சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்ட வழக்கில், ''ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்'' என்ற கணக்காக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், டெல்லியைத் தொடர்ந்து தமிழக்திலும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய பாஜக அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பட்ஜெட், 10 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டம், சேலத்தில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாகச் சென்னையில் முடிகிறது. இந்த சாலையின் மொத்த நீளம் 277.3 கி.மீ. எடப்பாடி பழனிசாமி அரசு, இத்திட்டத்துக்காக 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியது.
இந்த சாலைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள். எட்டுவழிச்சாலை வந்தால், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும். சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலையில் உள்ள கவுந்தி மலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
வெட்டப்படும் தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என ஆசை வலை விரித்தும் விவசாயிகள் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. ஏற்கனவே, அதிமுக அரசு, சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைக்காக நிலம் வழங்கிய மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையான இழப்பீடு தராமல் வஞ்சித்து இருந்தது. இதையெல்லாம் யோசித்த விவசாயிகள், கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, விளைநிலங்களுக்குள் பூட்ஸ் கால்களுடன் போலீசாரை இறக்கி, நிலத்தை அளந்து, முட்டுக்கல் நட்டனர் வருவாய்த்துறையினர். திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் விவசாயிகள். கடந்த 2019 ஏப்ரல் 8ம் தேதி, ''8 வழிச்சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்திய நடைமுறை தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. மேலும், இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருதரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், 2020 டிச. 8ம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
''எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. ஆனால், முந்தைய அறிவிக்கை அடிப்படையில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும். மீண்டும் புதிய அறிவிக்கையை வெளியிட்டு இத்திட்டத்தைத் தொடரலாம். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் துறையிடம் முன்னனுமதி பெறாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு.
இத்திட்டத்தைச் செயல்படுத்த உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும் எட்டுவழிச்சாலை போடும் அதிகாரம் இருக்கிறது,'' என்று தீர்ப்புரையில் கூறியிருந்தது.
தீர்ப்பின் முழு விவரம் வருவதற்கு முன்பே, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை என்று டிவி சேனல்களில் செய்திகள் வெளியானதால், சேலத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேரம் போகப்போகத் திட்டத்தை, புதிய வழிகாட்டுதல் படி செயல்படுத்தலாம் என்ற தகவல் பரவியதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சேலம் ராமலிங்கபுரத்தில் ஒன்றுகூடிய 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்றும், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதற்கிடையே, கியூ பிரிவு, காவல்துறை தனிப்பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட அனைத்து உளவுப்பிரிவு காவல்துறையினரும் வாகனங்களுடன் வந்திறங்கவும், அங்கு மேலும் டென்ஷன் எகிறியது.
எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் குப்பனூர் நாராயணன், சிவகாமி, கவிதா, மோகனசுந்தரம், குப்புசாமி ஆகியோர் பேசினர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்குச் சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை - 2020 (இஐஏ - 2020), ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத்தேவை இல்லை என்று கூறுகிறது. இந்த அறிவிக்கை, இன்னும் சட்டமாகவில்லை. இப்போது வந்துள்ள தீர்ப்பானது, மத்திய அரசுக்கு இஐஏ - 2020 அறிவிக்கையைச் சட்டமாக்கிவிட்டு, அதன்பிறகு புதிய அறிவிக்கை வெளியிட்டு எட்டுவழிச்சாலை போடுங்கள் என மறைமுகமாகச் சொல்வது போல் இருக்கிறது.
உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்துதான் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைகிறது எனில் நாங்களே முன்வந்து எங்கள் நிலத்தைத் தர தயாராக இருக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கவும், கஞ்சமலையில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட கனிம வளங்களைத் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கவும்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வர துடிக்கிறார்கள. இந்த திட்டத்துக்காக எங்கள் நிலத்தை ஒரு அடிகூட விட்டுத்தர மாட்டோம்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக எங்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் போலீசார் எத்தனையோ பொய் வழக்குகளைப் போட்டு, கைது செய்துள்ளனர். போலீசார், வருவாய்த்துறையினர் டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்பட்டு பல விவசாயிகள் மாரடைப்பில் உயிரிழந்துள்ளனர். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு என்ன இழப்பீடு கொடுத்தாலும் ஈடுகட்ட முடியுமா?
சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அந்த வழியாக எட்டுவழிச்சாலை போடலாமே? மலையைக் குடைந்து, இயற்கையை அழித்து எட்டுவழி என்ற பெயரில் பசுமைவழி விரைவுச்சாலை தேவை இல்லை. இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விரைவில் டெல்லியில் விவசாயிகள் நடத்துவதைப் போல சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் மண்ணுக்காக நாங்கள் தற்கொலை போராட்டத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறோம்,'' என்றனர்.
தீர்ப்பின் உள்ளடக்கம் குறித்து பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டோம்.
''அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தவறு என்கிறது உச்சநீதிமன்றம். நெடுஞ்சாலைத்துறைக்குச் சாலைகள் அமைக்க அதிகாரம் இருக்கிறது. அதேவேளையில், விவசாயிகள் பெயரில் இருக்கும் நிலத்தை அரசுக்கு வகை மாற்றம் செய்ததையும், அதில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பிறகுதான் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் அப்போது எட்டுவழிச்சாலை வழக்கில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இன்றைக்கு உச்சநீதிமன்றம், திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகும், இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும். அந்த அனுமதி சரியாக வழங்கப்பட்டு உள்ளதா என்பதை இப்போது நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஒருவேளை, எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தாலும், நிலத்தை வகை மாற்றம் செய்ய உரிய விதிகள் பின்பற்றப்படாமல் போனாலும் கூட அதை எதிர்த்து நாம் வழக்கு தொடரலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த திட்டமே தேவை இல்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.
சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கும்போது புதிய வழித்தடத்தில் எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவையில்லை. இதற்கான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்படவில்லை. விளை நிலங்களைக் கையகப்படுத்தும் இப்படியொரு திட்டம் தேவையில்லாதது. மதுரை - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம்தான் ஆரம்பத்திலிருந்தது. அதை மாற்றித்தான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையாக மாற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து போராடுவோம்.
உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பகுதியாக நீக்கம் செய்து, ஒரு பகுதியை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், இப்படியொரு தீர்ப்பை அறிவித்து இருப்பது வினோதமாக இருக்கிறது. இப்போது ஒரு திட்டம் நிறைவேறுவதற்கு எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்குச் சட்டங்களின் அழுத்தம் நீர்த்துப் போய்க்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது,'' என்கிறார் வழக்கறிஞர் பாலு.
விவசாயிகளை மீண்டும் போராட்டக்களத்திற்கு அழைத்திருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.