“வீட்டிலேயே யாராவது பிரசவம் பார்ப்பாங்களா? இயற்கை முறை மருத்துவங்கிற பேர்ல யூ ட்யூபை பார்த்து பிரசவம் பண்ணி மனைவியை கொலை பண்ணிட்டான் முட்டாள் கணவன். இனிமேலாவது நோய் வந்தா சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதின்னு இயற்கை மருத்துவத்துக்கு போகாம அலோபதி டாக்டரைப்போயி பாருங்க”
“சுகப்பிரசவம் ஆகுற தாய்மார்களைக்கூட ‘சிசேரியன்’ பண்ணி பணத்தை புடுங்குறாங்க அலோபதி டாக்டர்கள். 50 வருடத்துக்கு முன்னால வீட்லேயே யாரும் பிரசவம் பார்த்ததே இல்லையா? சுகப்பிரசவத்துல குழந்தைங்க பிறக்கலையா? வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதில் என்ன தவறு?”
திருப்பூர் மாவட்டத்தில்… வீட்டிலேயே பிரசவம் பார்த்த இளம்தாய் மரணம் அடைந்தது குறித்து இப்படி பல்வேறு விவாதங்கள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில்தான் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்வது சரியா? அதனால், ஏற்படும் ஆபத்துகள் என்ன? அலோபதி மருத்துவத்தைத் தவிர மற்ற மருத்துவமுறைகள் ஆபத்தா? என பிரபல டாக்டர்களிடம் ’கன்சல்ட்’ பண்ணினோம்…
தமிழக அரசின் மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனரும் தனியார் கல்லூரி முதல்வருமான டாக்டர் கலாநிதியிடம் கேட்டபோது, “எந்த மருத்துவமுமே ஒரு நபருக்கு பயனளித்தால்… அந்த மருத்துவமுறை எல்லா நபருக்கும் பயனளிக்கவேண்டும். ஆங்கில மருத்துவம் என்று சொல்லப்படும் அலோபதியில்… காய்ச்சல் வந்தால் பேரசிட்டமால் மருந்தைக் கொடுக்கிறார்கள். ஆக, பேரசிட்டமால் கொடுத்தால் எல்லோருக்குமே காய்ச்சல் குறையும் என்பது நிரூபிக்கப்பட்டது. இதுதான், எவிடென்ஸ் பேஸ்டு மெத்தடாலஜி. ஒருவேளை, அந்த மருந்தைக்கொடுத்து தீரவில்லை என்றால் அந்த நோய் கிரிமி எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட்டது என விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தை காண்பிக்கலாம். அப்படி காண்பிக்கப்படவில்லை என்றால், அதை மருத்துவமாகவே ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல், எந்த மருத்துவம் உயர்ந்தது? எந்த மருத்துவம் தாழ்ந்தது? என்ற ஆராய்ச்சிக்கே செல்லக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவங்கள் அனைத்துமே ஒரு சேரத்தான் பார்க்கவேண்டும். நான், சென்னை மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்தபோது எந்த நோய்க்கு எந்த மருத்துவமுறையில் என்ன சிகிச்சை இருக்கிறது? ஆங்கில மருத்துவர்களுடன் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களை அழைத்து ஒருங்கிணைத்து ஆலோசனைகளை நடத்தியிருக்கிறேன்.
