சிறந்த மாநிலங்களவை பெண் உறுப்பினர் (2018) என்ற பெருமையை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பெற்றுள்ளார். லோக்மட் நிறுவனம் இதை அறிவித்துள்ளது. முன்னாள் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக்கொண்ட 10 பேர் அடங்கிய குழு கனிமொழியை தேர்ந்தெடுத்துள்ளது. வரும் 13ம் தேதி (டிச.13) மாலை 6 மணிக்கு டெல்லியிலுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார். கனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தியாகவும் திகழ்வதாக லோக்மட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது, எழுப்பிய பிரச்சனைகள், நடந்து கொண்ட விதம், நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து கொண்ட விதம் என்று பல விஷயங்களை மையப்படுத்தி இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் - ராஜாத்தியம்மாள் தம்பதியினரின் மகளான கனிமொழி பள்ளிக்கல்வியை சர்ச் பார்க் மற்றும் ப்ரசன்டேஷன் கான்வென்ட் ஆகிய பள்ளிகளில் படித்தார். முதுகலை வணிகவியலை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். சிறுவயதிலிருந்தே இலக்கியம் மற்றும் இதழியலில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். தி இந்துவில் துணை ஆசிரியராக தொடக்கத்தில் பணியாற்றிய இவர் குங்குமம் மற்றும் தமிழ் முரசிலும் பணியாற்றியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்ற இணையதள இதழையும் நடத்தி வருகிறார். கருவறை வாசனை, அகத்திணை போன்ற கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவருக்கு குறும்படம் இயக்கும் ஆர்வம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர திமுக உயர்நிலை செயல்திட்ட குழு, திமுகவின் மகளிரணிச் செயலாளர் மாநிலங்களவை திமுக குழுத்தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் இருக்கிறார்.
2ஜி அலைக்கற்றை வழக்கில் மே 20, 2011ல் கைதாகி திகார் சிறையில் இருந்தார். அதன்பின் நவம்பர் 28, 2011ல் பிணையில் வெளிவந்தார். டிசம்பர் 2017ல் அரசு தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய தவறியதாகக்கூறி 2ஜி அலைக்கற்றை வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைந்தார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விருதும் அதன் பொருட்டு குவியும் வாழ்த்துகளும் கனிமொழிக்கு பெருமகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.