தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகின்றன. அந்த வரிசையில், ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்தின் கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு தற்போது அதன் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் டபுள் ஹீரோ படங்கள் பெற்ற அதே வரவேற்பைப் பெற்றதா, இல்லையா?
படம் 1975 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. ரெட்ரோ பாணியில் எடுக்கப்பட்ட இந்த கதையில் அந்த சமயம் ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார் நடிகர் முதலமைச்சர் ஆகும் கனவில் இருக்கிறார். இதை இன்னொரு நடிகர் சதி செய்து தடுக்கிறார். இதனால் கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார் நடிகர் தன்னுடைய வளர்ச்சியை தடுக்கும் ரவுடி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்களை போட்டுத் தள்ள ஒரு போலீஸ் உதவியை நாடுகிறார். அந்த போலீஸ் தென்மாவட்டத்தில் இருக்கும் நான்கு முக்கிய தலைகளை போட்டுத்தள்ள நான்கு நபர்களை அனுப்புகிறார். அதில் ஒருவர் அப்பாவியான ஜெயிலுக்கு சென்று வந்த எஸ்.ஜே. சூர்யா. அவருக்கு மதுரையில் இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மன்றத்தின் தலைவரான ராகவா லாரன்ஸை போட்டுத்தள்ள அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. அவரும் லாரன்ஸை கொலை செய்ய அந்த ஊருக்கு படம் எடுக்கும் இயக்குநர் போல் செல்கிறார். போன இடத்தில் ஏற்கனவே சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் லாரன்ஸை சம்மதிக்க வைத்து அவரை வைத்து லாரன்ஸின் சுயசரிதையையே படமாக எடுக்கத் திட்டமிட்டு காயை நகர்த்துகிறார். இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா திட்டமிட்டபடி ராகவா லாரன்ஸை கொலை செய்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
ஜிகர்தண்டா முதல் பாகத்தின் கதைக் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதை வைத்து புதிய திரைக்கதை மூலம் வேறு ஒரு கதையை வேறு ஒரு கோணத்தில் கொடுத்து, அதை ரசிக்கும் படியும் கொடுத்து மீண்டும் ஒருமுறை பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். தன்னுடைய அட்வான்ஸ் ஸ்டைலில் திரைக்கதை அமைத்து படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர், எந்தெந்த காட்சிகளுக்கு எங்கெங்கு மாஸ் எலிமெண்ட்ஸ் கூட்ட வேண்டுமோ அதை சரிவர கூட்டி அதன்மூலம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாம் பாதி பிற்பகுதியில் சென்டிமென்ட்க்கு முக்கியத்துவம் கொடுத்து கனத்த இதயத்துடன் நம்மை வெளிவரச் செய்யும்படியான காட்சிகள் மூலம் கலங்கடித்து இருக்கிறார். 45 நிமிடங்கள் வரும் அழுத்தமான காட்சிகள் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதிரடியாக ஆரம்பித்து வேகம் எடுக்கும் திரைப்படம் போகப்போக வேறு ஒரு திசைக்கு சென்று எளியவர்களுக்கான புரட்சி போராட்டமாக மாறி கடைசியில் நம் கண்களை குளமாக்கி சென்டிமென்ட் பாணியில் படம் முடிந்து திரையரங்கில் கைத்தட்டல்கள் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர். இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து ஒவ்வொரு காட்சியையும் அடுத்தடுத்த கட்டத்திற்கு வேகமாக எடுத்துச் செல்ல உதவி புரிந்துள்ளனர். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யாவை காட்டிலும் ராகவா லாரன்ஸ் படத்தின் பிற்பகுதியில் மிகவும் சீரியஸான மனிதராக நடித்து நடிப்பில் ஒரு புதிய அவதாரமே எடுத்திருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி இருக்கிறது. வழக்கமாக அனைத்து படங்களிலும் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டும் ராகவா லாரன்ஸ், இந்தப் படத்தில் அடக்கி வாசித்திருப்பது அவருக்கும் சரி, படத்திற்கும் சரி மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எஸ்.ஜே. சூர்யா வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு நடிப்பு அரக்கன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இவருக்கும் லாரன்ஸ்க்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இவர்கள் இருவருமே படத்தை தங்கள் தோள்மேல் சுமந்திருக்கின்றனர்.
எஸ்.ஜே. சூர்யாவின் நண்பராக வரும் சத்யன் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். போலீசாக வரும் நவீன் சந்திரா வில்லத்தனத்தில் மிரட்டி நம்மை பயமுறுத்துகிறார். அவ்வப்போதே அவர் தோன்றினாலும் சிறப்பான வில்லத்தனம் காட்டி பயமுறுத்துகிறார். லாரன்ஸின் மனைவியாக வரும் நிமிஷா சஜயன் கதாநாயகிக்கு ஒரு நல்ல தேர்வு. இவரது அதிரடியான வசன உச்சரிப்பும் துடுக்கான மேனரிசமும் கதாபாத்திரத்தை நன்றாக மேம்படுத்திக் காட்டி ரசிகர்களையும் ரசிக்க வைத்திருக்கிறது. இவரது எதார்த்தமான நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. அரசியல்வாதியாக வரும் இளவரசு வழக்கம் போல் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகராக வரும் சைன் டாம் சாக்கே, மற்றொரு நடிகராக வரும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக வரும் ஷீலா மற்றும் சஞ்சனா ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக வந்து செல்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே. இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தில் இன்னமும் கூட மெனக்கெட்டு தனது சக போட்டியாளர்களை போல் சிறப்பான இசையை சந்தோஷ் நாராயணன் கொடுத்திருந்தால் இந்த படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அவ்வளவாக உதவி புரியவில்லை. தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சந்தோஷ் நாராயணனுக்கு இன்னமும் உழைப்பு தேவைப்படுகிறது. திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் ரெட்ரோ காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை தெருக்களை மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். அதற்கு சந்தானத்தின் கலை இயக்கமும் நன்றாக உதவி புரிந்துள்ளது.
படம் ஆரம்பித்து முதல் பாதி வேகமாகப் பயணித்து இரண்டாம் பாதி செண்டிமெண்ட் காட்சிகளோடு சற்று வேகம் குறைவாகப் பயணித்து நிறைவாக முடிந்துள்ளது. முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இருந்திருந்தால் இன்னமும் படம் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் படத்தின் நீளத்தையும் சற்றுக் குறைத்திருக்கலாம்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - டபுள் தமாக்கா!