Skip to main content

'ஜெஸ்ஸி'க்கும் 'ஜானு'வுக்கும் 6 வித்தியாசங்கள்!

Published on 05/10/2018 | Edited on 14/02/2020

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றென்றும் காதலிக்கும் நாயகிகளில் இருவர் ‘ஜெஸ்ஸி’ மற்றும் ‘ஜானு’. இந்த இரு பாத்திரங்களிலும் நடித்தவர் த்ரிஷா. த்ரிஷா, தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்குப் பிடித்த நாயகியாக பதினைந்து ஆண்டுகளைத் தாண்டித் தொடர்கிறார். இடையிடையே சர்ச்சைகள், விமர்சனங்கள், வயதானவர் என்று குறிப்பிடும் மீம்ஸ்கள் வந்தாலும் 'சாமி' மாமிக்கு இருந்த அதே சார்ம் 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெஸ்ஸிக்கு இருந்தது, '96' ஜானுவுக்கும் இருக்கிறது. இத்தனை வருடங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் பல விதமான பாத்திரங்களில் த்ரிஷா நடித்திருந்தாலும் அனைத்தையும் தாண்டி இதுவரை ரசிகர்கள் மனதில், 'இந்த உலகத்தில எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் சார் அவளை லவ் பண்ணேன்' என்று லவ் பண்ண வைத்தது 'ஜெஸ்ஸி'தான். '96' படத்தில் த்ரிஷா நடித்த 'ஜானு' பாத்திரம் 'ஜெஸ்ஸி'க்கு டஃப் கொடுத்தது. 'காதலே காதலே தனிப்பெருந்துணையே' என 2000ஸ் கிட்ஸையும் காதலில் கரைய வைத்தாள் 'ஜானு'. இந்த இரு பாத்திரங்களின் ஈர்ப்புக்குக் காரணம் அசால்ட்டான நடை, அதிக அலங்காரமில்லாத அழகு என புற தோற்றம் மட்டுமல்ல, இருவரின் அகத்தோற்றமும்தான். இவர்களால் கிறங்கிப் போனது கார்த்திக்கும் ராமும் மட்டுமல்ல ரசிகர்களும்தான். 'ஜெஸ்ஸி'க்கும் 'ஜானு'வுக்கும் ஒற்றுமைகள் என்ன, வித்தியாசங்கள் என்ன...

 

jessi

ஜெஸ்ஸி


 

janu

ஜானு (எ) ஜானகிதேவி



ஜெஸ்ஸிக்கு சினிமா, பாடல்கள் எல்லாம் ரொம்ப தூரம். கேளிக்கைகள் அவள் குடும்பத்துக்கு ஆகாது. குடும்ப நிகழ்ச்சிகளில், சர்ச்களில் கிட்டார்களுடன் இசைக்கப்படும் இயேசு பாடல்கள்தான் அவளது பாடல்கள். அவள் பார்த்தது மொத்தம் ஐந்து படங்கள்தான். கார்த்திக் திரைப்பட இயக்குனராகப் போகிறேன் என்று சொல்லும்போதே அவள் கிட்டத்தட்ட முடிவு செய்துவிடுகிறாள், இது நடக்காதென்று. ஆனால், ஜானு (எ) ஜானகிதேவி சுற்றியிருப்பவர்களை தன் பாடல்களால் வசீகரிப்பவள். அவள் பாட மேடையேறினால் நண்பர்கள் தங்கள் விருப்பப் பாடல்களை கேட்பார்கள். ஜானு பாடத் தேர்ந்தெடுப்பது மென்மையான பாடல்கள் மட்டுமல்ல. 'சின்னப் பொண்ணு நான், ஒரு சிங்காரப்பூ நான்' என்று அவள் 'ஆச அதிகம் வச்சு' பாடலை அசால்ட்டாக புன்னகைத்துக் கொண்டே பாடி ராமை கிறங்கடிக்கிறாள், நம்மையும்தான். ராம் விரும்பிக் கேட்கும் 'யமுனை ஆற்றிலே' பாடலை மட்டும் பாடாமல் அவனை அலைக்கழிக்கிறாள்.
 

