அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இது இந்திய பொருளாதாரத்தையே பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அதானி குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷிடம் பேசினோம். அவர் பேசியதாவது; “2014ம் ஆண்டு அதானியின் மகன் திருமணம் நடந்தது. இதில் பல்வேறு பணக்காரர்கள் வந்து சென்றனர். ஆனால் நரேந்திர மோடி, மூன்று தினங்களுக்கு அங்கேயே தங்கி அதானி மகன் திருமண நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்றார். அதேசமயம், சமீபத்தில் மோடியின் தாய் காலமானபோது, அவரது இறுதிச் சடங்குகளை சில மணி நேரத்திற்குள்ளாக முடித்துவிட்டார். நரேந்திர மோடியுடன் பிறந்தவர்கள் ஆறு நபர்கள். இவர் முப்பது வருடங்களாக குடும்பத்துடன் இல்லை என்று சொன்னவர். அப்போ, இத்தனை ஆண்டுகாலம் அவரது தாயை பராமரித்து வந்த அவரது அண்ணன் உட்பட அவருடன் பிறந்தவர்கள் வந்து சடங்குகளை செய்திருக்க வேண்டும். ஆனால், நாம் அந்த நிகழ்வில் வெறும் மோடியை மட்டுமே பார்த்தோம்.
சில முக்கிய கேள்விகளை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். அதில் குறிப்பாக, ‘நீங்கள் (மோடி), இஸ்ரேல், இலங்கை, வங்கதேசம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்ததும் அதானிக்கு வர்த்தகம் கிடைக்கிறது. அப்படியென்றால் உங்களுக்கும் அதானிக்கும் இடையே என்ன இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், 8ம் தேதி ஏறத்தாழ ஒன்பது மணி நேரம் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, எங்கையாவது ஒரு இடத்தில் அதானியின் பெயரை எடுத்திருப்பாரா?” என்று தெரிவித்தார்.