தி.மு.க. ஆட்சியில் பெரிய பிரச்சினையாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மோதல் உருவெடுத்துள்ளது.
திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர் விஷ்ணு. இவர் திருநெல்வேலியில் உள்ள சட்டவிரோத குவாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி அதிபர்கள் ஆளுங்கட்சி முக்கியப் புள்ளிகளை அணுகினார்கள். அந்த முக்கியப் புள்ளி நேரடியாக கலெக்டர் விஷ்ணுவுக்கு குவாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அழுத்தம் கொடுத்தார். விஷ்ணு அதற்கு உடன்படவில்லை. ஆட்சியின் மேலிடத்திலும் விஷ்ணு மேல் புகார் கொடுத்தார். அவரின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்த கலெக்டர் விஷ்ணு, சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் வெட்டி எடுக்கப்படும் கற்களால் ஏற்கனவே அந்த பகுதியில் உயிரிழப்பு நடந்துள்ளது. எனவே, இதை நாம் தமிழர் கட்சி அரசியலாக்குகிறது என நோட் போட்டு சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளுக்கு 360 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள் குவாரி அதிபர்கள். நோட்டீஸ் கொடுக்காமல் குவாரி மீது நடவடிக்கை எடுத்தது தவறு என வழக்கில் தீர்ப்பு வந்தது. உடனடியாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதே குவாரிகளை மூட உத்தரவிட்டார் விஷ்ணு.
விஷ்ணு கலெக்டராக தொடர்ந்தால் நாங்கள் தொழில் நடத்த முடியாது என குவாரி அதிபர்கள் ஆட்சி மேலிடத்திடம் முறையிட, சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாற்றத்தில் விஷ்ணு மாற்றப்பட்டார். விஷ்ணுவை போலவே பொதுமக்களிடம் நன்மதிப்பு பெற்றவர் தென்காசி கலெக்டராக இருந்த ஆகாஷ். இவர் குற்றாலம் பகுதியில் மிகப்பெரிய சுற்றுலா விழாக்களை மக்கள் ஒத்துழைப்போடு பிரம்மாண்டமாக நடத்தினார். அத்துடன் குற்றாலத்திலிருந்து கால்வாய் வெட்டி தங்களுடைய தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகளை ஏற்படுத்திய ஓட்டல் அதிபர்களின் சட்டவிரோத வேலைகளுக்கு முடிவு கட்டி செயற்கை அருவிகளை இழுத்து மூடினார். அத்துடன், தலையாரி போஸ்டிங்குகளை வெகு வேகமாக எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நேர்மையாக நிரப்பினார். இது தென்காசி தி.மு.க. அரசியல்வாதிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த கலெக்டர் ஆகாஷையும் நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் மாற்றினார்கள். அவருக்குப் பதிலாக டி.ரவிச்சந்திரன் என்பவரை தென்காசி கலெக்டராக நியமித்தார்கள். இதை எதிர்த்து தென்காசி மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக இருப்பவர் கிருஷ்ண சரோஜ் தாகூர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்தது போல சூளகிரி அருகே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி சாலைமறியலில் ஈடுபட்டார்கள். அதில் ஒரு இளைஞரை கிருஷ்ண சரோஜ் தாகூர் லத்தியாலும் காலாலும் எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. எருது விடும் விழாவுக்கு முறையாக அனுமதி தரவில்லை என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜல்லிக்கட்டு, கள்ளக்குறிச்சி போல பரபரப்பாக போலீசுக்கு எதிராக சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை மணிக்கணக்காக மறித்து நடந்த இந்தப் போராட்டம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே நூற்றுக்கணக்கான இளைஞர்களை கைது செய்து கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்தி இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த கிருஷ்ண சரோஜ் தாக்கூர் தமிழகத்திலேயே மிகச்சிறந்த சட்டம் ஒழுங்கு அதிகாரி என காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளால் பாராட்டப்படுபவர். ஆனால், இவர் எப்பொழுதும் சட்டம் ஒழுங்கு பணிகளை ஒழுங்காகக் கவனிப்பதில்லை. சூளகிரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரளுவார்கள். அவர்கள் எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சாலைமறியலில் ஈடுபடுவார்கள் என்பதை கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே உளவுத்துறை கவனிக்கத் தவறியது. இது உளவுத்துறையின் தோல்வி என அறிக்கை விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு தோல்விக்குப் பிறகும் கிருஷ்ண சரோஜ் தாக்கூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
துரைமுருகனுக்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதி கலெக்டர்களுக்கும் ஒத்து வராது. சமீபத்தில் இந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற முதல்வர், இந்தப் பகுதி கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் என்கிற புகார் தலைமைச் செயலக வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருந்தவர் உமாநாத் ஐ.ஏ.எஸ்.. இவர் இப்பொழுது முதல்வரின் செயலாளராக இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையில் கடுமையான ஊழல்களைச் செய்தார் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் துறையில் இருந்த உமாநாத் முதல்வரின் செயலாளராக வந்துவிட்டார். இதுவரை விஜயபாஸ்கர் மீது உமாநாத் தலைவராக இருந்த தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷனில் நடந்த ஊழல்கள் பற்றி ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தற்பொழுது நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் அரவிந்த் என்பவரை தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக உமாநாத் நியமித்துள்ளார்.
இதுதான் ஊழலை மறைக்கும் நடவடிக்கை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நியாயமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். தவறான அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்தான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.