Skip to main content

குப்பத்துக்கும் பாண்டவாஸ், கௌரவாஸுக்கும் என்ன தொடர்பு? குப்பத்து ராஜா - விமர்சனம்

Published on 07/04/2019 | Edited on 07/04/2019

வடசென்னை... ஒவ்வொரு காலத்திலும் தமிழ் சினிமா ஒவ்வொரு ஏரியாவை நோக்கிப் படையெடுக்கும். பொள்ளாச்சி, மதுரை என அது மாறிக்கொண்டிருக்கும். தற்போது அந்த ஏரியாவாக வடசென்னை இருக்கிறது. வடசென்னை வாழ்வியல் சொல்லும் படங்கள் வரிசையாக வருகின்றன. அவற்றில் சில உண்மைக்கு நெருக்கமாகவும் பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களும் அப்படியில்லை. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நடன இயக்குனர் 'பாபா' பாஸ்கர் இயக்கியிருக்கும் இந்த 'குப்பத்து ராஜா' எப்படி?

 

g.v.prakash



வடசென்னையில் அமைந்துள்ள ஒரு குப்பத்தில் பெரிய தலக்கட்டு எம்.ஜி.ஆராக (எம்.ஜி.ராஜேந்திரன்) வருகிறார் பார்த்திபன். ஊர் மக்களுக்கு நல்லது கெட்டதுகளை கவனித்துக்கொண்டு ஊர் தலைவர் போல் செயல்பட்டு வருகிறார். இவரது அணி 'பாண்டவாஸ்' என்று அழைக்கப்படுகிறது. அதே குப்பத்தில் வசித்து வரும் ஜி.வி.பிரகாஷும் பார்த்திபனும் அவ்வப்போது முட்டி மோதி உரசிக் கொள்கின்றனர். ஜி.வி.பிரகாஷின் டீம் 'கௌரவாஸ்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையே ஜி.வி.பிரகாஷும் பல்லக் லால்வாணியும் காதலிக்கின்றனர். இவர்களுக்குள் அதே பகுதியில் வசிக்கும் பூனம் பாஜ்வாவால் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இதற்கிடையே ஒரு நாள் ஊர் பொது வெளியில் வைத்து ஜி.வி.பிரகாஷின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர் கவுன்சிலரான கிரனை அடித்துவிடுகிறார். அடுத்த நாள் காலை எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதையடுத்து எம்.எஸ்.பாஸ்கர் எப்படி இறந்தார், இந்த கதைக்கு வில்லன் யார், ஜி.வி.பிரகாஷின் காதல் என்னவானது என்பதே குப்பத்து ராஜா.

 

parthiban



வடசென்னையில் ஒரு குப்பத்தின் வாழ்வியலை சினிமாத்தனம் இல்லாமல் சினிமாவில் காட்ட முயற்சி செய்துள்ளார் இயக்குனர் பாபா பாஸ்கர். இதை ஒரு படத்திற்கு உண்டான டெம்ப்ளேட்டில் எடுக்காமல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகக் கோர்த்து அதில் ஆங்காங்கே சினிமா அம்சங்களை உட்புகுத்தி காட்சிப்படுத்தியுள்ளார். அது சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் மனதுடன் ஒட்ட மறுக்கின்றது. குப்பத்து பேச்சு வழக்கு, வசனங்கள் படத்திற்கு பலமாக இருக்கின்றன. அதிலும் ’பன்ச்’என்று எண்ணி எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் மிக சுமார். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களுக்குள் உணர்ச்சிகளின் அழுத்தம் குறைவாக இருக்கிறது. பல இடங்கள் செயற்கைத்தனமாக உள்ளன. வில்லன் யார் என்பதை சஸ்பென்சாக வைக்கும் முயற்சியில் படத்தின் நீளம் கூடியுள்ளது. முக்கிய பிரச்சனைக்கு வராமல் சுற்றி சுற்றி வருவது அயர்ச்சி.

 

pallak lalvani



துடுக்கான வடசென்னை இளைஞராக வரும் ஜி.வி.பிரகாஷ் தனக்கு பரிச்சயப்பட்ட கதாபாத்திரத்தை அசால்ட்டாக டீல் செய்கிறார். பல இடங்களில் ஒரு சராசரி குப்பத்துப் பையனின் மனோபாவங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அறிமுக நாயகி பல்லக் லால்வாணி தைரியமான வடசென்னை பெண்ணாக வலம் வருகிறார், நடிப்பு, உதட்டசைவில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. வழக்கம்போல் தனது நக்கலான நடிப்பின் மூலம் குப்பத்து ராஜாவாகவே வாழ்ந்துள்ளார் பார்த்திபன். இவரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. கூடவே எம்.எஸ்.பாஸ்கர் குப்பத்தில் வாழும் சாமானிய மனிதனின் பிரதிபலிப்பாகவே மாறி படத்திற்கு வலு சேர்த்துள்ளார். கதை இருக்கிறதோ இல்லையோ இப்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இருக்கிறார். இவர் இருக்கிறாரே என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படத்திலும் பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியுள்ளார். ஆரம்பப் படங்களில் ரசிகர்களை குதூகலமாக்கிய ஜி.வி. - யோகி பாபு கூட்டணி சமீபமாக ஏமாற்றுகிறது. இது கதையையும் இயக்குனரையும் பொறுத்ததுதானே? பூனம் பாஜ்வா கவர்ச்சி கலந்த குணச்சித்திர வேடம் ஏற்று மனதில் பதிய முயற்சி செய்துள்ளார். அவரது பாத்திரத்துக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திலும் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளார். பின்னணி இசையும் பெரிய தாக்கமில்லை.  ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி குப்பத்தை நேர்த்தியாக படம்பிடித்து ரசிக்க வைத்துள்ளார்.

ரசிக்கத்தக்க கதைக்களம் மட்டும் போதாது, கதையும் திரைக்கதையும் தேவை என்று நன்கு உணர்த்தியுள்ளது இந்தப் படம்.

குப்பத்து ராஜா - ஆட்சியில் இல்லை!

 

 

சார்ந்த செய்திகள்