Skip to main content

1000 கோடி மெகா ஊழல்... ரகசிய விசாரணை... எஸ்கேப் ஆன எடப்பாடி!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.! இந்த வழக்கில் குற்றவாளிகள் பலரையும் சி.பி.ஐ. தப்பிக்கவிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

 

eps



மத்திய தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்காயர் தலைவர் (அக்கவுண்ட் ஜெனரல்) அலுவலகம் இயங்குகிறது. தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டையில் இயங்கும் அந்த அலுவலகத்தில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்தவர் அருண் கோயல். தமிழக அரசின் பட்ஜெட்டை தணிக்கை செய்து மக்களின் வரிப்பணம் முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா? முறையாக பயன்படுத்தப் பட்டதா? முறைகேடுகள், ஊழல்கள், விதி மீறல்கள், நட்டம், அனாவசிய செலவினங்கள் நடந்துள்ளதா? என ஆய்வு செய்வது இத்துறையின் முக்கியப்பணி.
 

officers



தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி ரிசல்ட்டை அறிவிப்பதும், கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்பும் அதிகாரமும் அக்கவுண்ட் ஜெனரலுக்கு உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்வு எழுதுபவர்களை வெற்றி பெற வைக்க அருண்கோயல் லஞ்சம் பெற்றதில் கடந்த வருடம் 2018 மார்ச்சில் அவரை பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ.!
 

admk



அவருடன் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளியது சி.பி.ஐ.! ஆட்சியாளர்களின் லஞ்ச- ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டிய அக்கவுண்ட் ஜெனரலே லஞ்சம் பெற்ற விவகாரம் தேசத்தையே உலுக்கியது (இந்த ஊழல்களை, "எடப்பாடியின் கமிஷன் ராஜ்ஜியம்; காட்டிக்கொடுத்த அதிகாரி' என்கிற தலைப்பில் அப் போதே விரிவாக பதிவு செய்துள்ளது நக்கீரன்). சி.பி.ஐ. விசாரித்த இந்த வழக்கில்தான் சில உத்தரவுகள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட, குற்றவாளிகள் பலரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கோட்டங்கள் இருக்கின்றன. திட்டங்களை செயலாக்கம் செய்யும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு கோட்ட கணக்காளர் உண்டு. மக்கள் பணத்துக்கு பாதுகாவலன் என்கிற பெயர் இவர்களுக்கு இருப்பதால் செலவிடப்படும் ஒவ்வொரு காசும் விரயமில்லாமல் நேர்மையாக செலவிடப்படுகிறதா? என கண்காணிக்கிற கடமையும் இவர்களுக்கு இருக்கிறது.

பொதுப்பணித்துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலக அதிகாரிகளை அயல்பணியாக ஏ.ஜி. அலுவலகமே நியமிக்கும். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களே நியமிக்கப்படுவார்கள். அந்த தேர்வை நடத்துவதும் அதன் ரிசல்ட்டை அறிவிப்பதும் ஏ.ஜி. அலுவலகம்தான். நெடுஞ்சாலைத்துறையில் உதவியாளர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்துகொள்ள முடியும். தேர்ச்சி பெறுபவர்கள் கோட்ட கணக்காளராக நியமிக்கப்படுவர்.

இந்த நடைமுறைகளில்தான் புகுந்து விளையாடினார் அருண்கோயல். கோட்ட கணக்காளர் பதவி உயர்வுக்கான தேர்வில் மொத்தம் 5 தாள்கள் எழுத வேண்டும். ஒரு தாளில் தேர்ச்சி பெற 1 லட்சம் என 5 தாளுக் கும் 5 லட்சம் என கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக அருண் கோயலை கைது செய்தது சி.பி.ஐ.!

இந்த வழக்கை விசாரித்து முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பதவிக்காக ஏ.ஜி. அலுவலகத்தில் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துகொண்ட நபர்களின் விடைத்தாள்கள் ஹைதராபாத்திலுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தடய அறிவியல் ஆய்வகத்தின் இயக்குநர் அறிக்கை தந்திருக்கிறார். அதனால், தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்றும், அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் திரும்பப்பெற வேண்டும் எனவும் ஏ.ஜி. அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.சுக்கு கடந்த செப்டம்பர் 16-ந்தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள அக்கவுண்ட் ஜெனரல் ஜெய்சங்கர், ஆறுமுகம், பால்ராஜ், சந்திரன், ஜெய்துன்பி, ஜெய பாலன், பரசுராமன், ராஜா, தங்கதுரை, மலர்விழி, முருகானந்தம் ஆகிய 10 நபர்களின் தேர்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் பதவி உயர்வை ரத்து செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் கோதண்டராமனுக்கு பிரபாகர் ஐ.ஏ.எஸ் கட்டளையிட, ஆறுமுகம், பால்ராஜ் இருவரும் கோட்ட கணக்காளர் பதவியில் தற்போது இல்லாததால் அவர்கள் இருவரை தவிர மற்ற 8 பேரின் பதவி உயர்வை ரத்து செய்துள்ளார் கோதண்டராமன். இதனால் இவர்கள் அனைவரும் கண்காணிப்பாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் நிறைய தவறுகள் நடந்துள்ளன. 2016 மற்றும் 2017 முறையே 32 மற்றும் 24 என 56 கோட்ட கணக்காளர்கள் தேர்ச்சி பெற்றதாக நெடுஞ்சாலைத் துறைக்கு பட்டியலை அனுப்பி வைத்தார் அருண்கோயல். அந்த 56 பேருமே அருண் கோயலுக்கு லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், 10 பேர் மீது மட்டும் ஆக்சன் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 46 பேரை காப்பாற்றியுள்ளது நெடுஞ்சாலைத் துறை. லஞ்சம் கொடுத்தவர்களின் பதவி உயர்வை ரத்து செய்வது மட்டுமே போதுமானதல்ல.

