Skip to main content

‘தமிழக வெற்றி கழகம்’ - திட்டம் என்ன? 

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
'Tamilaka Vetri Kazhagam' - What is the plan?

‘தமிழக வெற்றி கழகம்’ எனும் பெயரில் தனது அரசியல் கட்சியைத் துவக்கிய நடிகர் விஜய், அக்கட்சியின் முதற்செயற்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். இதற்கு பாராட்டுதல்கள், வாழ்த்துகள், விமர்சனங்கள் வரிசை கட்டிக்கொண்டு எதிரொலித்தபடி இருக்கின்றன. யாருடைய வாக்குகளை அவர் அறுவடை செய்யப்போகிறார்? எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்? பா.ஜ.க.வின் பின்னணியில்தான் கட்சியை இப்போதே பதிவு செய்கிறார் என்றெல்லாம் ஆராயத் தொடங்கிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘கோட்' படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார் விஜய்.

இப்படி பல்வேறு விஷயங்கள் விஜய்யை சுற்றி வட்டமடிக்கும் நிலையில் விஜய்யின் புதிய அவதாரம் குறித்து பலதரப்பில் விசாரித்தோம். பல்வேறு தகவல்கள் கிடைத்தன. தற்போதைய சூழலில் தமிழகத்தில் தி.மு.க.வும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் தவிர்த்துப் பார்த்தால் ஆளுமைமிக்க தலைவர்கள் யாரும் இல்லாத நிலையே இருக்கிறது. இதனை பயன்படுத்தியே, சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை தொடங்கி, அதனை வெளிப்படையாக அறிவித்ததுமல்லாமல் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யவும் விண்ணப்பித்திருக்கிறார் விஜய்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போதே கட்சியைத் துவக்குகிறார் எனில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக மறைமுகமாக உதவுகிறாரா? என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அவர்களிடம் நாம் பேசியபோது, "சட்டமன்றத் தேர்தலுக்குத்தான் நான் வருவேன் என நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அவர் கட்சியை பதிவு செய்ய துணிந்ததில்தான் சந்தேகம் வருகிறது. சட்டமன்றம்தான் உங்களுடைய இலக்கு என்றால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் கட்சியை ஆரம்பிக்கலாமே! அதைத்தவிர்த்து, ஏன் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும்? ஆக, உங்களுடைய நோக்கம் 2026 என்றாலும் 2024-ல் பா.ஜ.க.வுக்கு உதவ வேண்டும் என்பதுதான்.

அதாவது, விஜய்யின் ரசிகர்கள் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். ரசிகர்மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில், அதன் உறுப்பினர்களாக இருப்பவர்கள்கூட தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஓட்டளித்திருக்கிறார்கள். இதில், விஜய்யின் விருப்பம் எது? யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்கிற நிலைப்பாடெல்லாம் எதுவும் அவர்களுக்கு இல்லை. பிடித்த கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அதே பாணியில் தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதே விஜய் மக்கள் இயக்கத்தினரின் நிலைப்பாடாக இருந்தது. இதனை பா.ஜ.க. உணர்ந்திருக்கிறது. அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு விஜய் ரசிகர்களின் வாக்குகள் செல்லாமல் தடுப்பதற்காகவே அரசியல் கட்சி துவக்கம் என்கிற இந்த யுக்தியை விஜய்யை வைத்து பயன்படுத்தியிருக்கிறது பா.ஜ.க.

அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சித் துவக்குவதை அறிவித்துவிட்டால், தனது ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விஜய் சொல்லவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படும். அப்போது, எந்த கட்சி நல்லது என நினைக்கிறீர்களோ அதற்கு வாக்களியுங்கள் என விஜய் சொன்னால், ஏதோ ஒரு கட்சி நல்ல கட்சியாக இருக்கிறது என்று பொருள் வரும். அப்புறம் எதற்கு நீங்கள் ஒரு கட்சியை ஆரம்பித்தீர்கள்? என்கிற கேள்வியும் விமர்சனங்களும் வரும். அதனால், யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று வெளிப்படையாகவும் சொல்ல முடியாது.

அதேசமயம், வெளிப்படையாகச் சொல்லாமல், இந்த தேர்தலில் எனது மக்கள் இயக்கத்தினர் பங்கெடுக்கமாட்டார்கள் என விஜய் சொல்லக்கூடும். அது மக்கள் இயக்கத்தினருக்கு சொல்லப்படும் மறைமுக உத்தரவு. பங்கெடுக்க வேண்டாம் எனச் சொன்னால் வாக்களிக்காதீர்கள் என சொல்கிற பொருள்தான். அதனால், அவருடைய ரசிகர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள்.

இதனால் இதுவரை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக்கு வாக்களித்த அவரது ரசிகர்கள் வாக்களிக்காமல் தவிர்த்தால் அது பா.ஜ.க.வுக்கு சாதகம். ஒரு கட்சியை ஆதரித்தால்தான் அது சாதகம் என்பதல்ல; அக்கட்சியின் எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் வாக்குகளை தடுத்தாலும் அது அக்கட்சிக்கு சாதகம்தான். இந்த கோணத்தில்தான் விஜய்யின் அரசியல் இருக்கிறது. கட்சியை ஆரம்பித்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு வரமாட்டேன் என சொல்வதன் பின்னணியின் யுக்தியும் இதுதான். ஆக, கட்சியை அவசர, அவசரமாக பதிவு செய்திருப்பதின் நோக்கமே, பா.ஜ.க.வுக்கு சாதகமான களம் உருவாகவேண்டும் என்பதுதான்.

