Skip to main content

கூட்டணிக்குள் பூகம்பம்! -திணறும் கழகங்கள்!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

வேட்பாளர்களுக்கு எதிரான அதிருப்திகள், தேர்தல் தேதிக்கு முன்பு முடிவுக்கு வந்துவிடுமா என்ற கவலையில் இருக்கின்றன இரண்டு பெரிய கூட் டணிகளும். ஆளுந்தரப்பின் கூட்டணியில் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் இல்லாதது எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ், பிரேமலதா தொடங்கி பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைகளையே பயமுறுத்துகிறது.

 

admk



தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, "பா.ஜ.க.வுக்கு 4 தென்மாவட்டத்திலேயே    4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிட்டிங் கன்னியாகுமரி தவிர மற்ற மூன்றிலும் ஒத்துழைப்பு இல்லை. இதில் நெல்லையை சேர்ந்த நயினார்  நாகேந்திரனை ராமநாதபுரத்தில் நிறுத்தியதை பா.ஜ. க.வினரே விரும்பவில்லை.  நீலகிரியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கிவிட்டு கோவையை தங்கள் வசம் வைத்துக் கொள்ள நினைத்த அமைச்சர் வேலுமணி, அது நடக்காததால், ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் கோவையில் எங்கள் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தடுமாறி வருகிறார். இதெல்லாம் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டுள்ளது'' என்கிறார்கள்.

பா.ம.க.வின் மாநில நிர்வாகிகளிடம்  விசாரித்த போது, "தி.மு.க. எங்களை எதிர்க்கும் 6 தொகுதிகளுடன், உதயசூரியன் சின்னத்தில் வி.சி.க. போட்டியிடும் விழுப்புரத்தை தீவிரமாக குறி வைத்துள்ளோம். விழுப்புரத்தைப் பொறுத்தவரை சிறுத்தைகள் மட்டுமின்றி  தி.மு.க. பொன்முடியும் பாமக தலைமைக்கு எதிரிதான். இரண்டு எதிரிகளை ஒன்றாக வீழ்த்த அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஒத்துழைப்பு அவசியம். டாக்டர் ராமதாஸ் இதை எதிர்பார்க்கும் நிலையிலும், லோக்கல் அ.தி.மு.கவினர் சிறுத்தைகளைப் போலவே பா.ம.க.வையும் எதிரியாகப் பார்க்கிறார்கள். அமைச்சர் சமாதானப்படுத்தியும் அ.தி.மு.கவினர் ஒத்துழைப்பில்லை. 

 

dmk



நேரடி செல்வாக்கு குறைவான திண்டுக்கல்லில் பா.ம.க.வுக்கு திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மருதராஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஒத்துழைப்பு தராமல் ஆளுக்கு ஒரு திசையில் முறுக்கிக்கொண்டிருக்கிறார்கள். விழுப்புரம்  மாவட்ட தே.மு.தி.க.வினர் எல்லாம் கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் சுதீசுக்கு வேலைப்பார்க்க சென்றுவிட்டனர். எங்கள் தலைமை, பிரேமலதாவிடமும் சுதீசிடமும் பேசியுள்ளது. "சரி செய்கிறோம்' என சொன்ன சுதீஷ், வடசென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் பா.ம.க. ஒத்துழையாமை நடத்துவதை பதிலுக்கு சுட்டிக்காட்டியிருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் களமிறங்கியுள்ள எங்கள் வேட்பாளர் வைத்தியலிங்கம், பிரேமலதாவை நேரில் சந்தித்தும், தே.மு.தி.க.வின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை'' என்கிறார்கள். தே.மு.தி.க.வின் 4 தொகுதிகளில் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற அசைன்மெண்ட்டை தனது கட்சியினருக்குத் தந்திருக்கும் பிரேமலதாவை திருவள்ளூர் அ.தி.மு.க. சிட்டிங் எம்.பி. வேணுகோபால் சந்தித்து புலம்பியும் பயனில்லாததால், எடப்பாடியிடமும் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.  இதனால் எடப்பாடியும் அப்செட். 

