Skip to main content

மதுவிலக்கு; கலைஞர் சொன்னதை நினைவுகூர்ந்த நாஞ்சில் சம்பத்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

abstinence; Nanjil Sampath remembers what the kalaignar said

 

மது இல்லாத தமிழ்நாடு உருவாக்குவதற்கு தமிழ்நாடு பாஜக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை முதல்வரிடம் கொடுக்கத் தமிழ்நாடு பாஜக சார்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நமக்கு அளித்த நேர்காணல்.

 

மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு பா.ஜ.க ஒரு குழு அமைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறோம். அதை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க கரு. நாகராஜன் தயாராக இருக்கிறார். அதற்கு அவர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறாரே?

 

கரு. நாகராஜனுக்கு என்ன தெரியும். அவர், அந்த கட்சியில் துணைத் தலைவராக மட்டும் தானே இருக்கிறார். ஒரு மாநில அரசு தன்னுடைய பயணத்தை தொடர்வதற்கு அதற்கான வருவாயை ஈட்டுவதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா. மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா. அதுமட்டுமல்லாமல் உலகத்தில் எந்த நாட்டிலும் இது சாத்தியம் இல்லை.

 

மது வருவாயை நம்பித்தான் ஒரு அரசு இருக்கிறதா?

 

மது வருவாய் தேவை தான். நமக்கும், முதல்வருக்கும் மதுவை ஒழிக்க ஆசை தான். ஆனால் இதற்கு தேசிய அளவில் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். ஒரு இடத்தில் மது இல்லை என்று சொன்னால் வேறு இடத்திற்கு சென்று மது குடிப்பார்கள். அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை ரத்து செய்திருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதை எப்படி காப்பாற்ற முடியும். கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு இருக்கிறது என்று அன்றைக்கு கலைஞர் கூறினார். ஒருவன் மது குடிக்கலாமா வேண்டாமா என்று அவன் தான் தீர்மானிக்க முடியும். வேண்டுமென்றால் மதுவை எதிர்த்து பிரச்சாரம் செய்யலாம். இதைப் போய் கரு. நாகராஜன் என்ன செய்ய முடியும். ஏற்கனவே இது போன்ற வேலையை தமிழருவி மணியன் செய்தார். தமிழருவி மணியனே மதுவின் மூலம் வருகிற வருவாயை வேறு வழியில் ஈடுகட்டுவதற்கு என்ன வழிகள் இருக்கிறது என்று அன்றைக்கு இருந்த அரசாங்கத்திடம் அறிக்கை கொடுத்தார். ஆனால், அதை சாத்தியப்படுத்த முடியாத சூழ்நிலையில் அப்போதே கைவிட்டார்கள். இப்போதும் அதே நிலைமை தான்.