உதாரணத்திற்கு, மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லிவேர் மருந்தாக கொடுத்து குணப்படுத்துகிறார்கள் என்பது சித்தமருத்துவத்தில் உள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் டாக்டர் தியாகராஜனும் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் லலிதா காமேஸ்வரன் உள்ளிட்ட டாக்டர்கள்தான் கீழா நெல்லிவேரை மஞ்சள் காமாலைக்கு கொடுக்கலாம் என விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அறிவித்தார்கள். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அரசாங்கமே அறிமுகப்படுத்தியது. (எங்கே எப்படி குணப்படுத்துகிறது என்ற ஆராய்ச்சியை சுகாதாரத்துறை செய்யவில்லை என்பது தனி ஸ்டோரி) அப்படியென்றால், எந்த நோய்க்கு எந்த மருத்துவமுறையில் சிகிச்சை இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பக்கவிளைவு இல்லாத மருத்துவம் என்று ஒன்று கிடையவே கிடையாது. நாம் சாப்பிடும் உணவையோ தண்ணீரை அளவுக்கு மீறி சாப்பிட்டாலே ஆபத்து ஏற்படுகிறபோது எந்த மருத்துவமாக இருந்தாலும் பின் விளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
அதேபோல், மாற்றுமுறை மருத்துவம் என்பதே தவறு. வியாதியும் காரணமும் ஒன்றாக இருந்தால் அதற்கான சிகிச்சை முறையும் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும்? சித்த மருத்துவத்தில் ‘சர்ப்பகந்தா’ என்னும் வேரை இரத்த அழுத்தத்திற்கு கொடுக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அதையேதான், அலோபதியில் ரிசர்ப்பின் என்ற வேதியியல் பெயரில் அடல்ஃபேன் என்னும் மருந்தை கொடுக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். ஆங்கில மருத்துவத்தில் ஃபார்மகாலஜி எனப்படும் மருந்தியல் துறையில் பைட்டோ ஃபார்மகாலஜி என்ற பிரிவு உள்ளது. இது, சித்த மருத்துவம்தானே? எதெல்லாம் மனிதகுலத்திற்கு நன்மை பயன்படுத்துகிறதோ அதையெல்லாம் ஆராய்ந்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சாதி மதம்போல… உன் மருத்துவம் மேலே… உன் மருத்துவம் கீழே என்ற ஏற்றத்தாழ்வை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.
உணவே மருந்து என்று சொல்லிக்கொண்டு பட்டினி கிடப்பது… நடப்பது… மண் எடுத்து பூசிக்கொள்வது… மண்ணில் குளிப்பது எல்லாம் அறிவியல் பூர்வமாக எந்த நோயை குணப்படுத்தும் என்ற சைண்டிஃபிக் டேட்டாக்கள் இல்லை. தெளிவான ஆராய்ச்சி புத்தகங்களோ வல்லுநகர்களோ இல்லை. இதுபோன்ற, இயற்கை மருத்துவம் என்கிற பெயரில் சொல்லக்கூடிய தகவல்களை நம்பி ஆபத்துகளை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. அப்படியிருக்க, இயற்கை மருத்துவத்தின் மூலம் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?” என கேள்வி எழுப்புகிறார்.
பிரபல சித்த மருத்துவர் மூலிமை மணி வேங்கடேசனிடம் நாம் கேட்டபோது, “நான், சித்த மருத்துவர். என்னிடம் யாராவது இரணியா பிரச்சனைக்கு வைத்தியம் பார்க்க வந்தால்… ‘இது ஆபரேஷன் மூலம் சரிசெய்யவேண்டிய பிரச்சனை. அலோபதி டாக்டர்க்கிட்ட போங்க’ என்றுதான் சொல்வேன். என்ன, ஒரு பிரபல சித்த மருத்துவர்… நீங்களே இப்படி சொல்லமா?’ என்று கேட்பார்கள். என் மருத்துவத்தில் எந்த நோய்க்கு என்ன சிகிச்சை அளிக்கமுடியுமோ அதைத்தான் நான் அளிக்கவேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் நான் ரெஃப்ரல் டாக்டராக மாறிவிடவேண்டும். அதாவது, அந்த நோய்க்கு என்ன சிகிச்சையோ அது தொடர்பான மருத்துவருக்கு பரிந்துரை செய்யவேண்டும். தோல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. மசாஜ் சிகிச்சை என்றால் ஆயூர்வேதத்தில் சிறப்பாக இருக்கும். விஷமுறிவு தோல் பிரச்சனைகளுக்கு ஹோமியோபதி ஒரு சிறந்த சிகிச்சை முறை. யுனானியிலும் நல்ல சிகிச்சைகள் அளிக்கிறார்கள். சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி நான்குமே அலோபதிக்கு மாற்று மருத்துவமுறை அல்ல. இந்த நான்கும் இந்திய மருத்துவமுறை. இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவங்கள். இன்னும் சொல்லப்போனால் ஆங்கில மருத்துவம்தான் அந்நிய மருத்துவம்; மாற்று மருத்துவம்.
