நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூ-டியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், கல்வி பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடக்கத்திய வரலாறு திணிக்கப்படுவது குறித்தும் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
முந்தைய பகுதிக்கு இங்கே க்ளிக் செய்யவும்...
ஒருகாலத்தில் வெவ்வேறு நாடுகளாக இருந்த இந்தியா, எப்படி வெள்ளைக்காரர்களால் ஒரு தேசமாக்கப்பட்டது என்பது குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம். வெள்ளைக்காரர்களை எதிர்க்கும்போது இருந்த நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, சுதந்திரத்திற்குப் பிறகு இல்லாமல் போனது. வடக்கு, தெற்கு என வேறுபாடுகள் உருவாகி நாம் வேறு, அவர்கள் வேறு என்ற உணர்வு வடக்கத்திய அரசியல்வாதிகள் மத்தியில் உருவாக ஆரம்பித்தது. கல்வி, வரலாறு, இலக்கியம் மூலமாக நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தருகிறோமோ அது வழியாகவே நம்முடைய வரலாற்றையும் அடையாளங்களையும் அடுத்தத் தலைமுறைகளுக்குக் கடத்த முடியும். ஆனால், கல்விக்கூடங்களில் கற்றுத்தரக்கூடிய வரலாறுகள் நம்மைப் புறக்கணிக்கின்றன. இந்திய ஒருமைப்பாட்டின் பெயரால் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டுள்ளோம். நாம் பேசும் விஷயங்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதல்ல; உண்மையான விஷயங்களையே பேசுகிறோம்.
நான் கடந்த பகுதியில் கூறிய ஜான்சி ராணி - வேலுநாச்சியார், வேலூர் கலகம் - மீரட் கலகம் ஆகியன இதற்கான உதாரணங்கள். கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தவரை இது குறைவாகவே இருந்தது. இதுபோன்ற விஷயங்கள் அப்போது இருந்தாலும் ஒருபுறம் நம்முடைய வரலாறும் கணிசமான அளவில் பாடத்திட்டங்களில் இடம்பெற்றிருந்தது. கல்வி எப்போது தேசிய பட்டியலுக்குச் சென்றதோ அதன்பிறகு, அவர்களது வரலாற்றைத் திணிக்கும் வகையிலும் நம்முடைய வரலாற்றைப் புறக்கணிக்கும் வகையிலும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் தமிழ், தமிழர் வரலாற்றிற்கு இடமே இல்லாத சூழல் உருவாகிவிட்டது. நான் படித்தக் காலங்களில் கரிகாலச் சோழன் அணையைக் கட்டினான், ராஜராஜ சோழன் கோவிலைக் கட்டினான் எனச் சோழர் வரலாறு பாடங்களில் இடம்பெற்றிருக்கும். அவ்வளவு பெரிய சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி இவ்வளவுதான் வரலாறு இருக்கும். இதுவே குறைவாக இருந்ததாகத் தோன்றியது. ஆனால், இன்றைய பாடத்திட்டங்களில் அதுவும் இல்லை. தற்போதைய சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சோழர்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டார்கள் என வரலாறு எழுதப்பட்டுள்ளது. சோழர் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு இதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்குமா, கொதிக்காதா?
தமிழ் அடையாளங்கள், இலக்கியங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருகின்றன. இது இன்னும் கொஞ்ச காலத்திற்குத் தொடர்ந்தால் தமிழ் இன, மொழி வரலாறுகளைப் பற்றிய பதிவுகள் சரியாக இருக்குமா என்ற அச்சம் எழுகிறது. முதலில் அதுபோன்ற பதிவுகளை இருக்கவிடுவார்களா என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுகிறது. நாங்கள் படித்தக் காலங்களில் எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட எந்த விஷயங்களும் தற்போது சொல்லிக்கொடுக்கப்படவில்லை. நம்முடைய வரலாற்றைப்பற்றி கூறினால், சும்மா கதைவிடாதீங்க சார் என நம்மவர்களே கூறிச் சிரிக்கின்றனர். தமிழ் வரலாறு குறித்துப் பேசுபவர்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நம்மிடம் உள்ள ஒரு பொருள் தரம் குறைந்தது என்றால்தானே நாம் பொய் சொல்ல வேண்டிவரும். தமிழர் வரலாற்றை விருப்பு வெறுப்பு இல்லாமல் எடுத்துப்பார்த்தாலே நம்மிடம் உள்ளது எவ்வளவு உயர்ந்த தங்கம் என்று தெரியும். அதிலுள்ள உண்மையைப் பேசுவதற்கே நூறு முதல் இருநூறு அத்தியாயங்கள் தேவைப்படும். ஆகையால் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்றுமே நமக்கிருந்ததில்லை.