ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள், முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள், கிருத்துவர்கள், நாயுடு, பிற சமூகத்தினர் வாக்குகள் என உள்ளன. இதில் பெரும்பாண்மை பலத்தோடு உள்ள சமூகமாக இஸ்லாமியர்கள், முதலியார்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என உள்ளனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார்.
ஏ.சி.சண்முகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014ல் இதே வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் செங்கூட்டுவன், திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுகவின் செங்கூட்டுவன் வெற்றி பெற்றார். ஏ.சி.சண்முகம் 3,25,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளரான அப்துல் ரகுமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
தாமரைச் சின்னத்தில் நின்றதால்தான் தனக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் நின்றார். இஸ்லாமியர்கள் பாஜக மீது அதிருப்தியில் இருந்ததை கணக்கிட்டு அந்த வாக்குகள் மீது கவனம் செலுத்தாமல் மற்ற வாக்குகள் மீது கவனம் செலுத்தினார். முதலியார், நாயுடு, தலித் மற்றும் பிற சமூக வாக்குகளில் கவனம் செலுத்தினார்.
திமுகவினரோ, இஸ்லாமிய வாக்குகளோடு மற்றொரு சிறுபான்மையின வாக்குகளான கிருத்துவ வாக்குகள், வன்னியர் வாக்குகள், தலித் வாக்குகள் மீது கவனம் செலுத்தியது. தொகுதியில் இஸ்லாமிய வாக்குகள் 3.5 லட்சமும், கிருத்துவ வாக்குகள் 1.25 லட்சமும், முதலியார் வாக்குகள் 3 லட்சமும், வன்னியர்கள் வாக்குகள் 2.50 லட்சமும், தலித் வாக்குகள் 3 லட்சமும், நாயுடு சமுதாய வாக்குகள் ஒரு லட்சம் மற்றும் இதர சமுதாயத்தினரும் உள்ளனர்.
இந்த வாக்குகளில் இரு கட்சிகளும் தங்களுக்கான வாக்குகள் என பிரித்துக்கொண்டு வேலை செய்ததே ஒரு வேட்பாளருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு வேட்பாளருக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
திமுக வேட்பாளர் தனது சமுதாய வாக்குகள் பலமாக உள்ள அணைக்கட்டு, ஆலங்காயம், குடியாத்தம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள வாக்குகளும், இஸ்லாமியர்கள் பரந்து வாழும் பகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டி, வேலூர் பகுதிகளில் உள்ள வாக்குகளும், தொகுதி முழுவதும் பரவலாக உள்ள
குறிப்பாக தனி தொகுதிகளான குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் உள்ள தலித் வாக்குகளும் தங்களுக்கு சாதமாக விழும் என நினைத்தார்.
ஏ.சி.சண்முகம் தனது முதலியார் சமுதாய வாக்குகளும், நாயுடு சமுதாயம் மற்றும் பிற சமுதாய வாக்குகளும், மற்றும் தலித் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என நினைத்து வேலை செய்தார். ஆறு சட்டமன்றத் தொகுதியிலும் இரு வேட்பாளர்களும் வாங்கியுள்ள வாக்குகளை பிரித்து ஆராயும்போது, பல சுவாரஸ்யங்கள் அறிய முடிகிறது.
அதில், ஏ.சி.சண்முகம் திட்டமிட்டதுபோல் முதலியார், நாயுடு உள்பட பிற சமுதாய வாக்குகளையும் மற்றும் தலித் வாக்குகளையும் ஓரளவு பெற்றுள்ளார். திமுகவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வன்னியர் சமுதாய வாக்குகளும், ஏ.சி.சண்முகத்திற்கு பெருவாரியாக கிடைத்துள்ளன. குறிப்பாக அனைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்.
இதேபோல் தனி தொகுதியான குடியாத்தத்தில் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அந்த தொகுதியில் உள்ள முதலியார் வாக்குளே. கே.வி.குப்பத்திலும் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளார். இது திமுகவிற்கு அதிர்ச்சியான ஒரு தகவல்தான். ஏனெனில் திமுக வேட்பாளர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு முதல் சுற்று முதல் கடைசி சுற்று வரை முன்னணியில் இருந்த தொகுதி எது என்றால் அது வாணியம்பாடிதான். அங்குள்ள இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் செலுத்திய வாக்குகள் திமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றன. அதிமுகவைவிட திமுக இந்த தொகுதியில் 28 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளில் 90 சதவீத வாக்குகள் திமுகவுக்கே கிடைத்துள்ளன. அதற்கு அடுத்து வேலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குகளும் திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தன. இங்குள்ள கிருத்துவ வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகள் திமுகவுக்கு பெரிய அளவுக்கு கைக்கொடுத்துள்ளன. திமுகவினர் தங்களுக்கு நிச்சயம் விழும் என்று எதிர்பார்த்த வன்னியர் வாக்குகள்தான் காலை வாரியுள்ளன. இருந்தும் சிறுபான்மையினவாக்குகள், தலித் வாக்குகள் திமுகவை வெற்றிபெற வைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.