jessi karthik

கார்த்திக் - ஜெஸ்ஸி

 

ram janu

ராம் - ஜானு



தோற்றம், ட்ரெஸ்ஸிங் போன்றவற்றில் ஜெஸ்ஸி, ஜானு இருவருமே கிட்டத்தட்ட ஒரு மாதிரிதான். மாடர்ன் டிரஸ் என்றாலும் மிதமான வண்ணங்கள், நாகரிகமான உடைகள், குறைந்த மேக்-அப் என சிம்பிளாக ஆனால், ஸ்ட்ராங்காக நம் மனதில் நுழைகிறார்கள். ஜெஸ்ஸி வளர்ந்தது சென்னை நகரத்தில். ஜானு வளர்ந்தது தஞ்சாவூரில், என்றாலும் சிங்கப்பூர் சென்று வரும்போது சற்றே ஜெஸ்ஸியை நினைவுபடுத்துகிறாள், தோற்றத்தில் மட்டும்.

ஜெஸ்ஸி, கார்த்திக்கை தனக்கு பிடித்தபின்பும் கூட அதை பெரிதாக வெளிப்படுத்துபவள் அல்ல. அவன் மீது காதல் வந்தபின்பும் கூட, அதை "உன் கூட கொஞ்ச நேரம் ஸ்பென்ட் பண்ணனும் கார்த்திக், ஏதாவது படம் போலாமா?' என்பதுதான் அவளது அதீத வெளிப்பாடு. கார்த்திக் தன்னை விட இளையவன் என்ற எண்ணம் அவளுக்குள் உண்டு, என்றாலும் அவன் மீது உரிமை எடுத்துக்கொள்ளமாட்டாள். ஆனால், ஜானு தன் வகுப்புத் தோழனான ராம் மீது தனக்கிருக்கும் ஈர்ப்பை சொல்லவில்லையே தவிர பல விதங்களில் வெளிப்படுத்துகிறாள். அவனை மிரட்டுகிறாள், அவனது தயக்கத்தை பல இடங்களிலும் அமைதியாகவே கிண்டல் செய்கிறாள். வளர்ந்து பெண் ஆன பின்பு இன்னும் வெளிப்படையாக ராம் மீது தனக்கிருந்த காதலை பேசுகிறாள்.


ஆலப்புழாவிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில், தனக்கே தெரியாமல் தன்னருகே பயணிக்க கார்த்திக் வருவது ஜெஸ்ஸிக்கு பெரிய மகிழ்ச்சி. வழக்கம் போல அதை காட்டிக்கொள்ளாத அவள், அந்த இரவு முழுவதும் அவனுடன் பேசுகிறாள். அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படுகிறது. அங்கு ஒரு முத்தம் நிகழ்கிறது. ஒரு முத்தத்திற்குப் பின்னரும் கூட காதலை ஒத்துக்கொள்ளாதவள் ஜெஸ்ஸி. 'நீ என்னை கிஸ் பண்ணீல, அதுதான் ஃபர்ஸ்ட் டைம் கார்த்திக்' என தன் ஒழுக்க எல்லையைப் பற்றி கார்த்திக்கிடம் சொல்பவள். அந்த முத்தத்தைக் கடக்க நினைப்பவள். ஜானுவோ, 'நீ இன்னும் வெர்ஜினா ராம்?' என்று வெளிப்படையாகக் கேட்டு ராமை நிலைகுலைய வைக்கிறாள். அவன் வெட்கப்படும்போது, இவள் சற்றும் தயங்காமல் 'எப்படிடா உன்னை பொண்ணுங்க விட்டாங்க, நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டடா' என்று கேட்கிறாள். ராமிடம் தன்னை வெளிப்படுத்துவதில் அவளுக்கு சற்றும் தயக்கமில்லை. ராமை தனக்கானவன் என்றே அவள் நினைக்கிறாள், பள்ளிக் காலத்திலும் திருமணமான பின்பும். ஆனால், ஜெஸ்ஸி கார்த்திக்கின் கோட்டுக்குள் வருவதும் போவதுமாக அலைபாய்கிறாள். அவனையும் அந்தப் பதற்றத்திலேயே வைக்கிறாள்.

