Skip to main content

கொடிகட்டிப்பறக்கும் சாராய வியாபாரம் - அதிரடி காட்டும் நாகை புது எஸ்,பி.

Published on 14/08/2018 | Edited on 15/08/2018
br


 
நாகை மாவட்டத்தில் போலீஸார் 2 நாள்கள் மேற்கொண்ட தீவிர சாராய சோதனையின் போது, மதுவிலக்கு குற்றங்களின் கீழ் 54 பேர் கைது செய்யப்பட்டு, 6 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமார் உத்தரவின் பேரில், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய காவல் உள்கோட்டங்களில்  போலீஸார் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர். மதுவிலக்குக் குற்றக் கண்காணிப்புக்காக அமைக்கப்பட்ட 15 தனிப்படை போலீஸார் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர். 

 

இந்தச் சோதனைகளின் போது, 68 மதுவிலக்குக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 54 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5,966 லிட்டர் சாராயமும், 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மதுவிற்பனை, கடத்தல் போன்ற மதுவிலக்குக் குற்றங்களைத் தடுக்கும் பணிகள் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.  

 

br

 

இது குறித்து சமூக ஆர்வளர் ஒருவர் கூறுகையில், ‘’ நாகைக்கு அருகிலேயே காரைக்கால் இருப்பது சாராய கடத்தல்காரர்களுக்கு சாதகமாகிவிட்டது. ஒரு டூவிலரில் காய்கரிக்காய் வியாபாரம் செய்வதுபோல மது பாட்டில்களை கடத்தி செல்கின்றனர். காரைக்காலில் ஒரு பாட்டிலின் விலை 45 ரூபாய், அதை வாங்கிவந்து தமிழகத்தில் 110 ரூபாய்க்கு விற்கின்றனர். ஒரு நாளுக்கு இரண்டு முறை 100 பாட்டில் வீதம் கடத்துகின்றனர்.  ஒரு முறை கடத்தினால் 6500 ரூபாய் இலகுவாக கிடைத்துவிடுகிறது, இதில் செக்போஸ்டில் இருக்கும் காக்கிகளுக்கு ஒரு நடைக்கு மாமுலாக 500 ரூபாய், எந்த ஏரியாவில் விற்கிறார்களோ அந்த ஏரியா காக்கிகளுக்கு 2000 ரூபாய்  கொடுத்துவிடுகின்றனர். மொபைல் காக்கிகளுக்கு வாரம் 10000 ரூபாய் கொடுத்துவிட்டு, வியாபாரத்தை கனகட்சிதமாக நடத்துகின்றனர்.

 

இப்படி நாகை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு காவல்நிலையத்திற்கு பின்னால், மூன்று இடங்களிலும், திருச்சிற்றம்பலம் பேருந்து நிலையத்திலும், கடலங்குடி கோயில் வாசலிலும், சீர்காழி ஈசானியத்தெருவிலும், என 32 இடங்களில் மதுபாட்டில் வியாபாரம் கனகச்சிதமாக நடக்கிறது, இவை அனைத்தும் காக்கிகளுக்கு நன்றாக தெரியும் ஆனாலும் பிடிக்கவோ, வழக்கு போடவோ மாட்டார்கள், தற்போது மாட்டியவர்கள் அனைவருமே இந்த பட்டியலில் வராதவர்கள். தற்போது வந்திருக்கும் மாவட்ட கன்கானிப்பாளர் துடிப்பாக செயல்படுவது திருப்தியாக இருக்கிறது, அவரையும் மாற்றிவிடுவார்கள் கையூட்டுபெரும் காக்கிகள். ’’என்றார்.

 

காக்கிகளை  குறைசொல்லி என்ன புண்ணியம்,   அரசாங்கமே சாராயம் விற்கிறதே, அவர்களை என்ன செய்ய.... 
 

சார்ந்த செய்திகள்