ஒரு காலகட்டத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் சிவாஜி, கமல் என்ற வரிசையில் வைத்துப் பார்த்து ரசிக்கப்பட்டவர் விக்ரம். சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ... என இவரது நடிப்பை, தோற்ற மாற்றங்களை ரசிக்கவைத்த படங்கள் பல. தற்போது இவரது படங்கள் சில, வணிக ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தாலும் விக்ரமின் நடிப்பிலோ விக்ரம் மீதான ரசிகர்களின் அபிமானத்திலோ எந்தக் குறையும் ஏற்படவில்லை. மீண்டும் அவரது முழு எழுச்சியுடன் ஒரு படம் வரவேண்டுமென்ற ஆவலில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் வந்திருக்கின்றது கமல்ஹாசன் தயாரித்து இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கியுள்ள 'கடாரம் கொண்டான்'. விக்ரமுக்குத் தேவையான அந்த ஹிட் கிடைத்ததா?
காதல் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் துணையில்லாமல் மலேசியாவில் குடியேறும் இளம் தம்பதி வாசு - ஆதிரா. ஆதிரா, அவர்களது குழந்தையை சுமந்துகொண்டிருக்கிறார். அவர் மீது அலாதியான காதல் கொண்டிருக்கும் வாசு ஒரு மருத்துவர். வாசு பணிபுரியும் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகிறார் விபத்தில் காயமுற்ற கே.கே. முதலில் அடையாளம் தெரியாதவராக இருக்கும் அவரின் பின்னனி, மருத்துவமனையில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி நடக்கும்போது தெரிய வருகிறது. அந்த கொலைமுயற்சியில் அவரை காப்பாற்றும் வாசு, மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். வாசுவின் காதல் மனைவி ஆதிராவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. கே.கே. யார், அவரை யார், ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள், வாசுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன, ஆதிராவின் முடிவு என்ன என்பதே 'கடாரம் கொண்டான்'.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என ஒவ்வொரு அப்டேட்டாக வர வர அனைவரையும் கவர்ந்தது விக்ரமின் ஸ்டைலான தோற்றம்தான். சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி, ஸ்டைலான தாடி, செம்ம ஃபிட்டான உடல், உடலெங்கும் டாட்டூ என கே.கேவாக கெத்து காட்டுகிறார் விக்ரம். 'பேஸ்' வாய்ஸில் அவர் பேசும் ஸ்டைலும் ஈர்க்கிறது. ஆனால், அவருக்கு பத்து ட்வீட்ஸ் அளவுதான் வசனங்கள். கதையின் மையமாக, முடிவாக இருக்கும் வாசு - ஆதிரா பாத்திரங்களில் அபி ஹாசன் - அக்ஷரா ஹாசன். அக்ஷரா ஹாசன், மிகக் குறைவான நேரம் தோன்றினாலும் இளம் தாயாக மனதை கவர்கிறார். படத்தில் அதிக நேரம் தோன்றும் முக்கியமான பாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் அபி ஹாசன், நடிகர் நாசரின் மகன். நடை, பாவனை, புன்னகை ஆகியவற்றில் விக்ரம் பிரபுவை நினைவுபடுத்துகிறார். பயம், பதைபதைப்பு, தைரியம் மூன்றையும் கலந்து நடிக்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்க, அனைத்திலும் நன்றாகத் தேறுகிறார். சில இடங்களில் உணர்வு கம்மியாக இருப்பதுபோலத் தோன்றினாலும் ஒரு நல்ல அறிமுகமாகப் பதிகிறார். மலேசிய காவல்துறை அதிகாரிகளாக வரும் நடிகை லேனா, விகாஸ் உள்ளிட்ட அனைவரும் அந்த பாத்திரங்களுக்கு சிறப்பாகப் பொருந்தி நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களில் நடிகர்களின் தேர்வும் பங்களிப்பும் சிறப்பாகவே இருக்கும். இந்தப் படத்திலும் அது தொடர்கிறது.
