
விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு எதிராக படத்தில் முதலீடு செய்த மும்பையைச் சேர்ந்த நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 27ஆம் தேதி காலை முதல் படம் வெளியாகவில்லை. பின்பு அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து அன்று மாலை முதல் திரையிடப்பட்டு வருகிறது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் படத்திற்கு கிடைத்த வரவேற்பை விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இதுவரை இப்படம் உலகம் முழுவதும் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, “‘ஒரே ஒரு வாழ்க்க... வரலாறா வாழ்ந்துரு...’ அப்படின்னு ஒருத்தன் ஈஸியா சொல்லிட்டு போய்ட்டான்.(படத்தில் விக்ரம் இந்த டயலாக்கை பேசியிருப்பார்). ஆனா, இந்த வாழ்க்கை இருக்கே, ஹப்பா... எதாவது ஒரு பிரச்னைய கொடுத்துட்டே இருக்கு. உதாரணத்துக்கு வீர தீர சூரன் படத்த ரிலீஸுக்கு முன்பு பார்த்தவங்க பிளாக்பஸ்டரா மாற போது, புதுசா இருக்கு, மாஸா இருக்கு, இந்த வருஷத்தோட மிகப்பெரிய படம்ன்னு எங்களை உற்சாகப்படுத்துனாங்க.
ஆனா ஹைகோர்ட் நாளு வாரத்துக்கு பிரச்சனைய சரி செய்யலைன்னா படத்த ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு உத்தரவு போட்டுச்சு. இந்த படத்த ரசிகர்கள்கிட்ட சேர்த்துடனும்னு எல்லாருமே உழைப்ப போட்டோம். அது நடக்காம போனது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்போ யோசிச்சேன், சினிமாவுக்காக நாம எது வேணாலும் பண்ணவும் தயார். அதனால இதெல்லாம் ஒரு மேட்டரான்னு என்னால முடிஞ்சத பண்ணேன். அதுனால படம் வெளியாச்சு.
ஒரு படம் முதல் ஷோ கேன்சல் ஆனா அவ்வளவுதான். ஆனா எங்க படம் இரண்டு ஷோ கேன்சல் ஆகி ஈவ்னிங் ஷோ தான் ரிலீஸ் ஆச்சு. தியேட்டருக்கு ரசிகர்கள் வந்து பார்த்து ரிலீஸுக்கு முன்னாடி என்ன சொன்னாங்களோ அத விட அதிகமா பாராட்டுனாங்க. குறிப்பா ஃபேமிலி ஆடியன்ஸ். நல்ல என்ஜாய் பண்ணோமுன்னு சொன்னாங்க. அத கேட்குறதுக்கே அவ்ளோ சந்தோஷமா இருக்கு. படம் இப்போ பெரிய வெற்றியை நோக்கி போய்கிட்டு இருக்கு. அதை உறுதியா சொல்லலாம். எல்லாருக்கும் நன்றி. இந்த படம் உங்களுக்காக பண்ண படம். நாங்க நினைச்சது நடந்திருச்சு. சேர வேண்டிய இடத்துல சேர்ந்திடுச்சு. படம் பார்த்தவங்க என்ஜாய் பண்ணியிருப்பீங்க. பார்க்காதவங்க பார்ப்பீங்கன்னு நம்புறன்” என்றார்.