அ.தி.மு.க.வுக்குள்ளேயே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, "ஓ.பி.எஸ்.சின் மகனுக்கு சீட் கொடுத்ததால்தான் எல்லோரும் வாரிசுகளுக்கு சீட் கேட்டனர். அதுபோல, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நடவடிக்கைக்கு உள்ளாவார் என எதிர்பார்க் கப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மா.செ. பதவி தந்ததால் கொங்கு மண்டலமே எடப்பாடி மீது வெறுப்பில் இருக்கிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததையும் 90 சதவீத அ.தி.மு.க.வினர் விரும்பவில்லை. அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளிலும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். குரூப்பிடையே ஒத்துழைப்பில்லை'' என்கிறார் அழுத்தமாக.

 

ponmudi



தி.மு.க.விலும் 8 தொகுதிகளில் அதிருப்தி வெளிப்படுகிறது. துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் டாமினேஷனால் அதிருப்தியிலுள்ள உடன்பிறப்புகளின் ஒத்துழையாமையால் வேலூர், கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் அவர்களது வாரிசுகள் திணறுகிறார்கள். பொள்ளாச்சி சீட் கிடைக்காத அதிருப்தி பொங்கலூர் பழனிசாமி, அவரது மகன் பாரியிடம் இருப்பதால் பொள்ளாச்சி தி.மு.க. வேட்பாளருக்கும், கோவை சி.பி.எம். வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு இல்லையாம். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மகனுக்கு சீட் கிடைக்காததால், வீரபாண்டியார் ஆதரவு வன்னியர்கள் அ.ம.மு.க. செல்வம் பக்கம் நிற்கிறார்கள். தயாநிதிமாறன் போட்டியிடும் மத்திய சென்னை உடன்பிறப்புகளின் அதிருப்தி செயல்வீரர்கள் கூட்டத்திலேயே எதிரொலித்தது. 

கூட்டணியில் உள்ள காங்கிரசிலோ கோஷ்டிப் பூசல்கள் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்.  சீட் ஒதுக்கீட்டின்போதே, புது முகங்களுக்குத்தான் வாய்ப்பு என ராகுல் தந்த உத்தரவாதத்தை நினைவூட்டும் தி.மு.க.வினர், காங்கிரஸ் தொகுதிகளில் ஒன்று கூட புதுமுகம் இல்லையே என்கின்றனர். தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் செலவுகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பதும், அதனை நிறைவேற்ற முடியாமல் ஓரிரு வேட்பாளர்கள் திணறுவதும் தொடர்கிறது. இது அதிருப்தியை அதிகரிக்கச் செய்கிறது.

சிவகங்கையில் சீட் மறுக்கப்பட்ட சுதர்சன நாச்சியப்பன், ப.சி. தரப்பை வெளிப்படையாகவே புறக்கணித்துள்ளார். இதனால் ப.சி.யின் மகனும் சிவகங்கை வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம், மு.க.ஸ்டாலினை 24-ந்தேதி இரவு 10 மணிக்கு சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அதேபோல, சிட்டிங் எம்.எல்.ஏ. வசந்தகுமாருக்கு கன்னியாகுமரியில் சீட் தந்து, தேவையின்றி சட்டமன்ற பலத்தைக் குறைப்பதை தி.மு.க. ரசிக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஒருவர் போனில், காங்கிரஸ் செல்லக்குமாரிடம் போஸ்டர் சுவர் விளம்பரத்துக்கு 10 லட்சம் கேட்க, "அவ்வளவு பணம் என்ன மரத்தில் காய்க்கிறதா?' என செல்லக்குமார் சொல்ல, எதிர்முனையிலும் காரசார வார்த்தைகள். விழுப்புரம் தி.மு.கவினர் பொன்முடி மகன் போட்டியிடும் கள்ளக்குறிச்சிக்குப் போய்விட்டதால் விழுப்புரம் வி.சி.க.வினரும் டென்ஷனில் உள்ளனர்.