 

 

jessi jail

 

janu



ஒரு ஊடல் வரும்போது, கார்த்திக் தன்னை தவிர்க்கிறான் என்ற உணர்வு வரும்போது, "இது முடிஞ்சு போச்சு கார்த்திக், திஸ் இஸ் ஓவர்" என்று மிகப்பெரிய முடிவை அவசரமாக, ஆனால் உறுதியாக எடுத்தவள் ஜெஸ்ஸி. அதன் பின்னர் கார்த்திக் பண்ணும் நூற்றுக்கணக்கான ஃபோன்கால்களையும் எஸ்.எம்.எஸ்களையும் நிராகரிப்பவள். ஆனால், ஜானுவோ சண்டை போட்டுவிட்டுப்  போனாலும், அவளே ராமுக்கு ஃபோன் பண்ணி, "எங்க இருக்க ராம், ரொம்ப தூரமா போய்ட்டியா?" என்று கேட்பவள். மீண்டும் வந்து பேசுபவனை ஏற்பவள்.

ஜெஸ்ஸிக்கு நகைச்சுவை உணர்வு மிகக் குறைவு. கார்த்திக்குடன் வரும் கணேஷ் சார் பேசுவதைக் கேட்டு சிறிதே புன்னகைப்பவள். 'அப்பா கேட்டா உன்னை தம்பி மாதிரின்னு சொல்லிக்கலாம்' என்ற மெல்லிய நகைச்சுவைதான் ஜெஸ்ஸிக்கு உள்ளது. ஆனால் ஜானு, காமெடி சென்ஸில் கலக்குபவள். ராம் கேட்ட பாடலை பாடாமல் அவனை படுத்துவதிலும், 'அண்ணியாரே' என்று கூறும் தோழியிடம் (தேவதர்ஷினி நடித்த பாத்திரம்), "நாத்தனாரே... நீங்க மெதுவா நடந்து போய் அந்த கோட்டை தொட்டுட்டு வாங்க" என்று சிரித்துக் கொண்டே தானும் ராமும் தனியாகப் பேசுவதற்காக அவளை அனுப்புவதிலும் அவளது நகைச்சுவை உணர்வு வெளிப்படுகிறது.

இருவருமே சூழ்நிலையால் காதலனை மணக்க முடியாமல் வேறு ஒருவரை மணந்தவர்கள், இருவரின் திருமணத்தின் போதும் அங்கு அவர்களின் காதலர்கள் இருந்தார்கள். ஜெஸ்ஸி, தன் தந்தை முடிவெடுத்து செய்த முதல் திருமணத்தை தைரியமாக நிறுத்துகிறாள், அத்தனை பேர் முன். ஆனால் அடுத்த முறை அவளே முடிவெடுத்து வேறு ஒருவரை மணக்கிறாள். ஜானுவோ, தன் திருமணத்தை நிறுத்த ராம் வருவானா என்று மனதிற்குள் எதிர்பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல், இருக்கிறானா இல்லையா என்று தெரியாத ஒருவனை எப்படி நம்புவது என்று திருமணம் முடிக்கிறாள். ஜெஸ்ஸி, ஜானு இருவருமே வசீகரிக்கும் தேவதைகள்தான். ஜெஸ்ஸி, வெளிப்படுத்துவது கொஞ்சம்தான், ஆனால், எந்த முடிவிலும் உறுதியானவள். அவள் ஒரு சான்ஸ்தான் தருவாள். ஜானு மனதை வெளிப்படுத்துகிறாள், ஆனால் உள்ளுக்குள் உண்மையில் சற்று பயம் கொண்டவள், ஆனால் எத்தனை முறையும் காதலுக்காக திறந்திருப்பவள்.