Skip to main content

சாதி, மதத்தை தூண்டுகின்ற படம் இது அல்ல!! - ‘ருத்ர தாண்டவம்’ படத்தை புகழ்ந்த கிருஷ்ணசாமி, அர்ஜூன் சம்பத்!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

d

 

மோகன். ஜி இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சிகளைப் பார்த்த ஹெச். ராஜா, கிருஷ்ணசாமி, ராதாரவி, அர்ஜூன் சம்பத் முதலானவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தப் படம் தொடர்பாக தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இதுதொடர்பாக கூறியதாவது, "பொதுவாக நான் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. திரைப்படங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், அது இளைஞர்களிடம் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்தும் கடந்த 20 ஆண்டுகளாக அதனை ஒரு இயக்கமாகவே செய்துவருகிறேன். இந்தப் படத்தில் மோகன் அவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிக அழுத்தமான கதையைக் கூறியிருக்கிறார். இந்தப் போதைப் பொருட்கள் மூலமாகத்தான் பல்வேறு வகையான சண்டைகளும், சச்சரவுகளும் இந்த சமூகத்தில் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். எனவே, இந்தப் படத்தைப் பாடமாக எடுத்துக்கொள்வது பாராட்டக்கூடிய விஷயம். அதில் பிசிஆர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, மதமாற்றம் தொடர்பான நடைபெற்றுவரும் சம்பவங்களைக் கூறியிருக்கிறார். போதைப் பொருட்களுக்கு எதிரான இந்தப் படம் ஒரு இயக்கமாக நிச்சயம் முன்னெடுக்கப்படும்" என்றார். 

 

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது, "முதலில் மோகன். ஜி அவர்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். மேலும் அம்பேத்கார் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே தலைவர் என்பதுபோல் இதுவரை கூறப்பட்டுவந்ததை இந்தப் படம் உடைத்தெறிந்துள்ளது. பட்டியலின மக்கள் நீதிக்கும், நியாயத்துக்கும் எப்படி துணை நிற்கிறார்கள் என்பதை வெகு சிறப்பாக காட்டியுள்ளனர். சாதி, மதத்தைத் தூண்டுகின்ற படம் இது அல்ல. போதை பொருட்கள் பழக்கத்திற்கு எதிராக படம் நிறைய பேசுகிறது. அற்புதமான விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற படமாக இது இருக்கிறது. இந்தப் படத்தை வைத்து சாதி, மத மோதல்களைத் தூண்டலாம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இந்தப் படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

 

 

Next Story

"அண்ணாமலைக்கு ஹெச். ராஜாவை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் இருக்கா..? அவர் பதவியில் இருக்க இதுதான் காரணம்.." - விசிக செல்லதுரை!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

ி


சில தினங்களுக்கு முன்பு 'ருத்ர தாண்டவம்' படத்தின் சிறப்பு காட்சி குறிப்பிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதன் தயாரிப்பு தரப்பு திரையிட்டுக் காட்டினார்கள். அதில் கலந்துகொண்ட பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா, ஊடகங்கள் தொடர்பாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்பாகவும், அவர்களின் குடும்பத்தாரைப் பற்றியும் அவதூறு பரப்பினார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்லதுரை அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேல்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

கடந்த 27ஆம் தேதி ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ஒருகட்டத்தில் செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் அவர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்தார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

