டெல்லியில் உள்ள தொலைத்தொடர்பு தொடர்பான சிக்கல்களை விசாரிக்கும் ஆணையம் தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் மீது அபராதம் விதித்திருக்கிறது. இந்த நடவடிக்கை அரசு கேபிள் கம்பெனியை மூடுவதற்கான முன்னோடி என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.
மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதுபற்றி சத்யம் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 11-ஆம் தேதி விவாத நிகழ்ச்சியில் பேசினார் என்பதற்காக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் மீது கிரிமினல் வழக்கு ஒன்றை சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் பரிந்துரையின் பேரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்தார். அத்துடன் அந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய சத்யம் டி.வி.யை அரசு கேபிளில் தெரியாதவாறு துண்டித்தார்.
இதை எதிர்த்து சத்யம் டி.வி.யின் பார்வையாளர்கள் மூன்றுபேர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கு தொடரப்பட்டவுடன் அதை மறைக்க நினைத்த தமிழக அரசு, அரசு கேபிளில் கட்டணம் குறைக்கப்படும் என அறிவித்தது. அத்துடன் சத்யம் டி.வி.யில் அந்த விவாதத்தை நடத்திய அதன் பொறுப்பாசிரியர் அரவிந்தாக்ஷனை வெளியேற்ற வேண்டும் என்கிற கண்டிஷனோடு மறுபடியும் சத்யம் டி.வி.யை அரசு கேபிளில் தெரியவைத்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த ஆணையம், தன்னிச்சையாக ஒரு டி.வி.யின் ஒளிபரப்பை முடக் கியதால் அரசு கேபிளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது என்கிறது தொலைக்காட்சித்துறை வட்டாரம்.
இதுபற்றி சத்யம் டி.வி. பொறுப்பாசிரியர் அரவிந்தாக் ஷனை கேட்டோம். "அரசு கேபிளில் சத்யம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதை மறுபடியும் கொடுத்துவிட்டார்கள்'' என்று நிலவரத்தைச் சொன்னார். சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் "டைம்ஸ் ஆஃப் இண்டியா' சங்கர், ""தனியார் கையில் கேபிள் டி.வி. இருந்த போது அவர்கள் துண்டிப்பு வேலைகளைச் செய் தார்கள் என்பதற்காகத்தான் அரசு கேபிள் டி.வி. உதயமானது. அரசு கேபிள் டி.வி. சத்யம் டி.வி. மீது இதுபோன்ற துண்டிப்பு நடவடிக்கையை மேற் கொண்டதால் சத்யம் டி.வி.யின் பார்வையாளர்கள் ஆணையத்தில் வழக்குப் போட்டு அரசு கேபிள் டி.வி.க்கு அபராதம் விதிக்க வைத்திருக்கிறார்கள். இனிமேலாவது அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.
"இதுபோன்ற துண்டிப்பு நடவடிக்கைகளை யார் செய்வது?' என தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனில் பணிபுரிபவர்களிடம் கேட்டோம். ""இந்தியாவில் தமிழக அரசைத் தவிர வேறெந்த மாநில அரசும் கேபிள் டி.வி.யை நடத்தவில்லை. இந்திய அரசின் தொலைத்தொடர்பு கொள்கையை நடைமுறைப்படுத்தும் டெலிபோன் ரெகுலேட்டர் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் சட்டதிட்டங்களிலே "எந்த மாநில அரசும் கேபிள் டி.வி. நடத் தக்கூடாது' என தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழக அரசு கேபிள் டி.வி. நடத்துவதற்காக தொலைத்தொடர்பு ரெகுலேட்டர் அத்தாரிட்டி (டிராய்), ஒரு தற்காலிக லைசென்ஸ்தான் தந்திருக்கிறது. அரசு கேபிள் மீது புகார்கள் வருமானால் அந்த தற்காலிக லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இதன் மேனேஜிங் டைரக்டரான சங்கர் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு கீழே 11 டைரக்டர்கள் இயங்குகிறார்கள். அதில் இரண்டுபேர் உள் ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் கீழ் இயங்கும் அதிகாரிகள். ஒருவர் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளர், இன்னொருவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முதன்மைச் செயலாளர். இவர்களைத் தவிர தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரி, எல்காட் நிறுவன எம்.டி., நிதித்துறை கூடுதல் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் அமைச்சர் வேலுமணி சொல்வதைச் செய்கிறார்கள். வேலுமணிதான் தந்தி டி.வி., புதிய தலைமுறை, சன் டி.வி., காவேரி டி.வி. ஆகியவற்றை அரசு கேபிளில் முன் வரிசையிலிருந்து பின்வரிசைக்கு கொண்டு சென்றவர். அவர்தான் சத்யம் டி.வி.யை அரசு கேபிள் இணைப்பிலிருந்தே நீக்கியவர். சத்யம் டி.வி. நிர்வாகிகள் அமைச்சரிடம் பேசியபோது, "பொறுப்பாசிரியர் அரவிந்தாக்ஷனை நீக்குங்கள்' என கட்டளையே போட்டார் என்கிறது கேபிள் டி.வி. வட்டாரம்.
இப்படி எந்த டி.வி.யில் யார் வேலை செய்யவேண்டும் என அரசு உட்பட வெளியிலிருப்பவர்கள் தீர்மானிப்பது தவறு. காவேரி டி.வி.யில் வேலை பார்த்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியான கருத்து ஒன்றிற்காக வேலையை விட்டு விலகியுள்ளார். ஊடகம் என்பது சுதந்திரமானது, அதனால்தான் வெளிநாட்டு முதலீட்டில் ஊடகங்கள் வந்தாலும் அதன் ஆசிரியர் குழு இந்தியர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற நடைமுறை இந்தியாவில் இருக்கிறது. அதன் அடிப்படையே தெரியாமல் எடப்பாடி அரசு நடந்துகொள்கிறது' என கொந்தளிக்கிறார்கள் சென்னை பத்திரிகையாளர்கள்.