தேசிய ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தின் பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளை வகுத்து தருவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில், தொழிலதிபர்கள் பலரும் அடங்கிய 24 பேர் கொண்ட ஒரு குழுவை சமீபத்தில் அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஊரடங்கினால் தமிழகத்தின் உள் கட்டமைப்பு வளர்ச்சி, வர்த்தகம், விவசாயம், ரியல் எஸ்டேட் வணிகம், சுற்றுலா உள்ளிட்ட அதி முக்கிய துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் குறித்த விஷயங்களை முதலில் எடுத்துக்கொண்டு அதற்கான சிக்கல்களை தீர்க்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது ரங்கராஜன் தலைமையிலான குழு.
அதேசமயம், அந்த குழு அமைக்கப்பட்டபோதே, ரங்கராஜன் மீது பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் இருக்கும் நிலையில், அவர் தலைமையில் ஒரு குழுவா? என்கிற அதிருப்திகளும் சர்ச்சைகளும் தமிழக பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியில் கிளம்பியது. அந்த அதிருப்திகள், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எட்டிய நிலையிலும் அது குறித்து மாநில அரசு அலட்டிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், தமிழக அரசின் மாநில திட்ட கமிஷன் குறித்த பல கேள்விகள் பொருளாதார வல்லுநர்களிடம் பரவி வருகின்றன. இது குறித்து நாம் விசாரித்தபோது, தமிழக அரசின் பொருளாதார சூழல்களை விவரிக்கவும், பொருளாதார ஆலோசனைகளை வழங்கவும் மாநில திட்டக் கமிஷன் இருக்கிறது. இதன் தலைவராக இருப்பவர் எடப்பாடிதான். அந்த திட்ட குழுவின் துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்னையனை கடந்த வருடம் நியமித்தார் எடப்பாடி பழனிசாமி.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நிதி நிலைமைகளை ஆய்வுசெய்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து தருவது திட்ட கமிஷன்தான். அதன் ரிப்போர்ட்டுகளை வைத்துக்கொண்டுதான் பெரும்பாலும் பட்ஜெட் உரையே தயாரிக்கப்படும். அந்த வகையில், திட்ட கமிஷனின் ஆலோசனைகள் தமிழக அரசுக்கு மிக முக்கியமானவை.
அப்படியிருக்கும் சூழலில், மாநில அரசின் திட்ட கமிஷனை பயன்படுத்திக் கொள்ளாமல், திட்டக் குழுவின் கூட்டத்தை கூட்டி விவாதிக்காமல், புதிதாக ரங்கராஜன் தலைமையில் பொருளாதார குழுவை எதற்கு அமைக்க வேண்டும்? அரசுக்கு ஆலோசனை வழங்க புதிதாக ஒரு குழு தேவை எனில், மாநில திட்ட கமிசன் என்கிற அமைப்பு எதற்கு? அதனை கலைத்துவிடலாமே? அதற்கு செலவிடப்படும் நிதி அரசுக்கு மிச்சமாகுமே? என விமர்சிக்கிறார்கள் தமிழக பொருளாதார ஆய்வாளர்கள்.
இதற்கிடையே, பிரதமர் மோடிக்கும் ரங்கராஜனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அப்படியிருக்கையில், மோடிக்கு ஆகாதவரும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் நண்பருமான ரங்கராஜன் தலைமையில், பொருளாதார குழுவை அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி துணிச்சல் வந்தது என்கிற ஆச்சரியமும் தமிழக பொருளாதார அறிஞர்களிடம் இருக்கிறது.