ஹெச். ராஜா பத்திரிகைாளர்களைக் கடுமையான வகையில் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். இது வருத்தப்பட வேண்டிய செயல்; மிகவும் கண்டனத்துக்குரியது. அவர் இவ்வாறு பேசுவது இது முதல்முறை அல்ல. ஒரு தெருப்பொறுக்கியைப் போல, நான்காம் தர பேச்சாளரைப் போல அவர் தொடர்ந்து இவ்வாறு பேசுகிறார். அவர் பேசும்போதே கேட்கிறார், சீமான் அம்மா தமிழச்சியா என்று? அரசியல் ரீதியாக கருத்துகளைத் தெரிவிக்கலாம், அதற்கும் ஒரு தரம் வேண்டும், நாகரிகம் வேண்டும். ஆனால், ஒரு பெரிய கட்சியின் அடையாளமாக இருக்கும் ஒருவர், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவது என்பது வெட்கக்கேடானது. கவிஞர் வைரமுத்து பற்றி பேசும்போது கூட அவரின் தாயார் பற்றியெல்லாம் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார். பெரியாரை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசுகிறார். எங்களுடைய தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறு விமர்சனம் செய்துள்ளார். இவர் பேசுவது தனிநபர் தாக்குதலைத் தாண்டி தரம் தாழ்ந்த தாக்குதலாக இருக்கிறது. 

 

அவர் தொடர்ந்து இவ்வாறு பேசிவருகிறார். பத்திரிகையாளர்களைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை அவரது கடுமையான விமர்சனம் தொடர்ந்து இருந்துவருகிறது. அவரை பாஜக தலைமை இதுவரை ஏன் கண்டிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள்? 

 

தற்போது இருக்கிற அண்ணாமலை, இதற்கு முன்னர் இருந்த முருகன், தமிழிசை முதலானவர்கள் எல்லாம் பிறப்படுத்தப்பட்ட, விளிம்புநிலை மனிதர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கென்று எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் இந்த ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்து எப்போதும் கேள்வி கேட்க முடியாது. தலைவர்களாக வேண்டுமானால் அவர்கள் இருந்துகொள்ளலாம். அதிகாரம் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே அவர்களுக்கு இருக்கும். அங்கே சனாதன பார்வை இருக்கிறதா என்ற கேள்வியை அனைவரிடத்திலும் இது தோற்றுவிக்கிறது. அண்ணாமலை இதைக் கண்டித்திருந்தால் அந்தப் பொறுப்புக்குத் தகுதியானதாக இருந்திருக்கும். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மாட்டார். 

 

பத்திரிகையாளர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் வளர்ச்சிக்குப் பத்திரிகைகள் மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது என்று தெரிவித்துள்ள நிலையில், இவ்வளவு சர்ச்சைகளுக்கு ஆளான ஹெச். ராஜா பற்றி அவர் எதுவுமே கூறவில்லையே? 

 

இந்தப் பூசி மெழுகுதல் போன்ற வார்த்தைகள் எல்லாம் நமக்குத் தேவையில்லை. ஹெச். ராஜா தனிப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார். அடுத்தவரின் தாயாரைப் பற்றி, மனைவியைப் பற்றி, குறிப்பாக பெண்களைப் பற்றி மிக கொச்சையாக, தவறான கருத்துகளைத் தொடர்ந்து பேசிவரும் அவரைக் கண்டித்திருக்க வேண்டும்; கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அதுதொடர்பாக வேண்டுமென்றே பேச பயப்படுகிறார்கள். அண்ணாமலையை அதிகாரமில்லாத தலைவராக பாஜக தலைமை வைத்திருக்கிறார்கள் என்று நானே நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன். அந்தக் கூட்டத்தில் மதத்தைத் தன்னுடைய அடையாளமாக வைத்திருப்பவர்களும், ஜாதியைத் தன்னுடைய பின்புலமாக வைத்திருப்பவர்களும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். இவர்கள் இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல இருக்கிறார்கள். சாதி மாநாடுதான் இவர்களால் நடத்த முடியும்.

 

 

Next Story

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை கோரி வழக்கு! 

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

 

Case seeking ban on Rudra Thandavam movie!

 

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்குத் தடை விதிக்க கோரிய மனுவுக்குப் பதில் அளிக்க, படத் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோரின் நடிப்பில் ஜி.எம். பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், அவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில்  இருப்பதாகவும் கூறி, படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மை கிறிஸ்தவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தைத் திரையரங்கு மற்றும் ஓ.டி.டி. உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த 15வது உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.பிரவின்குமார் ஆஜரானர் மனு தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் நாளைக்குப் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தார்.