நெடுஞ்சாலைத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 10 ஆயிரம் கோடி ரூபாயில், ஒவ்வொரு கோட்டத்திலும் வருசத்துக்கு 100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த 100 கோடிக்கும் கோட்ட கணக்காளர்கள்தான் பாதுகாவலர். ஆனால், லஞ்சத்தால் பதவி உயர்வு பெற்ற இவர்கள் எப்படி 100 கோடி ரூபாயும் முறையாக செலவிடுவதில் அக்கறை காட்டியிருக்க முடியும்?

காண்ட்ராக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை சேர்ந்து கொள்ளையடிக்க கோட்ட கணக்காளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அதற்காக, சேங்ஷன் செய்யப்படும் ஒவ்வொரு பில்லிலும் இவர்களுக்கு 5 சதவீத கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்த கோட்ட கணக்காளர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதுடன் அவர்கள் ஒப்புதல் அளித்த திட்டங்களுக்கான நிதியில் நடந்துள்ள முறைகேடுகளை தடய அறிவியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தினால் 1000 கோடிக்கான ஊழல்கள் அம்பலமாகும்''’ என சுட்டிக் காட்டுகிறார்கள் ஆவேசமாக.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளரும், ஏ.ஜி.அலுவலக ஊழியர் சங்கத்தின் அகில இந்திய முன்னாள் தலைவருமான எம்.துரைபாண்டியனிடம் விசாரித்தபோது, ’அக்கவுண்ட் ஜெனரலாக அருண் கோயல் நியமிக்கப்பட்டதுமே லஞ்சத்தில் ஊறிப்போனது ஏ.ஜி. அலுவலகம். கோட்ட கணக்காளர் பதவிகளை நிரப்புவதில் அருண்கோயலின் லஞ்ச விளையாட்டை ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில் புகார் கொடுத்தேன். என் புகார் மீது ஆரம்பத்தில் அக்கறை காட்டாத சி.பி.ஐ., ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் குதித்தது. அருண்கோயலும் புரோக்கரும் கைது செய்யப்பட்டார்கள். லஞ்சம் கொடுத்து பாஸான கோட்ட கணக்காளர்கள் சிலரின் பதவி உயர்வை சி.பி.ஐ.யின் உத்தரவுக்கேற்ப தற்போது ரத்து செய்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. ஆனால், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை நியாயமாக இல்லை. குற்றவாளிகள் பலர் தப்பித்துள்ளனர்''’ என்கிறார் அழுத்தமாக.


இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "கைது செய்யப்பட்ட அருண்கோயலிடம் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் எடப்பாடி அரசுக்கும் தனக்குமுள்ள தொடர்புகளையும், லஞ்சமாக பெற்ற தொகையையும் ஒப்புவித்திருக்கிறார். இந்த தகவலின்படி, பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். கோட்ட கணக்காளர்கள் மூலம் நடந்துள்ள ஊழல்களின் பணம், துறையின் உயரதிகாரிகள் தொடங்கி முதல்வர் வரைக்கும் நீண்டுள்ளது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.


இது தொடர்பாக, பல ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் சிக்கியது. இதனையடுத்து, உயரதிகாரிகள் மீதும் கோட்ட கணக்காளர்கள் 56 பேர் மீதும் உச்சபட்ச நடவடிக்கை எடுக்க வலியுறுத்த சி.பி.ஐ. தரப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் துறைகளின் அமைச்சர் என்கிற முறையில் எடப்பாடிக்கு சிக்கல் வருவதுடன் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறையின் மானமும் கப்பலேறியிருக்கும். இந்த நிலையில்தான் சி.பி.ஐ.யின் முடிவை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆட்சியாளர்கள் எடுத்த டெல்லி முயற்சிகளால் சி.பி.ஐ.யின் முடிவு மாறியது. இதனால், எடப்பாடி உள்பட பலரும் தப்பித்துள்ளனர்' என்கின்றனர் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.