கடந்த வருடம் சாமி 2 படம் விக்ரம் நடிப்பில் வெளியானது. ஆனால், இந்த படம் முந்தைய பாகத்தை போல சிறப்பாக இல்லை என்பதால் விக்ரமின் தோல்வி படங்கள் லிஸ்டில் இந்த படமும் சேர்ந்தது. இதனையடுத்து விக்ரம் எந்தமாதிரி படங்களில் நடிக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாவீர் கர்ணா என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். திடீரென கமல் நடிக்க இருந்த ஒரு படம் என்று சொல்லப்பட்ட கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம்தான் ஹீரோ என்றும் அதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கடந்த வருடம் வெளியானது.
தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா கடாரம் கொண்டான் படத்தை இயக்க, விக்ரமுடன் அக்ஷரா ஹாசன், நாசர் மகன் அபி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஜிப்ரான் இசயமைத்திருக்கிறார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.
தற்போது இந்த படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஜூலை 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது அரசியல் மேடைகளில் பிஸியாக இருக்கும் கமல், பல மாதங்களுக்கு பின் சினிமா மேடை ஒன்றில் பேசியுள்ளார். அப்போது இந்த படத்தின் ஹீரோவான விக்ரம் பேசியதாவது,
"ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. தமிழ் படம் போடும் அன்னைக்கு மட்டும் ஒவ்வொரு ஹவுஸ் டீம் கேப்டனும் போய் படம் வாங்கிட்டு வரலாம். நான் வாழ்வே மாயம் படம் வாங்கிட்டு வந்தேன், மற்ற ஹவுஸ் டீம் கேப்டன்களும் கமல் சார் படம்தான் வாங்கிட்டு வந்தாங்க. இது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்துச்சு. நாங்கள் பேசி வைத்துக்கொண்டு அப்படி செய்யவில்லை. அவரின் படங்கள் எங்களுக்கு அப்படி பிடித்திருந்ததுதான் காரணம்.
அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் கேள்வி எழுப்புவார்கள். நீங்கள் எந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று. அதற்கு பலரிடமும் நான் சொல்லும் ஒரே பதில், பதினாறு வயதினிலே படத்தைதான் ரீமேக் செய்ய வேண்டும் என்று ஆசை என்பேன். ஆனால், அவரைப்போல் என்னால் நடிக்க முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன்.
இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணியிருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். டப்பிங் பேசும்போது படத்தை ரீ ரெக்காடிங்கோட பார்த்தேன், மிகவும் சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இநத்ப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்றார்