
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எல்2; எம்புரான்’ கடந்த மாதம் 27ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்த இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியிருந்தார். இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடியும் 5 நாட்களில் ரூ.200 கோடியும் வசூலை ஈட்டியது.
இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி ஆதரவாளர்கள் கூறினர். மேலும் வில்லனுக்கு பஜ்ரங் தல் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கியின் பெயரை குறிக்கும் வகையில் பல்ராஜ் பஜ்ரங்கி என இருப்பதாக சுட்டிக்காட்டினர். இதனால் சர்ச்சை ஆன நிலையில் இது தொடர்பாக மோகன்லால் வருத்தம் தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனிடையே கேரள முதல்வர் பின்ராயி விஜயன் படக்குழுவினருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் படத்திற்கு வர சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படக்குழு மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி இரண்டு நிமிடம் 8 நொடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் வில்லன் பெயர் பல்ராஜ் பஜ்ரங்கி என்பதற்கு பதில் பல்தேவ் என மாற்றப்பட்டுள்ளது. அதோடு படத்தின் இறுதி காட்சியில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில் அது நீக்கப்பட்டுள்ளது.
இது போக படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் போராட்டம் நடத்தியது. இதனிடையே ம.தி.மு.க. நிறுவனர் வைகோ, பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மாணியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் அதில் எம்புரான் ப்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்பு பேசிய அமைச்சர் துரை முருகன், படத்தை பார்க்கவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் தற்போது நீக்கப்பட்டு தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது” என விளக்கமளித்தார்.