Skip to main content

அத்திவரதருக்காக இரவு பகலாக பணியாற்றும் கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்கள்...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வதால் அந்த சிறிய நகரம் திணறுகிறது. போலீசார் பெரும்பாடு படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் திக்குமுக்காடுகிறது. 
 

நாற்பது ஆண்டுகள் கழித்து தண்ணீரில் இருந்து வெளியே வரும் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்று தினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் குவிக்கின்றனர். அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் நம் கண்ணுக்குத் தெரியாத பலர் அத்திவரதர் தரிசன நாட்களில் பணியாற்றி வருகின்றனர். 
 

தினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை நகராட்சி தொழிலாளர்கள் அகற்றுகின்றனர். இந்தப் பணியில் அவர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள், குளியல் அறைகள் போன்றவற்றையும் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்னர். மேலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளிலும், பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 


 

athi_varadar_darshan_kanchipuram fff


பக்தர்கள் வருவதற்கு ஒரு வழி, திரும்ப செல்வதற்கு ஒரு வழி என்பதால் இரு பாதைகளிலும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் வரும் பக்தர்கள் காலணிகளை விட்டு செல்வதால் இதுவரை 3 டன் அளவுக்கு அவை குவிந்துகிடந்தது. இவற்றை அகற்ற அவர்கள் பெரும்பாடுபட்டனர். 
 

காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள கூட்ட நெரிசலில் தண்ணீர் லாரி வருவது மிகவும் சிரமம். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளுக்கு இரவு 12 மணிக்கு மேல் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கு அந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்காக ஆர்வோ வாட்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


 

24 மணி நேரமும் மின்சாரம் தொடர்ந்து இருப்பதற்கு மின்சாரத்துறை பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 8 யூனிட்டாக பிரிந்து பணியாற்றி வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் காஞ்சிபுரம் எல்லையில் நிறுத்தப்படுவதால் உள்ளூர், வெளியூர் வாகனங்களை ஏற்பாடு செய்து பொதுமக்கள் கோவில் அருகில் கொண்டுவந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மினிபஸ்களும் விடப்பட்டுள்ளது. 
 

மேலும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் செல்வதற்கான பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தன்னார்வலர்களும் பக்தர்களின் உதவிக்காக சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார்.


 

athi_varadar_darshan_kanchipuram



திருப்பதியில் தினந்தோறும் கூட்டம் வரும். அதற்கு தனி பாதுகாப்பு அதிகாரிகள் என நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். நம்ம ஊரில் ஒரு நாள் திருவிழா, இரண்டு நாள் திருவிழா என நடக்கும். அதற்கே போலீசார் திணறுவார்கள். ஆனால் இங்கு தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் கலெக்டர் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செல்வது மிகப்பெரிய கஷ்டம். ஆகையால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று வருவதால், எந்த கலெக்டருக்கும் இதுபோன்ற கூட்டத்தை சமாளிக்கும் அனுபவம் இருந்திருக்காது என்கின்றனர் காஞ்சிரத்திற்கு வரும் பக்தர்கள். மேலும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். 


 

எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் பரிந்துரை கடிதங்கள் கலெக்டர் ஆபிசில் குவிகிறது. டோனர் பாஸ், விவிஐபி பாஸ்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கமிசன் அடிக்கப்படுவதாகவும் புகார் கிடைக்க கலெக்டர் பொன்னையா இதுபற்றி ஆய்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது. 
 

திருவள்ளூர் மாவட்ட ஏஎஸ்பி சந்திரசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களை சைரன் காரில் அழைத்து வந்து, சாமி தரிசனம் செய்ய வைப்பதும், தனி வசூல் நடப்பதும் கலெக்டருக்கு தெரிய வந்ததும், கோவில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடாது என ஏஎஸ்பி வெளியேற்றப்பட்டார்.  மேலும் சில விஜபிக்கள் வரும்போது சரியாக ஏற்பாடு செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மீது சிலர் குறை சொல்லி வந்தனர். எல்லா கேள்விகளும் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நோக்கி பாய்ந்ததால், அவர் ஆய்வில் ஈடுபட்டார்.


 

athi_varadar_darshan_kanchipuram ccc


அப்போது காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவர் தன்னுடன் சிலரை நேரடியாக அழைத்துச் சென்றதால், அவரிடம் கோபத்தை காட்டியுள்ளார் கலெக்டர் பொன்னையா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 
 

இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர், இரவு பகல் பாராமல் இயற்கை உபாதைகள் கழிக்க வழியில்லாமல் ஆண் - பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலெக்டர் இப்படி பேசலாமா என்று கண்டித்தனர். 
 

அதே நேரத்தில் டோனர் பாஸை போலீஸ் கிழித்ததால் ஒரு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோயில் உள்ளே உள்ள மருத்துவக்குழுவினரின் பாஸ் கிழித்ததை கண்டித்து சுகாதார துறையினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நடுரோட்டில் ஆட்டோவை விறகு கட்டையால் தாக்கியதில் ஆட்டோவே சேதமானது, ரோட்டில் கடை வைத்திருந்த நரிக்குறவரை போலீஸ் தாக்கிய வீடியோவும் வைரலானது. 
 

40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். ஊர்கூடி இழுத்தால்தான் தேர் அதன் இடத்திற்கு சென்று அடையும் என்பார்கள். அதைப்போல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.