இல்லையெனில், கட்சியின் பெயராக ஒரே ஒரு பெயரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கமுடியுமா? பொதுவாக, புதிதாக ஒரு கட்சியை பதிவு செய்வதாக இருந்தால், தாங்கள் விரும்பும் பெயரையும், அதற்கு மாற்றாக 2 பெயர்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிடுவார்கள். ஆனால், விஜய், ஒரே ஒரு பெயரை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் அந்த ஒரு பெயரும் ஓ.கே. ஆகிவிடும் என்பதுதானே? தேர்தல் ஆணையத்தின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகாது. தலைமை தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான். அதனால், எப்படி சுத்திச் சுத்தி வளைத்துப் பார்த்தாலும் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுகிற யுக்திதான் அவசரம் அவசரமாக அரசியல் கட்சியை அறிவித்தது'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்கத்தினரிடம் விசாரித்தபோது, "விஜய் தனது அறிக்கையில் தனது அரசியல் நிலைப்பாட்டினை தெளிவாக விவரித்திருக்கிறார். குறிப்பாக, ஆட்சி அதிகார அரசியல், ஊழல் அரசியல், மத அரசியல், சாதி அரசியல் ஆகியவைகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதன்மூலம், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., சாதி கட்சிகள் என பல கட்சிகளையும் தாக்கியுள்ளார். அதனால் தி.மு.க., அ.தி.மு.க.வை எப்படி பார்க்கிறாரோ அப்படித்தான் பா.ஜ.க.வையும் பார்க்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்ப்பதற்கும், இப்போதே கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்தற்கும் காரணங்கள் நிறைய இருக்கிறது. ஒரு தேர்தலில் போட்டியிடுவது, நேரடியாகக் களமிறங்குவது அவ்வளவு சாதாரண விசயம் கிடையாது. அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பை வலிமையாக வைத்துள்ள தி.மு.க.வே, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் வேலையில் இறங்கிவிட்டது. அதுவும் ஆளும் கட்சியாக இருக்கும் சூழலிலும்கூட.

அப்படியிருக்கும்போது தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் மிக மிகக் குறுகிய கால சூழலில் ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாது. அதனால், குறைந்தபட்சம் ஒன்றரை வருடங்களாவது தேவை என உணர்ந்துதான், கட்சியை முதலில் பதிவு செய்வோம்; கட்சியை பதிவு செய்துவிட்டு, மக்கள் இயக்கத்தினரை அரசியல் கட்டமைப்புக்குள் நிறுவுவதற்கான வேலையைத் துவக்கலாம் என்கிற திட்டத்தில்தான் பதிவு செய்ய முன்வந்தார் விஜய்.

இதுமட்டுமல்ல; இந்திய தேர்தல் ஆணையம் திடீர் திடீரென புதிய புதிய விதிகளைக் கொண்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்னும் பல விதிகளைக் கொண்டு வரலாம். அதனால், அந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே தற்போதைய விதிகளின்படி முதலில் விண்ணப்பித்துவிடுவோம் என்கிற கோணத்தில்தான் பதிவு செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்.

அதேபோல, ஒரே ஒரு பெயரை மட்டும் வைத்து எப்படி விண்ணப்பிக்க முடியும்? பா.ஜ.க.வின் உதவியில்லாமல் தேர்தல் ஆணையத்தில் இன்புளூயன்ஸ் செய்திட முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். உண்மையில், கட்சியின் முக்கிய பெயரோடு மேலும் சில பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்திய அளவில் ஆராய்ந்தபோது, தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சி செயல்படவில்லை. தேர்தல் ஆணையத்திலும் அந்த பெயரில் யாரும் விண்ணப்பிக்கவோ, பதிவு செய்யவோ இல்லை.

இதையெல்லாம் ஆராய்ந்த பிறகுதான், ஒரே ஒரு பெயர் போதும் என முடிவு செய்து அதனையே குறிப்பிட்டிருக்கிறார் விஜய். இதுதான் உண்மை. இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்; வாக்களிக்கக் கூடாது என்றெல்லாம் விஜய் சொல்லப்போவதில்லை. இப்படியிருக்க, பா.ஜ.க.வுக்காக அவர் இயங்குகிறார்; பா.ஜ.க. அவரை இயக்குகிறது என்பதெல்லாம் அவரது வருகையால் பயப்படும் கட்சிகளின் உளறல்; சதி. மாற்று அரசியலை முன் வைத்து வருகிறார். வரும்போதே இல்லாத குற்றச்சாட்டுகளை விமர்சனங்களாக வைத்து அவரை முடக்கிவிடாதீர்கள். அவர் சரியானவர் இல்லை எனில் மக்கள் நிராகரிக்கட்டும்; விமர்சனம் எனும் பெயரில் இல்லாத ஒரு பூச்சாண்டியை (பா.ஜ.க.) காட்டி அவரது அரசியலை கொச்சைப்படுத்தாதீர்கள்'' என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் விஜய் மக்கள் இயக்கத்தினர்.