ட்வின் டவர்ஸின் ஒரு மாடியில் இருந்து குதித்துத் தப்பிக்கும் விக்ரம்... விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்... அங்கு அவரை கொலை செய்ய முயற்சி... அவரை காப்பாற்றும் மருத்துவரின் மனைவியை கடத்திவைத்துக்கொண்டு விக்ரமை கேட்கிறார்கள்... ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் வில்லன் கும்பல், நடுவில் விக்ரமும் அபியும்... இப்படி முதல் பாதி முழுவதும் படத்தின் தளத்தை அமைப்பதில் செலவிடப்பட்டுள்ளது. பொறுமையாக சென்றாலும், அந்த பில்ட்-அப் நன்றாகவே அமைகிறது. அபி - அக்ஷரா காதலை பேசும் 'தாரமே தாரமே' பாடல் சித் ஸ்ரீராமின் குரலில் தொடங்கும்போது அரங்கமே குதூகலம் அடைகிறது. நல்ல பாடல், நல்ல இசை, நல்ல குரல். அவர்களின் காதலை அழகாக சொல்லிவிட்டு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தையும் கூட நம் மனதில் நன்றாகப் பதியவைக்கிறார்கள். விக்ரம் யார், அவரது பின்னணி என்ன என கேள்விகளும் சரியாகவே உருவாக்கப்படுகின்றன. இவை அத்தனைக்கும் அதிரடியாக, சுவாரசியமாக, விறுவிறுப்பாக பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கும்போதுதான் நமக்கு ஏமாற்றத்தை தருகிறார் ராஜேஷ்.
படம் எந்த இடத்திலும் வேகமெடுக்காமல் பொறுமையாகவே நகர்கிறது. கதாபாத்திரங்களின் மீது திடீர் திடீரென நடக்கும் தாக்குதல்கள் மட்டுமே பெரிய ட்விஸ்டாக இருக்கின்றன. படத்தில் இருக்கும் பிற ட்விஸ்டுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகக் காரணம் எந்த பாத்திரமும் முழுமையாக நமக்கு விளக்கப்படவில்லை என்பதே. நாயகன் விக்ரம், ஒரு பயிற்சி பெற்ற, பலராலும் தேடப்படுகிற, கிரிமினல் உலகில் மதிக்கப்படுகிற நபர் என்பது ஒரே ஒரு வசனத்திலும் சிறிய மாண்டேஜிலும் மட்டுமே காட்டப்படுகிறது. மற்றபடி கேகேவின் குணாதசியங்களோ, கதையோ முழுமையாக நமக்குக் கடத்தப்படவில்லை. போலீஸ் பாத்திரங்களும் அப்படியே. சரி, அனைவரது பின்னணியும் அவசியமில்லை, படம் நடக்கும் காலகட்டம் மட்டுமே முக்கியம் என்ற அணுகுமுறையை கையில் எடுப்பதாக இருந்தால், பாத்திரங்களின் பின்னணியை ரசிகர்கள் எண்ணாத அளவுக்கு விறுவிறுப்பான துரத்தல், சண்டை, திருப்பங்கள் இருந்திருக்க வேண்டும். அவையும் குறைவாக இருப்பது படத்தின் குறை. போலீசால் தேடப்படும் விக்ரம், போலீஸின் முக்கிய அலுவலகத்தில் அவ்வளவு ஃப்ரீயாக உலவ முடியுமா உள்பட ஒரு சில கேள்விகள் மனதில் எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை.
படத்தின் உருவாக்கம் மிகத் தரமாக, சிறப்பாக இருக்கிறது. சேசிங் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் தரமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்ரீனிவாஸ் ஆர் குத்தாவின் ஒளிப்பதிவில் பல படங்களில் பார்த்த மலேசியா, இன்னும் பிரம்மாண்டமாக, அழகாகவே தெரிகிறது. இருட்டு, நீல வெளிச்சம் என ஒரு ஆக்ஷன் த்ரில்லருக்கான அமைப்பை சிறப்பாக செட் செய்திருக்கிறார் ஸ்ரீனிவாஸ். ஜிப்ரானின் இசையில் தாரமே பாடல் மனதில் தொடர்ந்து ஒலிக்கிறது. படத்திலும் அது பெரும் பலமாக அமைந்துள்ளது. தீம் ம்யூசிக், பின்னணி இசை என ஒரு ஸ்டைலிஷ் படத்துக்கு சூப்பர் ஸ்டைலிஷ் இசையை கொடுத்துள்ளார் ஜிப்ரான். பிரவீன்.கே.எல். தனது படத்தொகுப்பில் படத்தை க்ரிஸ்ப்பாக்கியுள்ளார்.
பெரும் பரபரப்பு, விறுவிறுப்பு இல்லை, ஆனால் ஸ்டைலான, டீசண்டான ஆக்ஷன் படம் இந்த கடாரம் கொண்டான்.