கரோனா நோய் சீனாவின் வூகான் மாநிலத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. அதுபோல தமிழகத்தின் வூகானாக, தலைநகரான சென்னை மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “தமிழகத்தில் கரோனா இரண்டாவது நிலையில் இருக்கிறது. பல மாவட்டங்களில் இன்று கரோனாவே இல்லை என்கிற நிலை உருவாகி வருகிறது. சமுதாய தொற்று என்ற நிலையை கரோனா அடைய வில்லை'' என திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.
ஆனால் சென்னை நகரில் கரோனா கடந்த வாரம் நூற்றுக்கணக்கான நோயாளிகளை உருவாக்கியுள்ளது. மீடியாக்களில் வேலை செய்பவர்கள் 35 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 30 டாக்டர்கள், 17 முதுநிலை பட்டதாரி மாணவர்கள், செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் சென்னை நகரில் கரோனா தாக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு சுகபிரசவம் நடக்கவில்லை. அவரது ரத்தம் திடீரென உறையத் தொடங்கியது. அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு போனார்கள். அங்கு அவரை பல வார்டுகளில் வைத்து மாற்றி மாற்றி சிகிச்சை அளித்தார்கள். பிரசவ வலி வேகம் பெறவே அவரை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அவருக்கு பிறந்த குழந்தை இறந்துபோனது. அந்த பெண்ணும் இறந்து போனார்.
அவருக்கு கரோனா சோதனை, சிகிச்சையின்போதே எடுக்கப்பட்டது. இறந்த பிறகு பெறப்பட்ட அதன் ரிசல்ட் அவருக்கு கரோனா நோய் இருந்ததை உறுதிப்படுத்தியது. அவருக்கு சிகிச்சை அளித்த பல டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் அந்த நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்பதால், அத்தனை டாக்டர்களையும், செவிலியர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டது.
அவர் சிகிச்சை பெற்ற கஸ்தூரிபாய் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டது. அடையாறு, கேன்சர் இன்ஸ்டியூட்டில் 65 வயது நபருக்கு கரோனா வந்தது. அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இறந்து போனார். அவர் மூலம் அவரது மகனுக்கு கரோனா வந்தது. அவர் ஒரு உணவு பரிமாறும் நிறுவனத்தின் ஊழியராக இருந்தார். அந்த நபர் யார் யாருக்கெல்லாம் உணவை கொடுத்தார் என நூற்றுக்கணக்கான பேரை மருத்துவர்கள் கண்டுபிடித்து தனிமை படுத்தினார்கள்.
கோயம்பேட்டை சேர்ந்த சலூன் கடை ஊழியருக்கு கரோனா ஏற்பட்டது. அவர் மூலமாக வியாபாரிகளுக்கு கரோனா தொற்று பரவியது. இப்படி சங்கலி தொடர்போல கோயம்பேட்டில் பரவிய கரோனா 38 பேரை சென்றடைந்தது. மைலாப்பூரில் ஒரு சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மூலம் 30 பேருக்கு கரோனா நோய் பரவியது. பெரம்பூர் டிஇடி தோட்டம் பகுதியில் ஒருவருக்கு பரவிய கரோனா நோய் மிக குறுகிய தெருக்களும் வீடுகளும் கொண்ட பகுதியில் 40 பேரை பாதித்தது.
இப்படி ராயபுரம், மாம்பலம், மைலாப்பூர், கோயம் பேடு, பெரம்பூர் என பல பகுதிகள் கரோனா மண்டலங்களாகவே மாறியுள்ளது. இதில் 400 நோயாளிகளுக்கு யாரிடம் இருந்து கரோனா பரவியது. எப்படி வந்தது என்பதே தெரியவில்லை.
ஒரு நபருக்கு கரோனா நோய் வந்தால் அவர் குறைந்த பட்சம் 3 பேருக்கு அந்த நோயை பரப்புகிறார். அந்த 3 பேர் 10 பேருக்கு நோயை பரப்புகிறார்கள். கரோனா நோய் வளர்ந்து அறிகுறிகளுடன் வெளியே தெரிவதற்கு 7 நாட்கள் ஆகும். அது மற்றவர் களுக்கு முழுவதுமாக பரவுவதற்கு 28 நாட்களாகும். கரோனா நோய் பாதித்த ஒருவர் 14 நாட்களில் குணம் பெறுகிறார். இதுதான் எங்கள் கணக்கு.
ஒருவருக்கு கரோனா நோய் வந்தவுடன் அவர் வாழக் கூடிய பகுதியை 28 நாட்களுக்கு நாங்கள் மூடி வைத்து விடுவோம். அப்படித்தான் மாம்பலம் பகுதியில் முதலில் கரோனா வந்தது. அந்த பகுதியை 28 நாள்கள் மூடி வைத்தோம். இப்பொழுது அந்த பகுதியில் கரோனா நோய் இல்லை. இவ்வாறு நோய் தொற்றால் பாதித்த மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
ஆனால் சென்னையில் நோய் பாதித்த 98 சதவிகித நோயாளிகளுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. சென்னை நகரில் அதிகபட்சமாக கரோனா சோதனைகளை நடத்துகிறோம். அதனால் நிறைய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள் என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையரான பிரகாஷ்.
தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் கரோனாவை தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி சென்னை மாவட்ட பொறுப்பாளராக சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சமுதாயத் தொற்று ஏற்பட்டுள்ள சென்னையில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இது மே 3ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மக்களுக்கு இடையேயான தொடர்பு அதிகரிப்பதன் மூலம் வெகு வேகமாக தமிழகம் முழுக்க பரவும். கோயம்பேட்டிற்கு கரோனா வந்ததற்கு காரணம், கரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர்தான். அதனால் சென்னை நகரத்தில் கணக்கில்லாமல் பெருகி வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீனாவில் இருந்து உலகம் முழுக்க வைரஸ் பரவியதை போல சென்னையில் இருந்து தமிழகம் முழுக்க கரோனா பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். அதே நேரத்தில், இங்குள்ள மருத்துவக் கட்டமைப்பின் முழுவீச்சான பணிகளால், கரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றி விடமுடியும்'' என்கிறார்கள் நூறு சதவீத நம்பிக்கையுடன்.