Skip to main content

ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புப் பட்டயங்கள் கண்டுபிடிப்பு!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

alwarthirunagari temple discovered thirumalai naicker copper plate

 

திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு நூலாக்கத் திட்டத்தின் பணிக் குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணை ஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 4 செப்புப்பட்டயங்களையும் கண்டறிந்தனர். இதில் இரண்டு மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது ஆகும். செப்புப் பட்டயங்கள் இவ்வூரிலுள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமானவை ஆகும்.

 

இச்செப்புப்பட்டயங்களைப் படித்து ஆய்வு செய்த சுவடியியல் அறிஞர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, "இவை கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் இரண்டு பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும் மற்ற இரண்டு பட்டயங்கள் கோயில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டவை ஆகும்.

 

முதல் பட்டயம் கி.பி.1637-ம் ஆண்டைச் சேர்ந்தது. இது திருமலை நாயக்கர், வடமலையப்ப பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாக காந்தீஸ்வரம் இறைவன் ஏகாந்த லிங்கத்துக்கு சிறு காலைச் சந்திப் பூசையில் அபிஷேகமும் நைவேத்தியம் செய்யப்பட்ட வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின்படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தது ஆகும். 1944-ல் வெளியிடப்பட்ட "திருமலை நாயக்கர் செப்பேடுகள்" என்ற நூலில் இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2-வது பட்டயத்தில் கி.பி.1671-ல் காந்தீஸ்வரம் சுவாமி ஏகாந்த லிங்கத்துக்கு பிரதிநாமமாகவும், மகாஜனங்கள், திருமலை நாயக்கர், வடமலையப்ப பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாகவும் விளங்க தர்மதானப் பிரமாணம் வழங்க வல்லநாட்டு நாட்டவருக்கு வடமலையப்ப பிள்ளை கட்டளையிட்டமையால் அவர்கள் கோயிலுக்கு வழங்கிய நில தானம் மற்றும் அதன் எல்லை பற்றி கூறப்பட்டுள்ளது. இரு பட்டயங்களிலும் வழங்கப்பட்ட தானத்தை கெடுக்க நினைப்பவர்கள் நதிக்கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என இறுதியில் குறிப்பிடப்படுகிறது. இவற்றை சிதம்பரநாதன், தன்மகுட்டி முதலியார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

 

3-வது பட்டயம் கி.பி.1866 ஜனவரி 23-ல் எழுதப்பட்டுள்ளது. இதில் இக்கோயில் தர்மகர்த்தா ஆழ்வார்திருநகர் கோகில சங்கரமூர்த்தி முதலியாரின் மகள்கள் அங்கரத்தையம்மை, ஆவுடையம்மை ஆகிய இருவரும் அவர்களின் சந்ததியினரும் கோயிலில் நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் நாலாம் திருநாள் மண்டகப்படியை தொடர்ந்து வழங்கி நடத்திட வழிவகை செய்யப்பட்டதையும், இக்குடும்பத்தார் ஏகாந்தலிங்க சுவாமிக்கு வெள்ளித் தகடு பதித்த ரிஷப வாகனம் செய்து கொடுத்ததையும், ரிஷப வாகனம் பாதுகாப்பு அறையின் திறவுகோல் ஒன்று ஆவுடையம்மையின் வளர்ப்பு மகன் தானப்ப முதலியார் என்ற சங்கரமூர்த்தி முதலியாரின் வசம் இருந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டயம் 2 படிகள் உருவாக்கப்பட்டதையும், இதை நயினான் ஆசாரி மகன் சுவந்தாதி ஆசாரி எழுதியதையும் தெரிவிக்கிறது.

 

4-வது பட்டயம் கி.பி.1868 பிப்ரவரி 3-ல் எழுதப்பட்டுள்ளது. இது காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலின் விசாரணை கர்த்தாக்களும், ஊர் மக்களும் ஆழ்வார் திருநகரில் இருக்கும் பிச்சன் செட்டியார் குமாரர் நல்லகண்ணு செட்டியார், சர்க்கரை சுடலைமுத்து செட்டியார் குமாரர் ஆழ்வாரய்யன் செட்டியார் ஆகிய இருவரின் பரம்பரையினர் ஏழாம் திருநாள் முதற் கால மண்டகப்படியை வழங்கி நடத்தவும் பட்டு கட்டும் மரியாதை பெற்றுக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது குறித்து கூறுகிறது. மேற்படி குடும்பத்தார் சபாநாயகர் (இறைவன்) எழுந்தருள சப்பரம் செய்து கொடுத்தது பற்றியும் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்ட அறையின் 2 சாவிகள் மேற்படி குடும்பத்தார் வசம் இருந்தது பற்றியும் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. இதை அச்சு பத்திரமாக எழுதியவர் ஆதிநாதரையர் குமாரர் சுப்பையர் என்றும் தெரிவிக்கிறது" என அவர் தெரிவித்தார்.

alwarthirunagari temple discovered thirumalai naicker copper plate

 

மேலும், "பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் பட்டயங்களைப் பாதுகாக்கும் இத்திட்டப் பணி தடையின்றி நடந்திட நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, பதிப்பாசிரியர் ஜெ.சசிக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக"  கூறினார்.