள். அவை வலிமையாக இருந்தது. பின்னர் அதை கொண்டு மிருகங்களை வேட்டையாடினான். இதனால் சந்தோஷம் அடைந்த மனிதன் தான் சமைத்து சாப்பிட தேவைப்பட மண்பாண்டங்களை, அந்த நெருப்பில் சுட்டு பயன்படுத்த ஆரம்பித்தான். அப்படிப்பட்ட மண்பாண்டங்கள் நீண்ட காலம் உடையாமல் பயன்பட்டது. அதன்மூலம் உணவு வகைகளை மாமிசத்தை காய்கறிகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். இப்படி மனித நாகரீகத்திற்கு முக்கிய அடையாளமாக இன்றளவும் உள்ளது மண்பாண்டங்கள்.
அதோடு அவன் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு மண்பாண்டங்களை அடுப்பு நெருப்பில் வைத்து சமைத்து சாப்பிட இன்றியமையாததாக மக்களுக்கு பயன்பட்டு வந்தது. மண்பாண்டங்களில் இருந்து மண்குடம், மண்சட்டி, மண்பானை என சமைப்பதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் என தங்கள் குடும்பத்தின் முழு தேவைகளுக்கும் மண்பாண்டங்கள் பயன்பட்டது. இப்படி மனிதர்களுக்கு இன்றியமையாத மண்பாண்டங்களை தயாரிப்பவர்களுக்கு காலப்போக்கில் மண் குயவர்கள், மண் உடையார்கள் என்று பெயர் வந்தது. தற்போது மக்கள் பலர் அந்த மண்பாண்டங்களை வாங்க ஆர்வம் காட்டிவரும் நிலையிலும், அந்த தொழில் நசிந்து வருகிறது. இருப்பினும் கூட மண்பாண்டங்கள் இப்போதும் கூட தாயார் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கிடையில் மண்பாண்டங்களை செய்பவர்கள் இந்த ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானமின்றி சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் மற்றம் வாகையூர் இரண்டு ஊர்களில் உள்ள சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த மண்பாண்டம் தொழில் செய்வோரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகவம் வெளிமாநிலத்தினருக்கு அளித்தது போல் தங்களுக்கு நிவாரண ஏற்பாடு செய்து தர வேண்டும் இல்லையேல், எங்களது பொருட்களை வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமாவது விற்பனை செய்திட அனுமதிவழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.