‘களவாணி’, 'களவாணி 2', ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான விமர் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் கோபி என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "கடந்த 2016 ஆம் ஆண்டு மன்னர் வகையறா படத்தை தயாரித்து நடித்ததாகவும், அதற்கு நீங்கள் பணம் தந்து உதவ வேண்டும் எனக் கோரினர். மேலும் படத்தின் லாபத்திற்கான பங்கையும் தருவதாக உறுதியளித்தார். இதனை நம்பி நடிகர் விமலிடம் ரூ. 5 கோடி கொடுத்தேன். வாங்கிய பணத்தை வெளியீட்டுக்கு முன்பாகவே கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். அத்தோடு இது குறித்து கேள்வி கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாருக்கு பதிலடியாக விமல் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், "மன்னர் வகையறா படத்தை பூபதி பாண்டியன் என்பவர் இயக்கினார். இப்படத்தை கணேசன் தயாரித்திருந்தார். ஆனால் அவரால் இப்படத்திற்கு செலவு செய்ய முடியவில்லை என்பதால் இயக்குநர் பூபதி பாண்டியன் சிங்காரவேலன் என்பவரை அறிமுகம் செய்தார். அதன்பின் சிங்காரவேலன் அவரது நண்பர் கோபியிடம் ரூ.3 கோடி பணம் வாங்கி மன்னர் வகையறா படத்திற்கு செலவு செய்தார். இதையடுத்து இப்படத்தின் மூலம் ரூ. 8 கோடி சம்பாதித்தார். ஆனால் தற்போது கோபி என் மீது ரூ. 5 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளார். இந்த மோசடி புகாருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எனது பெயருக்கு அவதூறு பரப்பும் வகையிலும், என்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இப்புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விமல், "சிங்காரவேலன் என்பவர்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு. அவர் எனக்கு எந்த பணமும் தரவில்லை. அவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து என்னை தொடர்ந்து மோசடி செய்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.