விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்திருக்கும் படம் 'ராட்சசன்'. திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம் குமார் இயக்கியுள்ளார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது.... "முண்டாசுப்பட்டி படத்தின்போதே, இயக்குனர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் கதை எழுதிட்டு இருக்கேன், கொஞ்சம் நேரம் ஆகும் என்றார். பின் அந்த கதை உங்களுக்கு செட் ஆகாது என்றார், எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையை சொன்னார். இதை நீங்கள் முன்னாடியே செய்திருக்கலாம் என்றேன். கதையில் ஆக்ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்ஷன் செட் ஆகாது என்று கூறினேன். பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோது தான், இது எனக்கான கதை போல என்ற உணர்வு எழுந்தது.
கதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும். அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று. அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நன்றாக நடித்துக் கொடுத்தார். இந்த படத்தை பார்த்த பலரும் நான் நன்றாக நடித்திருப்பதாகவும், படம் நன்றாக வந்திருப்பதாகவும் கூறினார். அதற்கு இயக்குனர் ராமிற்கு நன்றி. என்னுடன் படம் பண்ணதற்கும் நன்றி. ராமிடம் அடுத்த படமும் என்னோடு தான் பண்ண வேண்டும் என்றேன். கண்டிப்பாக செய்வோம் என்றார். அனால் அவர் அடுத்து நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இருந்தாலும் ராம் என்னுடன் மீண்டும் கண்டிப்பாக இணைந்து படம் இயக்குவார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.
விஷ்ணு விஷால் பேசிய வீடியோவிற்கு கீழே கிளிக் செய்யவும்