Skip to main content

"மனித உறவுகள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா?" - தமிழ் இயக்குநர்கள் மீது எழுத்தாளர் சுரா அதிருப்தி

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ஓர் ஆண்டில் வெளியாகும் 90 சதவிகித தமிழ்ப்படங்கள் ஏன் தோல்வியடைகின்றன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படம் வெளியாகிறது என்றால் 20 படங்கள்கூட வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறும் படங்களின் விகிதம் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடருகிறது. ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 190 படங்கள் தோல்வியடைகின்றன. இந்தப் படங்கள் ஏன் தோல்வியடைகின்றன. இந்தப் படங்களெல்லாம் ஏன் எடுக்கப்படுகின்றன? நாம் வெற்றி பெற்ற படங்களை பற்றி மட்டுமே பேசுகிறோம். அந்த ஓடாத படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கதி என்ன? இந்த மாதிரியான படங்களைத் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் ரோட்டில் பிச்சை எடுத்துள்ளனர்.  பல தயாரிப்பாளர்கள் வெறும் கையை வீசிக்கொண்டு தங்கள் கிராமத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டனர். நான் 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். 200 படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய அனுபவத்தில் இதைக் கூறுகிறேன். நான் கலை படைப்பு உருவாக்கம் மற்றும் வியாபாரம் என இரண்டையும் அருகில் இருந்து பார்த்தவன். குறிப்பாக டிஜிட்டல் வடிவத்திற்கு சினிமா மாறிய பிறகு நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது.

 

யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம், இயக்கலாம், இசையமைக்கலாம், பாடலாம், நடிக்கலாம் என்ற நிலை இன்றைக்கு உள்ளது. எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டும். பீம்சிங், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாலசந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா ஆகியோரெல்லாம் முறைப்படி சினிமாவை கற்றுவந்தவர்கள். கல்யாண வீடுகளில் வீடியோ எடுப்பவர்கள் கேமரா மேன் ஆகிவிட முடியுமா? மேசையை தட்டி பாட்டு பாடிக்கொண்டிருப்பவர்கள் இசையமைப்பாளர் ஆகிவிட முடியுமா? வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கிளம்பிவந்து நான் நடிகர் என்றால் நடிகராகிவிட முடியுமா? சிவாஜி கணேசன் மாதிரியான மேதைகளை பார்த்தது தமிழ் திரையுலகம். இது மாதிரியான உரிய தகுதி இல்லாத மனிதர்களால்தான் அந்த 190 படங்கள் தோல்வியடைகின்றன. 

 

ad

 

இன்றைக்கு வரும் படங்களில் ஆவி, பேய்தான் அதிகம் உள்ளன. காஞ்சனாவும் அரண்மனையும் வெற்றிபெற்றுவிட்டால் அது மாதிரியான படங்கள்தான் எடுக்க வேண்டுமா? இந்த இரு படங்களிலேயே 100 பாகங்கள் வரும் போல. இல்லையென்றால் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பது மாதிரியான கதைகள் எடுக்கிறார்கள். வாழ்க்கையில் காதலைத் தாண்டி வேறு எதுவும் கிடையாதா? பேய் கதைகள், க்ரைம் கதைகள்தான் அதிகம் உழைப்பு தேவைப்படாத களங்கள். அதைத்தான் தமிழ் இயக்குநர்கள் இன்று மாறிமாறி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

 

இரு கோடுகள், அவள் ஒரு தொடர்கதை, சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம் என அற்புதமான படங்களை பாலச்சந்தர் சார் கொடுத்தார். அதேபோல, மகேந்திரன் சார், பாலுமகேந்திரா சார் என்ன மாதிரியான படங்கள் எடுத்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். மனித உணர்வுகளை அவ்வளவு அழகாக அவர்கள் படமாக்கினார்கள். அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு மனித உறவுகள் சிக்கலானதாக உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் மனித உறவுகளை பற்றியெல்லாம் உங்களுக்கு எதுவும் தெரியாதா? யாருடனும் நீங்கள் பழகியதே இல்லையா? மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லையா? 

 

கேரளாவில் அவ்வளவு அழகான கதைக்களங்களுடன் படங்கள் வெளியாகின்றன. நம் ஆட்களிடம் கேட்டால் இந்தத் தலைமுறைக்கு ஏற்ற மாதிரி எடுக்கிறேன் என்கிறார்கள். அப்படி என்றால் கேரளாவில் எந்தத் தலைமுறை இருக்கிறது? கடந்த 5 வருடங்களுக்குள் திரைத்துறையில் அறிமுகமான இளைஞர்கள்தான் மலையாள சினிமாவை இன்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் முடியும்போது ஏன் நம்மால் முடியவில்லை. முதலில் நிறைய வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், நாவல்கள், பிற மொழி இலக்கியங்கள் என பரந்து வாசிக்கவேண்டும். இன்றைக்கு உள்ள ஆட்களுக்கு தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கமே இல்லை. எதுவுமே தெரியாமல் சின்ன உலகத்தை உங்களுக்கென்று அமைத்துக்கொண்டு அதற்குள்ளேயே படம் எடுத்துக்கொண்டிருந்தால் படம் நிச்சயம் ஓடாது. மாறுபட்ட படங்களை இயக்க வேண்டும் என முயற்சியுங்கள். திரைத்துறை பற்றி எதுவும் தெரியாமல் சில தயாரிப்பாளர்கள் உள்ளே வந்து, சாவதற்கென்றே விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர். பல மேதைகள் அலங்கரித்த பட உலகம் இந்திய பட உலகம். அதைப் புரிந்துகொண்டு உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று வெளியாகும் 90 சதவிகித படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன என்ற வேதனையில் இதைக் கூறுகிறேன்".  

 

 

சார்ந்த செய்திகள்