உலகின் நம்பர் ஒன் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1984ஆம் ஆண்டு அர்னால்டு நடிப்பில் வெளியான படம் 'டெர்மினேட்டர்'. இயந்திர மனிதனாக அர்னால்டு செய்யும் சாகசத்தால் பெரிதும் பேசப்பட்ட இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகள் புரிந்தது. இதன் காரணமாக இப்படத்தின் அடுத்தடுத்த ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி டெர்மினேட்டர் படத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. இந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு உலகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் சுலபமாக சென்றுவிட்டார். இன்றளவும் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஆறிலிருந்து, அறுபது வயது தாண்டியவர் வரை அர்னால்டை தெரியாதவர் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அர்னால்டின் 'டெர்மினேட்டர்' படத்தின் ஆறாவது பாகமான டெர்மினேட்டர் - டார்க் ஃபேட் தற்போது வெளியாகியுள்ளது. மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் நமக்கு இத்தனை வருடங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் அதே மெய்சிலிர்ப்பை மீண்டும் கொடுத்ததா..?
எதிர்காலத்திலிருந்து இயந்திரமாக மாறுபட்ட பெண் கிரேஸ் மற்றும் உயர் ரக தொழில்நுட்பத்தில் உருவான டெர்மினேட்டர் கேபிரியல் இருவரும் மெக்சிகோ நகரத்திற்கு வருகின்றனர். வந்த இடத்தில் டெர்மினேட்டர் கேபிரியல் டேனி என்ற பெண்ணை கொல்ல முயற்சி செய்ய, உயர் ரக டெர்மினேட்டரிடம் இருந்து டேனியை இயந்திரமாக மாறுபட்ட பெண் கிரேஸ் காப்பாற்றுகிறார். பின்னர் இருவரும் உயர் ரக டெர்மினேட்டரிடம் இருந்து தப்பி ஓடுகின்றனர். இவர்களை உயர் ரக டெர்மினேட்டர் துரத்துகிறது. இதற்கிடையே பழைய டெர்மினேட்டரான அர்னால்டும், ஜான் கார்னரின் தாயான சாரா கார்னரும் உயர் ரக டெர்மினேட்டரிடமிருந்து கிரேஸையும், டேனியையும் காப்பாற்ற உதவி புரிகின்றனர். இருந்தும் உயர் ரக டெர்மினேட்டர் கேபிரியல் இவர்களை விடாமல் துரத்துகிறது. இதையடுத்து டேனி என்ற பெண் யார், அவரை ஏன் உயர் ரக டெர்மினேட்டர் கொல்லத்துடிக்கிறது, ஏன் இயந்திரப்பெண் டேனியை காப்பற்றுகிறார், டேனிக்கு ஏன் அர்னால்டும், சாராவும் உதவி புரிகின்றனர், உயர் ரக டெர்மினேட்டரிடம் இவர்கள் சிக்கினார்களா...? என்பதே அதிரடி சாகசங்கள் நிறைந்த டெர்மினேட்டர் (டார்க் ஃபேட்) படத்தின் கதை.
அர்னால்டு என்ற ஒரு நடிகனை நம்பி மட்டுமே டெர்மினேட்டர் படங்கள் உருவாகி வருகின்றன. நாம் சிறு வயதில் பார்த்த அதே மிடுக்கும், நடையும், கம்பீரமான தோற்றமும் கூடிய அர்னால்டு இந்தப் படத்திலேயும் தனது ரசிகர்களுக்கு சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் செய்து ரசிக்கவைத்துள்ளார். டெர்மினேட்டருக்கே உண்டான அதே பிஜிஎம்மோடு அவர் என்ட்ரி தரும் காட்சியில் ஆரம்பித்து, கிளைமாக்ஸில் உருகவைக்கும் காட்சி வரை மரணமாஸ் காட்டியுள்ளார் அர்னால்டு. குறிப்பாக தன் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து திருப்திப்படுத்தியுள்ளார். இருந்தும் தமிழ் டப்பிங்கில் அர்னால்ட்டிற்கு கொடுக்கப்பட்ட குரலை காட்டிலும் இன்னும் கூட நல்ல கம்பீர குரலை பயன்படுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் எழுகிறது.
எப்போதும்போல் அதிரடி என்ட்ரி கொடுக்கும் சாரா கார்னர் சகட்டுமேனிக்கு டெர்மினேட்டர்களை போட்டுத்தள்ளி தியேட்டரில் ஆரவாரத்தை கூட்டுகிறார். இந்த வயதிலும் ஆக்சன் காட்சிகளில் கலக்குகிறார் என்றே சொல்லலாம். மக்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி ஒன்று திரட்டினால் அதன் மூலம் எதையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் புரட்சிகர பெண்ணாக வரும் டேனி கதையோட்டத்தின் ஆணிவேராக இருந்து படத்திற்கு கனம் சேர்த்துள்ளார். இவரின் முதிர்ச்சியான பாத்திர படைப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
பாதி இயந்திரப்பெண்ணாக உருவாக்கப்பட்ட கிரேஸ் மற்றும் உயர் ரக டெர்மினேட்டரான கேபிரியல் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் படத்தின் வேகத்தை கூட்டியுள்ளன. உயர் ரக டெர்மினேட்டர் கேபிரியலுக்குள் அட்டகாசமான அம்சங்களை புகுத்தி, அதன் மூலம் பல்வேறு புதுமையான சாகசங்களை நிகழ்த்தி அயர்ச்சி ஏற்படாதவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது டெர்மினேட்டர் (டார்க் ஃபேட்) படம். இத்தனை இருந்தும் படம் நம் முழு ஈடுபாட்டை பெறவில்லை. காரணம், கதாபாத்திரங்கள் எதுவுமே அழுத்தமாக இல்லை. படத்தின் முக்கிய ஈர்ப்பான அர்னால்டு படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் முழுமையாக வருகிறார். அதுவும் அந்த மனிதரை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களை இந்தத் தாமதம் சோதிக்கிறது. ஹாலிவுட் தரத்தில் சிறப்பான சண்டைக் காட்சிகளுக்காகப் படம் பார்க்கலாம்.
டெர்மினேட்டர் (டார்க் ஃபேட்) - அர்னால்டு இஸ் பேக்... பட் நாட் வித் எ பேங்!!