தமிழகம் முழுவதும் சிதிலமடைந்துள்ள பள்ளிகளை சீரமைக்கவும், புதிய கட்டுடங்கள் கட்ட வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தப்படி இருந்தார் தூத்துக்குடி எம்.பி.யும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி.
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிக்கூடங்களை சீரமைக்கவும், புதிய கட்டிடங்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக, திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூடத்திற்கு கூடுதல் கட்டிடங்கள் தேவை என்பதை தொடர்ச்சியாக தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி வந்தார் கனிமொழி.
அதேபோல, இந்த அரசு மகளிர் மேல்நிலை பள்ளியின் நிலைமைகள் குறித்தும், அதன் உடனடி தேவைகள் பற்றியும் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் எடுத்துரைத்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. திமுக அனிதா ராதாகிருஷ்ணன். மேலும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளை பல முறை சந்தித்தும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, தமிழகம் முழுவதும் கூடுதல் வசதிகள் தேவைப்படும் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தேவைய நிதியை ஒதுக்கி தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில், திருச்செந்தூரிலுள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியின் வளர்ச்சிக்காக, 4 கோடியே 5 லட்ச ரூபாயை ஒதுக்கி தற்போது ஆணை பிறப்பித்திருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை!