சேது விக்ரம், பிதாமகன் விக்ரம், நந்தா சூர்யா, நான் கடவுள் ஆர்யா, அவன் இவன் விஷால் என சமூகத்தின் பார்வையில் சற்று விசித்திரமாகத் தெரியும் பாத்திரங்களை தன் கதையின் மையமாக வைத்து படத்தை நகர்த்தும் இயக்குனர் பாலா இந்தப் படத்திலும் மெல்லிய கதையை எளிய மனிதர்களின் வாழ்க்கைப் பின்னணியில், அதே சமயம் தனக்கே உரித்தான கொஞ்சம் வன்முறையையும் கலந்து தந்திருக்கிறார்.
வயதில் மைனர்களான ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவானா கர்ப்பமாகிறார். இருவரும் மைனர் என்பதனால் பிரச்சனை பெரிதாகி ஜி.வி.பிரகாஷ் மேல் வழக்கு போடப்பட்டு சிறைக்குச் செல்கிறார். இந்த கேஸை காவல்துறை அதிகாரிகள் ஜோதிகாவும், ராக்லைன் வெங்கடேஷும் கையாள நேர்கிறது. அப்போது இந்த வழக்கைப் பற்றிய விசாரணையில் இவானா கர்ப்பத்திற்கு ஜி.வி.பிரகாஷ் காரணமில்லை என்ற உண்மை தெரிய வர, குற்றவாளி யார், அவரை ஜோதிகா என்ன செய்கிறார் என்பதே 'நாச்சியார்'.
ஏற்கனவே பார்த்துப் பழகிய கதை தான் என்றாலும் பாலா தன் பாணியில் எதார்த்த மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் தந்திருக்கிறார். போகிற போக்கில் முகத்தில் அறைந்து செல்லும் யதார்த்தங்களின் கலவையை மிக அழுத்தமான நக்கல், நய்யாண்டி என 'பாலா'த்தனமான வசனங்களோடு காட்டியிருக்கிறார். வழக்கம் போல் கதாபாத்திரங்கள் இவர் சொன்ன பேச்சைக் கேட்டு நடித்துள்ளார். அனைவரது நடிப்பிலும் பாலாவின் முகமே மேலோங்கித் தெரிகிறது. படத்தில் ஒரே ஒரு பாடல், வேகமான திரைக்கதை, நீளம் குறைவு, என தன் சினிமா பாணியில் இருந்து கொஞ்சம் விலகி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் மனதைத் தாக்கி இதயத்தைப் பிழியும் ரணகள கிளைமாக்ஸ் இல்லாமல் சுமூகமாக வைத்தது மிகவும் ஆறுதலாக உள்ளது. சில காட்சிகள் மெகா சீரியல் போல இருப்பது, சற்று அயர்ச்சி ஏற்படுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் - இவானா காதல் காட்சிகள் மனதில் பதியும்படி இல்லை.
ஜோதிகா எப்போதும் போல் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். நேர்மையும், மனிதாபிமானமும், துணிச்சலும் நிறைந்த காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் அவர் நடிப்பில் வெகு சில இடங்கள் மட்டும் சற்று செயற்கையாகத் தெரிகிறது. மேலும் ஜோதிகா ட்ரைலரில், தன் சொந்த குரலில் சொன்ன 'அந்த' வார்த்தை, படத்தை பார்க்கும் போது, அந்த இடத்தில் பேசியது அதிகமில்லை என்றே தோன்றுகிறது. ஜி.வி.பிரகாஷ் ஒன்றும் அறியாத 'காத்து' என்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். சில இடங்களில் பிதாமகன் விக்ரமை நியாபகப்படுத்தினாலும் இதுவரை நாம் பார்த்த ஜி.வி வேறு, இவர் வேறு. புதுமுகம் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு நடிகை இவானா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மிக இயல்பாக நடித்து கவனிக்க வைக்கிறார். இவர்களைத் தவிர பிற பாத்திரங்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை என்பது ஒரு குறை தான்.
இளையராஜாவின் பின்னணி இசை, தேவையான இடத்தில் காட்சிக்குத் தகுந்தாற்போல இசையோடும், இசையில்லாமலும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆனாலும் பாலா-இளையராஜா என்ற அந்த அதிர்வு இல்லை. ஈஸ்வரின் ஒளிப்பதிவு சென்னையை இயல்பான வண்ணத்தில் காட்சிப்படுத்தியுள்ளது.
நாச்சியார் - அளவான, அதிரடியான நல்லவள்.