ஆனால், நேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவம் என்ன? மருத்துவம் என்று வந்துவிட்டால் அது, செயற்கைதான். இயற்கை மருத்துவம் என்பது ஒன்று கிடையவே கிடையாது. அதுவும், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மருத்துவமுறைகளுக்கு கவுன்சில் உள்ளது. ஆனால், நேச்சுரோபதி அண்ட் யோகா எனப்படும் மருத்துவமுறைக்கு கவுன்சிலே கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமுறையிலேயே வீட்டில் யாரும் பிரசவம் செய்துகொள்ளாதபோது அங்கீகரிக்கப்படாத மருத்துவமுறையில் யாரோ யூ ட்யூபில் சொன்னான் என்பதற்காக அதைப்பார்த்து பிரவசம் பார்த்தது முட்டாள்தனம்.
அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘ஈனில்’ என்ற வார்த்தை சித்தர் பாடலில் உள்ளது. அதாவது, குழந்தைகளை பிரவசம் பார்க்கும் அதாவது ஈன்றெடுக்கும் இல்லம் என்று அர்த்தம். மருத்துவச்சியின் வீட்டில்தான் குழந்தைகளுக்கு பிரசவம் நடந்திருக்கின்றன. அதுதான், இன்றைக்கு, நர்ஸிங் ஹோம் என்கிறோம். பிறந்த குழந்தைக்கு 16 நாட்கள் மருத்துவச்சியின் மூலம் எண்ணை தேய்த்து குளிப்பாட்டி பாதுகாத்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த காலத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது விஞ்ஞான காலத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாது” என்கிறார் அதிரடியாக.
இதுகுறித்து, பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் இந்திரா நெடுமாறன் நம்மிடம், "அந்த காலத்தில் சுகப்பிரசவம் வீட்டிலேயே நடந்தது என்றால் பத்திலிருந்து பதினைந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்க்கே பிரசவத்திற்காக தயாராகும் எக்ஸ்பிரியன்ஸ் இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல. சரியான உடலுழைப்பும் இல்லை. குழந்தை பெறுவதற்கான எக்ஸ்பிரியன்ஸும் இல்லை. அதனால், பயிற்சி பெற்ற மருத்துவர்களின் உதவியோடு பிரசவம் பார்த்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது. பிரசவ வலி வந்ததுமே கர்ப்பப்பை சுருங்கி விரிகிறதா? குழந்தை எந்த பொசிஷனில் இருக்கிறது? குழந்தையின் ஹார்ட் பீட் நார்மலாக உள்ளதா? என்பதை மூன்று மணிநேரத்து ஒருமுறை மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்தறிந்துகொள்ளமுடியும். குழந்தை வெளியில் வந்த அரை மணிநேரம் என்பது தாய்மார்களின் மறு ஜென்மம் என்பார்கள். காரணம், அந்த நேரம் மிக கவனமாக கையாள வேண்டும். இரத்தப்போக்கு உள்ளதா? கிரிமித்தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்கவில்லை என்றால் தாயை காப்பாற்றமுடியாது” என்று எச்சரிக்கிறார் அவர்.
அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவமுறையிலேயே வீட்டில் பிரசவம் பார்த்துக்கொள்வது என்பது நடைமுறையாக இல்லாதபோது அங்கீகரிக்கப்படாத நேச்சுரோபதி என்கிற இயற்கை முறை மருத்துவம் என்பது மிகவும் ஆபத்தானதுதான்! எந்தெந்த சிகிச்சைக்கு எந்தெந்த மருத்துவமுறை குணம் அளிப்பதாக விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்சிகள் செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டதோ அந்த சிகிச்சையை நாடலாம்.!