மனித சிறுநீரை உபயோகப்படுத்தி செங்கலை உருவாக்கும் முறையைக் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கேப் டவுன் பல்கலைக்கழக (University of Cape Town) கட்டிட பொறியியல் துறை மாணவர்கள். உலகிலேயே அதிக தண்ணீர் பஞ்சம் நிலவும் நகரமாகவும் 'ஜீரோ டே' எனும் தண்ணீரே இல்லாத நாளை சந்திக்கும் நகரமாகவும் இருக்கும் கேப் டவுனில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கிறது.

டாக்டர் டைலோன் ரேண்டல் ( Dr.Dyllon Randall) எனும் நீர் தரம் பொறியியல் பிரிவு பேராசிரியர் மேற்பார்வையில் நடந்த ஆராய்ச்சியில் மனித சிறுநீரகத்தைப் பயன்படுத்தி இயற்கை செங்கல், மேலும் உரங்கள் என்று மனித சிறுநீரகத்தை சிறிதும் வீணாக்காமல் அதன் அனைத்து படிநிலைகளில் இருந்தும் ஒரு பொருள் என்று அறிவியல் உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றிருக்கின்றனர் ஆப்ரிக்கா கேப் டவுன் பல்கலைக்கழக மாணவர்கள்.
சிறுநீரில் இருந்து செங்கல் எப்படி என்பதன் விவரத்தைப் பார்ப்போம். உலர்ந்த மண்ணோடு சிறுநீரகத்தில் இருக்கும் ஒரு வகை பாக்டீரியாவை சேர்த்து இரசாயனக் கலவையை செய்யும்போது அதில் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து, அதில் இருக்கும் யூரியா தனியாகப் பிரிந்து கால்சியம் கார்பனேட் உற்பத்தியாகிறது. அது இறுதியாக செங்கல்போல் இறுகுகிறது. அதனை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு எந்த வடிவத்திற்கும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெப்பமயம் ஆவதைப் பற்றி விவாதங்களும் கருத்தரங்குகளும் நடந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவமாகிறது. இதில் மிகமுக்கியமானது, இந்த செங்கல் எந்த அளவிற்கு இறுக்கமாக வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.
சில வருடங்களுக்குமுன் அமெரிக்கா இதற்கான அடியை எடுத்து வைத்தது. ஆனால், அது முழுக்க செயற்கை முறையில் அமைந்தது. ஆனால் ஆப்ரிக்கா கேப் டவுன் பல்கலைக்கழக மாணவர்களின் தயாரிப்பு முழுக்க முழுக்க மனித சிறுநீரில் இருந்து இயற்கையான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கலைத் தயாரிக்கும் செயல்முறையின்போது இதனுடன் சேர்ந்து கூடுதலாக இரண்டு துணைப் பொருள்களாக நைட்ரஜனும், பொட்டாசியமும் உருவாகிறது. இந்த இரண்டும் உரம் தயாரிப்பதில் முக்கிய மூலக்கூறுகளாக இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சியின் மேற்பார்வையாளர் டைலோன் ரேண்டல், மனித சிறுநீரை திரவத் தங்கம் என்று குறிப்பிடுகிறார். மேலும் ஏன் அதை அப்படி குறிப்பிடுகிறார் என்பதன் விளக்கத்தையும் தருகிறார். இயற்கையாகவே மனித சிறுநீரில் 1%-க்கும் குறைவான தேவையற்ற நீர், 80% நைட்ரஜன், 56% பாஸ்ப்பரஸ் மற்றும் 63% பொட்டாசியம் இருக்கிறது என்று விவரிக்கிறார்.
இந்த கண்டுபிடிப்பிலே மிகமுக்கியமானது, இயற்கை செங்கலை உருவாக்கும் செயல்முறையில் முதலில் திட நிலை உரமும், அதன்பின் இயற்கை செங்கலும் மூன்றாவதாக திரவ நிலை உரமும் உற்பத்தியாகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒரு கண்டுபிடிப்பில் மூன்று பொருட்களும் மேலும் மூலப்பொருள் சிறிதும் வீணாகாமல் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதும் தனி சிறப்பு.