Skip to main content

அப்பப்பா... ரஜினியே இந்த மாதிரி எத்தனை படம் நடிச்சிருப்பாரு! ஆனாலும்... பயில்வான் - விமர்சனம் 

Published on 15/09/2019 | Edited on 16/09/2019

பெரிய பிசினஸ்மேனான தந்தை, தன் மகளை காதல் செய்யும் சாதாரண இளைஞனை வீட்டுக்கு அழைக்கிறார். தன்னிடம் நல்ல முறையில் பேசப்போகிறார் என்ற ஆர்வத்துடன் செல்லும் நாயகனிடம் பிளாங்க் செக் ஒன்றில் கையெழுத்திட்டு, "உனக்கு எவ்வளவு வேணுமோ போட்டுக்கோ, என் பெண்ணை விட்டுரு" என்று கூறி விட்டெறிகிறார் அவர். செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டு, "உங்கள பெரிய மனுஷன்னு நினைச்சு வந்தேன். ஆனா..." என்று பன்ச் வசனம் பேசுகிறார் நாயகன். கூடுதலாக, "நான் பணத்தால் மட்டும்தான் ஏழை, ஆனா என் மேல் பாசம் வச்சிருப்பவர்கள்..." என்று ரசிகர்களைப் பார்த்தும் பேசுகிறார் நாயகன். இப்போவே கண்ணை கட்டுதா? இது போன்ற ஒரு காட்சியை கடைசியாக எந்த தமிழ் திரைப்படத்தில் பார்த்தீர்கள்? இந்தக் காட்சி ஒரு சோறு பதம்தான். தமிழ் சினிமா பல ஆண்டுகளாக, கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நாயகர்களுமே நடித்து அடித்து துவைத்து கைவிட்டுவிட்ட ஒரு டெம்பிளேட் கதையுடன் களத்தில் இறங்கியிருக்கிறார் கன்னட கிச்சா சுதீப்பா. நமக்கு 'நான் ஈ' மூலம் சுதீப்பாக அறிமுகமானவர். 'பயில்வான்' என்ற பெயரில் தமிழிலும் பேசுகிறது படம்.

 

pailwaan sudeep



ஊரே மதிக்கும் பெரிய மனிதர், பிரமச்சாரி சர்க்கார் (சுனில் ஷெட்டி). குஸ்தி வீரரான அவர், தான் அடையாத உயரத்தை தனது சீடர்களில் ஒருவராவது அடைய வேண்டுமென்ற லட்சியத்துடன் இருப்பவர். சாலையில் தன்னை விட பெரியவர்களுடன் தைரியமாக சண்டை போடும் சிறுவனிடம் அதற்கான காரணத்தை அறிந்து அவன் மேல் மிகுந்த அன்பு கொண்டு தன் சீடனாகவும் மகனாகவும் ஏற்று வளர்க்கிறார். சர்க்காரின் வளர்ப்பில் மிகச்சிறந்த குஸ்தி பயில்வானாக வளர்கிறான் கிச்சா (எ) கிருஷ்ணா (சுதீப்). பின்னர் அவர்களுக்கு என்ன பிரச்சனை, அவர்களுக்குள் என்ன பிரச்சனை, காதல், வில்லன்கள்... என நாம் சற்றும் யோசிக்கவோ, ஆச்சரியப்படவோ வாய்ப்பளிக்காமல், பழகிய பாதையில் மீண்டும் கூட்டிச்சென்றுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா.

 

 

suneil shetty

 

super duper AD



கதை மட்டுமல்லாமல் காட்சிகளிலும் நாம் நூறு முறை பார்த்துப்பழகிய காட்சிகளெல்லாம் கூட உண்டென்றாலும் அதையெல்லாம் தாண்டி நம்மை உட்கார வைக்கும் வகையில் ஒரு படத்தை எடுத்தது இயக்குனர் கிருஷ்ணாவின் சாதனை. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் நாயகன் கிச்சா சுதீப்பா. வெட வெட உடல், நெடு நெடு உயரம், கூர்மையான பார்வை என மாஸ் நாயகனாக மிளிர்கிறார் சுதீப். ரஜினிகாந்த் போன்ற தமிழ்க்  குரல் கூடுதல் ஈர்ப்பு. சண்டைக் காட்சிகளில் நம்பும்படியும் தந்தை - மகன் பாசக் காட்சிகளில் உருகும்படியும் நடித்து படத்தை சுமந்திருக்கிறார் பயில்வான் கிச்சா. சுனில் ஷெட்டி, சர்க்காராக கெத்து காட்டுகிறார். அவரது அனுபவம் வாய்ந்த பக்குவமான நடிப்பும் படத்துக்கு பலம். வில்லன்கள் சுஷாந்த் சிங், கபீர் துல்ஹான் சிங் இருவருமே பலம் வாய்ந்தவர்களாக இருப்பது படத்துக்கு நன்மை செய்துள்ளது. நாயகி ஆகான்க்ஷா சிங், இப்படி ஒரு கமர்ஷியல் படத்தில் தனக்குக் கிடைத்த இடத்தை சரியாகப் பயன்படுத்தியுள்ளார். அழகான நடிகையிடமிருந்து அளவான நடிப்பு. நாயகனின் நண்பனாக வரும் அப்பண்ணா ஆங்காங்கே நம்மை புன்னகைக்க வைக்கிறார்.

 

pailwaan heroine



கன்னட சினிமாவில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவுக்கு இந்தக் கதை பழக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு கதையில் நாயகன் கிச்சா சுதீப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாஸ் சேர்த்து, காதல், கவர்ச்சி, செண்டிமெண்ட், மோட்டிவேஷன் என கூடுதல் சுவையையும் சேர்த்து ஒரு முழு மீல்ஸ் பரிமாறி இருக்கிறார் இயக்குனர். பழக்கமானது என்றாலும் சுவையாகவே இருக்கிறது. ஆஞ்சநேயர் படம் முழுவதும் ஒரு அடையாளமாகவே வருகிறார். கூடுதலாக நாயகனின் சமூக அக்கறை காட்டும் பகுதிதான் கொஞ்சம் ஓவர் டோஸாகிவிட்டது. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவின் தீம் இசை தெறிக்கிறது. அவ்வப்போது டி.இமான் 'விஸ்வாசம்' படத்துக்காக உருவாக்கிய தீமை நினைவுபடுத்துகிறது. பாடல்கள் கமர்ஷியல் ரகம், 'படித்ததும் கிழித்துவிடவும்' என்பதுபோல கேட்டதும் மறந்துவிடவும். கருணாகராவின் ஒளிப்பதிவு படத்தை பொலிவாகக் காட்டியிருக்கிறது. ரூபனின் படத்தொகுப்பு, தேவையானதை தொகுப்பதோடு நின்றுவிட்டது, தேவையில்லாததை வெட்டியும் இருக்கலாம்.

90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா என்று அலப்பறைகள் செய்து தங்கள் நினைவுகள் மீட்கும், நினைவுகளில் வாழும் பல வேலைகளை செய்துவருகிறார்கள். அந்த வகையில் 'பயில்வான்' படத்தையும் பார்க்கலாம்.      


                                                  

 

சார்ந்த செய்திகள்