Skip to main content

மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவரை  வீடு புகுந்து கைது செய்த போலீசார்!

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
b

  

 

பழனியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பகத்சிங்கை பழனி போலீசார் ஞாயிறன்று அதிகாலை அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர். 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து களத்தில் போராடி வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு இந்த அமைப்பின் தலைவர்கள் மீது பல பொய்யான வழக்குகளை போடுவதும், கைது செய்வதும் தொடர் நடவடிக்கையாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக உள்ள பகத்சிங் மீது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு கைது செய்வதும், மிரட்டுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ்பாஸ், உதவித்தொகை, 3 சக்கர வாகனம், உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெற்றுத்தர பகத்சிங் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்குவதில் நிலவும் லஞ்ச ஊழலுக்கு பகத்சிங்கின் போராட்டங்கள் இடையூறாக உள்ளன. இதன் காரணமாகவே கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆத்திரம். பேருந்தில் மாற்றுத்திறனாளிகளின் பஸ்பாஸ் அனுமதிக்கவில்லை என்றால் இரவு 12 மணியானாலும்  பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரைக் கண்டித்து அந்த பேருந்து முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டி போராடக்கூடியவர் பகத்சிங்.  இதன் காரணாக போலீஸ் அதிகாரிகளுக்கும் பகத்சிங்கை பிடிக்கவில்லை. எப்படியாவது பகத்சிங்கை சிறையில் தள்ளி பாடம் கற்றுத்தர வேண்டும் என்று போலீசார் கங்கனம் கட்டிக்கொண்டிருந்தனர்.

கோட்டாட்சியர் அருண்ராஜுக்கும் பழனி உட்கோட்ட பகுதியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் பெரிய தலைவலியாக இருந்தது. கோட்டாட்சியரும், காவல்த்துறையும் பகத்சிங்கை தொடர்ந்து கைது செய்து வந்தனர். இதுவரை பகத்சிங்  மீது 9 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பகத்சிங்கை அனுமதி பெறாமல்  ஒரு வருடத்திற்கு போராடக்கூடாது என்றும்  கோட்டாட்சியர் எச்சரித்தார்.  இது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு வாரண்ட்டும் பிறப்பித்தார். 

இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி சங்கத்தின் மாநில மைய முடிவின்படி பழனி கோட்டாட்சியருடைய இந்த சட்டவிரோத நடவடிக்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் விரோதப் போக்கைக் கண்டித்து  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோட்டாட்சியர் தான் பிறப்பித்த வாரண்டின்படி ஏன் பகத்சிங் இன்னும் ஆஜர் ஆகவில்லை என்று போலீசாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனையடுத்து ஞாயிறன்று பழனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு காலை 7.30க்கு பகத்சிங் வீட்டுக்குள் அத்துமீறிச் சென்று கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று 2 மணி நேரம் வைத்திருந்து பின்னர் கோட்டாட்சியர் வீட்டுக்குச் அழைத்துச்சென்று அவர் முன்பாக ஆஜர்படுத்தினர். அதன் பிறகு அடுத்த ஓராண்டுக்கு முன்னறிவிப்பின்றி எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என்று பிணை முறிவு பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு  11.30 மணிக்கு பகத்சிங்கை விடுவித்தனர். பழனி நகரத்தில் ஏராளமான கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கெல்லாம் இவ்வளவு விரைவாகச் சென்று கொள்ளையர்களையும், கொலையாளிகளையும் கைது செய்யாத போலீசார் மக்கள் போராட்டங்களை நடத்துபவர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்காக போராட்டங்கள் நடத்துபவர்களையும் வேட்டையாடுவது போல தேடித் தேடி பழனி போலீசார் கைது செய்கின்றன. மேலும் ஞாயிறன்று தான் பகத்சிங்கிற்கு பிறந்த தினமாகும். ஒருவரை பிறந்த தினத்தன்றே கைது செய்து சிறையிலடைத்த பெருமை திண்டுக்கல் மாவட்ட போலீசாரையும், பழனி கோட்டாட்சியரையும்தான் சேரும்.

இது சம்மந்தமாக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜனிடம் கேட்டபோது... பழனி கோட்டாட்சியர் அருண்ராஜ் தனக்கு வானளாவ அதிகாரங்கள் உள்ளது போல் கருதிக் கொள்கிறார். இந்த நாட்டின் அவசர நிலை காலத்தில் எப்படி மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வார்களோ அது போல மாற்றுத்திறனாளிகள் சங்கத்தலைவர் பகத்சிங்கை கோட்டாட்சியர்  கைது செய்துள்ளார். இவரது நடவடிக்கையை பார்க்கும் போது இந்த நாடு ஜனநாயக நாடு தானா என்று கேள்வி எழுகிறது.  பகத்சிங் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் கலந்து பேசி ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் எங்களிடம் உத்தரவாதம் அளித்திருந்தார். இது தொடர்பாக சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையரிடமும் புகார் கொடுத்தோம். பழனி கோட்டாட்சியரின் நடவடிக்கை குறித்து அவர் வருத்தம்  தெரிவித்தார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஞாயிறன்று பகத்சிங்கை வீடு புகுந்து போலீசார் கைது செய்து  கோட்டாட்சியர் அருண்ராஜ் முன்பு கொண்டு சென்று ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும்  பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் என்றும், முன் அனுமதியின்றி ஓராண்டுக்கு எந்த போராட்டமும் நடத்த மாட்டேன் என்று மிரட்டி  படிவத்தில் கையெழுத்து பெற்றது உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல. அராஜகத்தின் உச்சபச்ச வடிவமாகும். பழனி கோட்டாட்சியரின் இந்த நடவடிக்கையை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே  பழனி கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்த்துறை கண்காணிப்பாளர். ஆகியோர் உடனடியாக பகத்சிங் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முன்வரவேண்டும். அவ்வாறு ரத்து செய்ய மறுத்தால் ஜனவரி 10ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை திரட்டி முற்றுகையிடுவோம் என்று பொதுச்செயலாளர் நம்புராஜன் எச்சரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்